உணவை விளைவிப்பவர்கள் வறுமையில் உழலும் முரண் - இரா. சிந்தன்
2 Nov 2026, 9:24 pm

உணவை விளைவிப்பவர்கள் வறுமையில் உழலும் முரண் - இரா. சிந்தன்

உலகில் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடும் துறை உணவுத்துறை. உற்பத்தி முதல் நுகர்வு வரை சுமார் 140 கோடி பேர், அதாவது உலக உழைப்பாளிகளில் ஐந்தில் இருவர், இதில் உழைக்கிறார்கள். அவர்களின் நிலை குறித்து சர்வதேச நீடித்த உணவு அமைப்புகள் நிபுணர் குழு (IPES-Food) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, சுரண்டலின் தீவிரத்தை அம்பலப்படுத்துகிறது. உலகுக்கு உணவளிப்பவர்களின் தட்டு காலியாகவே இருக்கிறது என்பதை அதன் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

வறுமைக் கூலியில்41.6 கோடி பேர்

சுமார் 41.6 கோடி உணவுத் தொழிலாளர்கள், அதாவது 30 சதவீதம் பேர், வாழ்வதற்குப் போதுமான ஊதியம் பெறுவதில்லை. விவசாயத்தில் 90 சதவீதமும், விவசாயம் அல்லாத உணவுப் பணிகளில் 60 முதல் 80 சதவீதமும் முறைசாராப் பணிகள். இதனால் வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை மறுக்கப்படுகின்றன. விவசாயத்தில் மட்டும் 21 லட்சம் பேர் கட்டாய உழைப்பில் உள்ளனர். உலகக் குழந்தைத் தொழிலாளர்களில் 61 சதவீதம், அதாவது 8.3 கோடிக்கும் மேற்பட்டோர், விவசாயத்தில் உழைக்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றவர்களைவிட மூன்று மடங்கு அதிகமாகக் கட்டாய உழைப்பில் சிக்குகின்றனர்; உரிய ஊதியம் கிடைக்காததால் ஆண்டுதோறும் சுமார் 3,100 கோடி டாலர் இழக்கின்றனர்.

இந்தியாவிலும் இதே முரண்

இந்திய நாட்டின் தொழிலாளர்களில் 43.5 சதவீதம் பேர் விவசாயத்தைச் சார்ந்துள்ளனர்; ஆனால் மொத்த மதிப்புக் கூட்டலில் விவசாயத்தின் பங்கு 14.7 சதவீதம் மட்டுமே. 2022–23 விவசாயக் கூலி விவரங்களின்படி, இந்திய அளவிலேயே ஆண்களைவிடப் பெண்களுக்குக் கூலி குறைவு. தமிழ்நாட்டில் ஆண்களின் கூலி இந்தியச் சராசரியைவிட அதிகம்; பெண்களின் கூலியோ இந்தியச் சராசரியிலேயே நிற்கிறது, ஆண்களின் கூலியில் பாதிக்கும் குறைவு. உணவை விளைவிக்கும் கைகளுக்கு, அதிலும் பெண்களின் கைகளுக்கு, கிடைப்பது மிகக் குறைவு.

லாபம் யாருக்கு?

உணவுச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் மதிப்பை உருவாக்குவது தொழிலாளர்களின் உழைப்பு. ஆனால் கொள்முதல், பதப்படுத்துதல், விநியோகம், சில்லறை விற்பனையைக் கட்டுப்படுத்தும் பெருநிறுவனங்கள், உழைப்பை மலிவாக வைத்து லாபத்தைக் குவிக்கின்றன. விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிக்க, அந்தச் சுமை விவசாயத் தொழிலாளர்களின் கூலி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் அனைத்திலும் எதிரொலிக்கிறது. அவர்களின் கூட்டுப் பேர வலிமையும் கடுமையாகச் சரிந்துள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலைக்குச் (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரும் போராட்டம் இதை எதிர்கொள்வதற்கான முக்கியத் தொடக்கப்புள்ளி. தில்லி விவசாயிகள் போராட்டத்தின் முடிவில் மோடி அரசு அளித்த உறுதிமொழிப்படி 2022இல் அமைக்கப்பட்ட குழுவின் பணிவரம்பில் சட்டப்பூர்வ உத்தரவாதம் இடம்பெறவில்லை. ஓராண்டுக்கும் மேலாகப் போராடிய விவசாயிகளின் இந்த முக்கியக் கோரிக்கை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

இன்றைய உலகின் பிரச்சனை உணவு உற்பத்தி மட்டுமல்ல; உணவை விளைவிக்கும் கோடிக்கணக்கானோரே வறுமையில் வாடுவதுதான் அடிப்படை முரண். எனவே, மக்களுக்கு மலிவான உணவு மட்டுமல்ல; அதை விளைவிப்போருக்கு நியாயமான கூலி, விவசாயிகளுக்கு ஆதார விலை, அனைவருக்கும் கண்ணியமான வேலை நிலைமைகள் — இவையும் சேர்ந்ததே உண்மையான உணவுப் பாதுகாப்பு.