சென்னை விரைவு செய்திகள்
11 Mar 2026, 4:32 pm

திண்டிவனம் அருகே புதுச்சேரி மதுபானம் கடத்தியவர் கைது

விழுப்புரம், மார்ச் 11- திண்டிவனம் அருகே புதுச்சேரி மாநில மதுபானம் எடுத்து வந்த ஒருவரைப் போலீசார் கைது செய்து, 130 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசு மற்றும் காவலர்கள் தலைமையில் ரோஷனை முருகன் கோவில் அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரியிலிருந்து மதுபானங்கள் விற்பனைக்காக எடுத்துச் செல்வது தெரியவந்தது. மதுபானங்கள் கடத்தி வந்தவரைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் திண்டிவனம் அய்யந்தோப்பு முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 33) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து 180 மி.லி அளவு கொண்ட 130 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் விறகு விலை உயர்வு

கடலூர், மார்ச் 11- எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டால், தடையின்றி உணவு சமைத்து விநியோகம் செய்யும் வகையில் சில ஓட்டல் உரிமையாளர்கள், முன்கூட்டியே விறகு வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கி உள்ளனர். கடலூரில் உள்ள மரக்கடைகளுக்குச் சென்று ஓட்டல் தொழிலாளர்கள் விறகு வாங்கத் தொடங்கினர். சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விறகு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று வரை 25 கிலோ எடை கொண்ட ஒரு குண்டு விறகு ரூ.350-க்கு விற்பனையான நிலையில், திடீரென விலை உயர்ந்து ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் விலை உயர்வைப் பொருட்படுத்தாமல் விறகுகளை வாங்கிச் செல்கின்றனர்.

எஸ்.சி, எஸ்.டியினருக்கு விமான முன்பதிவு ஆளுமை பயிற்சி

விழுப்புரம், மார்ச் 11- விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ள விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் சேர குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ள, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி 3 மாதங்கள் நடக்கிறது. தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.