விளையாட்டு
7 May 2026, 10:24 pm

அமெரிக்காவின் சட்டப்படி டிக்கெட்டுகளை அதிக விலைக்கு மறுவிற்பனை செய்ய அனுமதி உண்டாம்! பிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ உளறல்

இந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாட்டில் கூட்டாக தொடங்குகிறது.

இந்த தொடருக்கான டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதில் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விலை வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்திய மதிப்பில் ரூ.18 கோடிக்கு மேல் (ஒரு சில கேலரி மட்டும்) விற்பனை செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அடாவடி டிக்கெட் வசூலுக்கு ஐரோப்பிய கால்பந்து ரசிகர்கள் அமைப்பு, டிக்கெட் விலையேற்றத்தை மிரட்டிப் பணம் பறிக்கும் செயல் ; மிகப்பெரிய துரோகம் என்று வர்ணித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், டிக்கெட் விற்பனைக்கு கண்டனம், விமர்சனங்கள் எழுந்து வருவதால், சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜியானி இன்பான்டினோ புதனன்று மழுப்பலாக விளக்கம் அளித்துள்ளார்.

அதில்,”யாராவது இறுதிப் போட்டி டிக்கெட்டை 2 மில்லியன் டாலருக்கு (ரூ.18 கோடிக்கு மேல்) விற்றால், அதன் அசல் விலை அது என்று அர்த்தமல்ல. அதேபோல் யாராவது அந்த விலைக்கு வாங்குவார்கள் என்றும் அர்த்தமல்ல.

யாராவது அவ்வளவு விலைக்கு டிக்கெட் வாங்கினால், அவருக்கு நானே நேரில் சென்று ஹாட் டாக், கோக் வழங்கி உபசரிப்பேன். நாங்கள் உலகின் மிக வளர்ந்த பொழுதுபோக்குச் சந்தையில் (அமெரிக்கா) இருக்கிறோம்.

எனவே சந்தை விலையையே நாங்கள் பயன்படுத்த வேண்டும்.

அமெரிக்காவின் சட்டப்படி டிக்கெட்டுகளை அதிக விலைக்கு மறுவிற்பனை செய்ய அனுமதி உண்டு” என எதுவும் புரிதல் இல்லாமல் பேசினார்.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற 22ஆவது சீசன் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி டிக்கெட்டின் அதிகபட்ச அசல் விலை சுமார் 1,600 டாலர் (1,50,620) ஆகும்.

ஆனால் 2026 உலகக்கோப்பையில் இது சுமார் 11,000 டாலர் (சுமார் ரூ.10,00,00) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது அசல் விலை தான். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு, டிக்கெட் விற்பனை ஆர்வத்தால் தற்போது இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விலை 2 மில்லியன் டாலருக்கு (ரூ.18 கோடிக்கு மேல்) விற்கப்பட்டு வருகிறது.

இதனால் தான் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போல, சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜியானி இன்பான்டினோ விளக்கம் என்ற பெயரில் உளறிக்கொட்டி வருகிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூலை 19 அன்று இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் : இன்றைய ஆட்டம்

தில்லி - கொல்கத்தா

இடம் : தில்லி மைதானம் / நேரம் : இரவு 7:30 மணி

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)