தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் பிடல் காஸ்ட்ரோ நமக்கு வழங்கிய கொடை - பேராசிரியர் விஜய் பிரசாத்

12 Aug 2026, 9:09 pm
தோழர் பிடல் காஸ்ட்ரோ நமக்கு வழங்கிய கொடை -  பேராசிரியர் விஜய் பிரசாத்

தோழர் பிடல் காஸ்ட்ரோ நமக்கு வழங்கிய கொடை - பேராசிரியர் விஜய் பிரசாத்

நான் முதன்முதலில் தோழர் பிடல் காஸ்ட்ரோவைப் பார்த்தபோது எனக்குப் பதினாறு வயது. அது 1983-ஆம் ஆண்டு.அணிசேரா இயக்கத்தின் (NAM) ஏழாவது உச்சிமாநாட்டின் தலைவராகப் பொறுப்பிலிருந்த அவர், அதன்பொறுப்பை அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் ஒப்படைப்பதற்காக இந்தியா வந்திருந்தார். மாநாட்டுமையத்தில் காஸ்ட்ரோவும் இந்திரா காந்தியும்சந்தித்தபோது, அனைத்து ராஜீய நெறிமுறைகளையும் கடந்து, அவரை அன்போடு ஆரத்தழுவிக் கொண்டார். காஸ்ட்ரோ இந்தியாவை மிகவும் நேசித்தார். அதனைப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டில்அவரிடமிருந்தே நான் நேரடியாகத் தெரிந்துகொண்டேன். “நான் இந்தியாவிற்குப் பலமுறை சென்றுள்ளேன், ஆனால் நீண்ட காலம் தங்கியதில்லை” என்று அவர் என்னிடம் கூறினார்.

அவரைப் பச்சை நிற ராணுவச் சீருடையில் பார்த்தபோது, ஒரு கியூப இளைஞன் சியர்ரா மேஸ்ட்ரா மலையிலிருந்து ஹவானாவை நோக்கி அணிவகுத்துச் சென்றதை என் நினைவுகள் பிரதிபலித்தன. தன்மீதுதொடுக்கப்பட்ட எண்ணற்ற கொலை முயற்சிகளிலிருந்து தப்பிய அவர், தன் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் போர்க்குணத்தின் வடிவமாகத் திகழ்ந்தார். மக்கள் அனைவரும் அவரைச் சுற்றி எப்போதும்மகிழ்ச்சியாக இருந்தனர்; ஆட்டோகிராப் வாங்க அவரை மொய்த்துக் கொண்டனர்.

சவால்களை எதிர்கொள்ளும் கியூபப் புரட்சியின் பாடம்

2001-ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற இனவெறிக்கு எதிரான உலக மாநாட்டில், அரசாங்கமற்றும் அரசு சாரா அமைப்புகளின் அரங்குகள் இரண்டிலும் எழுந்து நின்று கைதட்டி கௌரவிக்கப்பட்ட ஒரே உலகத் தலைவர் பிடல் காஸ்ட்ரோ மட்டுமே. “மனிதஉரிமைகள்” மற்றும் “உலகமயமாக்கல்” போன்ற சொற்கள் பொருளற்றதாக மாறி, உலக தெற்குப்பகுதிநாடுகளின் உழைக்கும் மக்கள் கடன் சுமையில் தவித்த காலத்தில், மற்ற உலகத் தலைவர்கள் உதட்டளவு வார்த்தைகளைப் பேசியபோது, காஸ்ட்ரோ அவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட எதிர்புள்ளியாகத் திகழ்ந்தார். அவர் வெறும் அலங்காரங்களுக்காக அல்லாமல், மக்களின் உண்மையான மொழியைப் பேசியதால் நாங்கள் அவரை கைதட்டிவரவேற்றோம்.

இதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பாக 1999இல், கியூபப் புரட்சியைப் பாதுகாப்பதற்கான குழுக்களின் (CDR) மாநாட்டில் காஸ்ட்ரோ உரையாற்றினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் விதிக்கப்பட்ட கொடூரமான பொருளாதாரத் தடைகளின் எல்லைகளைச் சுட்டிக்காட்டிய அதே வேளையில், கியூப மக்களுக்குச் சிறந்த வாழ்க்கையை வழங்க அந்த வரம்புகளைத்தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். “பொருளாதாரத் தடை நமது சாதனைகளைத் தடுத்துவிடவில்லை” என்று காஸ்ட்ரோ கூறினார்.

கியூபப் புரட்சி சாதித்த முக்கிய சாதனைகள்:

l அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி,வேலை இல்லாத நிலையை ஒழித்தது.

l சூதாட்டம், போதைப்பொருள்கள், பாலியல் பொருளீட்டல் மற்றும் எழுத்தறிவின்மையை முற்றிலும் ஒழித்தது.

l அனைவரும் குறைந்தபட்சம் 9-ஆம் வகுப்பு வரையிலான கல்வியைப் பெறுவதை உறுதி செய்தது.

l வளர்ந்து வரும் நாடுகளிலேயே மிகச்சிறந்த பொது சுகாதாரப் பராமரிப்பை கியூபாவில் உருவாக்கியது.

அமெரிக்காவின் சட்டவிரோதப் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்படாத பிற மூன்றாம் உலகநாடுகளால் கூட சாதிக்க முடியாத பல முன்னேற்றங்களை கியூபா சாதித்துக் காட்டியது. “பிரச்சனைகள் நம்மைக் கடந்து செல்வதைத் தடுத்துவிட முடியாது” என்றகாஸ்ட்ரோவின் வரிகள் மூன்றாம் உலக நாடுகளுக்கான மிக முக்கியமான பாடமாகும்.

சோசலிசக் கட்டுமானமும் அத்தியாவசிய வாழ்வியல் சூழலும்

சோசலிசத்தைக் கட்டியெழுப்புவது என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி இல்லாத நிலையிலும், எத்தகையகடினமான சூழலிலும் சோசலிசத்தை நோக்கிய அர்ப்பணிப்போடு செயல்படுவதாகும். லெனின், மாவோ அல்லதுகாஸ்ட்ரோ ஆகிய மூவருமே கற்பனாவாத சோசலிஸ்டுகள் (Utopian Socialists) அல்லர்.வறுமையிலிருந்து நேரடியாகச்செல்வத்திற்குப் பாய்ந்து செல்ல முடியும் என்று நம்பியவர்களை அவர்கள்நிராகரித்தனர். காரல் மார்க்ஸின்‘கோத்தா திட்டத்தின் மீதான விமர்சனம்’ (Critique of the Gotha Programme - 1875)நூலைஅவர்கள் ஆழமாகக்கற்றறிந்திருந்தனர்.

போதுமான உபரியை உருவாக்க முடியாத உற்பத்திச் சக்திகளைக் கொண்ட ஒரு சமூகம், தானாகவே மனித விடுதலையை உருவாக்கிவிட முடியாது.முதலாளித்துவ அமைப்பில் உள்ள சொத்துரிமைஎன்பது அனைவருக்கும் ‘சொத்து வைத்திருப்பதற்கான சுதந்திரத்தை’ மட்டுமே தருகிறதே தவிர, ‘சொத்து இல்லாததன் கொடுங்கோன்மையிலிருந்துசுதந்திரத்தை’ தருவதில்லை. தேவைப்படும் மண்டலத்திலிருந்து (Realm of Necessity) சுதந்திரத்தின் மண்டலத்திற்கு (Realm of Freedom) நகரும் போது மட்டுமே சோசலிச இலட்சியங்களை முழுமையாக அடைய முடியும்.

காலனித்துவ மற்றும் நவதாராளவாதச் சூழலில் முதலாளித்துவத்தின் சமமற்ற வளர்ச்சி ஏழை நாடுகளின்உற்பத்திச் சக்திகளை வளர்க்க அனுமதிக்காது என்பதை லெனின், மாவோ மற்றும் காஸ்ட்ரோ ஆகிய மூவரும் உணர்ந்திருந்தனர். எனவே, தேசியவிடுதலை இயக்கங்கள் இரு வரலாற்றுப் பணிகளை ஒரே நேரத்தில் திறம்படச் செய்ய வேண்டியிருந்தது:

1. உற்பத்திச் சக்திகளைக் கட்டியெழுப்புவது (முதலாளித்துவ வர்க்கத்தின் பணி).

2. உற்பத்திச் சாதனங்களைச் சமூகமயமாக்குவது (சோசலிசத் திட்டத்தின் பணி).மூன்றாம் உலக நாடுகளில், முதலாளித்துவ வர்க்கம் மற்றும் பாட்டாளி வர்க்கம் ஆகிய இரு தரப்பின்,பணிகளையும் சோசலிச சக்திகளே கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் செய்ய வேண்டியிருந்தது.

இனவெறிக்கு எதிரான போராட்டமும் நடைமுறை உத்திகளும்

2001 டர்பன் மாநாட்டின் போது, பொதுவாக இனவாதம் மற்றும் கியூபப் புரட்சியில் இனம், பாலினம் சார்ந்த தடைகளை உடைப்பதில் உள்ள சவால்கள் குறித்து தோழர்காஸ்ட்ரோவிடம் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கியூபப் புரட்சி பொது இடங்களைப் பகுப்பாய்வுசெய்து இனப்பாகுபாட்டை அகற்றிய போதிலும், சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த இனவெறியை முற்றிலுமாக ஒழிக்க ஆரம்ப பத்தாண்டுகளில் போதிய நடவடிக்கைகள்எடுக்கப்படவில்லை என்பதை காஸ்ட்ரோ நேர்மையோடு ஒப்புக்கொண்டார். உண்மைகளை மறுப்பது முன்னேற்றத்திற்குத் தடையாகும் என்பதை அவர் தெளிவாகநம்பினார்.

“இனவெறி, இனப்பாகுபாடு மற்றும் அந்நியர் மீதான வெறுப்பு ஆகியவை மனிதர்களின் இயற்கையான எதிர்வினைகள் அல்ல; மாறாக அவை போர்கள், ராணுவ வெற்றிகள், அடிமைத்தனம் மற்றும்உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றிலிருந்து நேரடியாகப்பிறந்த சமூக, கலாச்சார மற்றும் அரசியல் நிகழ்வுகளாகும்” என்று காஸ்ட்ரோ விளக்கினார். எனவே, சமூக அமைப்பை மாற்றாமல் இனவெறியை ஒழிக்கமுடியாது; முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி எறிந்து மாற்றுவதே உண்மையான தீர்வாகும்.

காஸ்ட்ரோ போன்ற ஒரு புரட்சியாளர் நமக்கு ஒரு சில கருத்துக்களை மட்டும் வழங்குவதில்லை. அவர்ஒருபுரட்சியாளரின் முழுமையான முன்னுதாரணத்தை நமக்கு வழங்குகிறார். ஹோ சி மின் சுட்டிக்காட்டியது போல, ஒரு புரட்சியாளரைப் பின்பற்றிப் பணியாற்றுவது அத்தியாவசியமானது.

விவரங்களின் அறிவியல் மற்றும் உணவு இறையாண்மை

காஸ்ட்ரோவின் உரைகளைக் கவனித்தால், கியூபாவின் ஒவ்வொரு மாவட்டத்தின் பயிர் உற்பத்திப்பதிவுகள் வரை அனைத்து நிர்வாக விவரங்களையும் அவர் மக்களுக்கு விளக்குவதைக் காண முடியும். சோசலிசம் என்பது வெறும் தத்துவமல்ல; அது விவரங்களைக் கவனமாகப் பராமரிக்கும் அறிவியலாகும். உற்பத்திச்சக்திகளைக் கட்டியெழுப்புவதில் உள்ளபின்னடைவுகளை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் மக்களிடம் பகிர்ந்து கொள்வது, தோல்விகளை வெற்றிகளாக மாற்ற மக்கள் பங்கேற்பிற்கான கதவைத்திறப்பதாகும்.

வியட்நாமின் தலைவர் ஹோ சி மின் மற்றும் பிரதமர் பாம் வான் டோங் ஆகியோரின் நிர்வாக அணுகுமுறையிலும் இதைக் காணலாம். சோசலிசத்தைக் கட்டுவதுஎன்பது கொள்கைகளைச் சோதித்து, மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளான சுகாதாரம், கல்வி, உணவு, ருப்பிடம் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றிற்குத் தீர்வு காண்பதாகும்.

காஸ்ட்ரோவின் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் ‘முருங்கை’ (Moringa) தாவரத்தின் மீதான அவரது ஆர்வம் மிகமுக்கியமானது. தமிழ் வார்த்தையான ‘முருங்கை’ என்பதிலிருந்து உருவான இந்தத் தாவரம், கியூபாவின் உணவுஇறையாண்மைக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது. 2010 ஹைட்டி நிலநடுக்கத்திற்குப் பிறகு, உணவின்ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்ய கியூபாவின் ஃபின்லே நிறுவனத்தின் நிபுணர்களை இந்தியாவுக்குஅனுப்பி முருங்கை விதைகளைக் கொண்டு வரச் செய்தார். இன்று கியூபாவில் பல இடங்களில் முருங்கை பதப்படுத்தும் ஆலைகள் செயல்பட்டு, மக்களின் சுகாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்து வருகின்றன.

“பிரச்சனைகள் நம்மைக் கடந்து செல்வதைத் தடுத்துவிட முடியாது; நாம் எவ்வாறாயினும் சோசலிசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். வேறு வழியில்லை!” என்ற பிடல் காஸ்ட்ரோவின் வரிகள், கியூபாவிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஒரு வழிகாட்டி வெளிச்சமாகும். ஏகாதிபத்தியத்தின்தடைகளையும் மீறி உழைக்கும் மக்களின் இறையாண்மையையும் மனித கண்ணியத்தையும் கட்டியெழுப்புவதே தோழர் காஸ்ட்ரோ நமக்கு விட்டுச் சென்ற மிகப்பெரிய கொடையாகும்.

தமிழில் சுருக்கம் : எஸ்பிஆர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.