குடிமைச் சமூகத்தை நசுக்கும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத் திருத்தம்! - பி.வில்சன் எம்.பி
16 Jun 2026, 10:55 pm

குடிமைச் சமூகத்தை நசுக்கும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத் திருத்தம்! - பி.வில்சன் எம்.பி

2026 மார்ச் 25 அன்று மக்களவை யில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்றுச் சட்டத் திருத்த மசோதா 2026’ (FCRA Bill, 2026) என்பது வெறும் சாதாரண ஒழுங்குமுறை நடவடிக்கை அல்ல. வெளிப்படைத்தன்மை, தேசியப் பாது காப்பு என்ற பெயரில் முன்வைக்கப்பட்டாலும், இது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், கல்வி மற்றும் மத நிறு வனங்கள் மீது விரிவான அரசுக் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. ஏற்கெனவே, 2020ஆம் ஆண்டு திருத்தங் கள் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) புது தில்லி கிளையில் மட்டுமே கணக்கு, நிர்வாகச் செலவினங்கள் 20 சதவீதமாகக் குறைப்பு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2026 புதிய மசோதாவோ, மேற்பார்வை என்ற பெயரில் நிர்வாகத் துறையின் அதிகார அத்துமீறலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் புதிய சட்டக் கட்டமைப்பு

இந்த புதிய மசோதாவில், முந்தைய பிரிவு 15 நீக்கப்பட்டு, ‘Chapter IIIA’ என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எந்தவொரு இழப்பீடும் இன்றி நிறுவனங்களின் சொத்துக்களை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் எளிதாக எடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் முன்மொழியப்பட்டுள்ள பிரிவு 14B ஆனது, ஒரு நிறுவனத்தின் புதுப்பித்தல் விண்ணப்பம் மறுக்கப்பட்டாலோ, அல்லது உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறினாலோ தன்னுடைய பதிவை அந்த நிறுவனம் இழக்க நேரிடும் எனக்கூறுகிறது. இதன் மூலம், வெறும் நடைமுறைத் தாமதங்களுக்காக ஒரு நிறுவனம் தனது செயல்பாட்டை இழக்க நேரிடும்.

நீதிமன்ற விசாரணையின்றி பறிக்கப்படும் சொத்துக்கள்

மசோதாவின் மிக ஆபத்தான பகுதி பிரிவு 16A ஆகும். இதன்படி ஒரு அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டாலோ அல்லது நிறுத்தப் பட்டதாகக் கருதப்பட்டாலோ, எந்தவிதமான முந்தைய நீதிமன்றப் பரிசீலனையோ அல்லது சுதந்திரமான நீதித்துறை முடிவுகளோ இல்லா மல், அந்த நிறுவனத்தின் நன்கொடைகளும் சொத்துக்களும் “பொது நலன்” என்ற பெயரில் அரசு வசம் தானாகவே சென்றுவிடும். அதிகாரியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட இந்தச் சொத்தை நிர்வகிக்கவோ, மாற்றவோ அல்லது விற்பனை செய்து அர சாங்கத்தின் கருவூலத்திற்கு வரவு வைக்கவோ இந்த மசோதா அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

சமூக உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் மாபெரும் ஆபத்து

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பெறப்பட்ட நிதியால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் இதன் வரம்பிற்குள் கொண்டுவரப்படுகின்றன. இதனால், பல பத்தாண்டுகளாக உருவாக்கப்பட்ட பள்ளி கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆதரவற் றோர் இல்லங்கள் மற்றும் மசூதிகள், கோவில் கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பறிமுதல் செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் குறிப்பிட்ட அதிகாரிக்கு (Designated Authority) வழங்கப் பட்டுள்ள அதிகாரங்கள் மிகவும் விரிவான வை. தெளிவாக வரையறுக்கப்படாத “பொது நலன்” என்ற பெயரில் அவற்றின் செயல் பாடுகளையே மாற்றியமைக்க நிர்வாகத் துறைக்கு பரந்த அளவிலான விருப்ப அதிகாரம் வழங்கப்படுகிறது. ஒரு நிறுவனம் நிர்ணயிக்கப் பட்ட காலத்திற்குள் தனது உரிமை மீட்பு பெறத் தவ றினால், அதன் சொத்துகள் அரசின் கட்டுப்பாட் டில் சென்றிருப்பது நிரந்தரமானதாக மாறி விடும். அதன்பின், நியமிக்கப்பட்ட அதிகாரம் அந்த சொத்துகளை மாற்றவோ அல்லது விற்கவோ முடி யும். அவ்வாறு கிடைக்கும் வருவாய் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் (Consolidated Fund of India) சேர்க்கப்படும். இதன் மூலம் வெளிநாட்டு நன்கொடை யாளர்கள், இந்தியாவில் உள்ள பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு உதவுதல், கல்வியை மேம்படுத்தல், பொதுச் சுகாதாரத்தை உயர்த்து தல் ஆகியவற்றிற்காக வழங்கிய நிதியின் அடிப்படை நோக்கமே முழுமையாக முறியடிக்கப் படுகிறது. எஃப்சிஆர்ஏ-வின் கீழ் உள்ள சொத்து களில் நிலம், கட்டிடங்கள், வாகனங்கள், உப கரணங்கள் மற்றும் செலவிடப்படாத நிதி ஆகி யவை அடங்குவதால், பல நிறுவனங்கள் செய லிழக்கவோ அல்லது முழுமையாக மூடப்படவோ நேரிடும்.

அமலாக்க அதிகார மையப்படுத்தலும் கட்டுப்பாடுகளும்

இந்த மசோதா, இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் நிர்வாகத்தின் மீது மிகுந்த செயற்பாட்டுக் கட்டுப்பாட்டை விதிக்கிறது. திருத்தப்பட்ட பிரிவு 13, இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அமைப்புகள் தங்களுடைய சொத்து களை முன்கூட்டிய அரசு அனுமதி இல்லாமல் நிர்வகிப்பதைத் தடை செய்கிறது. இதனால் அவற்றின் அன்றாடச் செயல்பாடுகள் நடை முறையில் முடக்கப்படுகின்றன. அதேபோல், திருத்தப்பட்ட பிரிவு 43 ஆனது, எந்த ஒரு மாநில விசாரணை அமைப்பும் எஃப்சி ஆர்ஏ மீறல்களை விசாரிப்பதற்கு முன் ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறுவதன் மூலம் அமலாக்க அதிகாரத்தை முழுமையாக மையப்படுத்துகிறது. மேலும், எஃப்சிஆர்ஏ உரிமம், பதிவு மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை ஒப்புதல் அளிப்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ தெளிவான காலக்கெடு எதையும் சட்டம் நிர்ணயிக்கவில்லை. இதனால் ஏற்படும் நிர்வாகத் தாமதங்கள் வெளிநாட்டு நிதியைச் சார்ந்த திட்டங்களைப் பாதிக்கும்; குறிப்பாக உதவி தேவைப்படும் விளிம்பு நிலைச் சமூகங்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும்.

சிறுபான்மைச் சமூகங்கள் மீதான தாக்கம்

சிறுபான்மைச் சமூகங்கள், குறிப்பாகக் கிறிஸ்தவ சமூகங்கள் மீது இந்தச் சட்டத்திருத்தம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிகவும் கவலைக்குரி யது. கிறிஸ்தவ அமைப்புகள் ஆயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் பழங்கு டியினர் நல அமைப்புகளை நடத்துகின்றன. இவை பெரும்பாலும் தேவாலயங்கள், வெளி நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறுகின்றன. குறிப்பாகக் கேரளா, தமிழ்நாடு, நாகாலாந்து, மிசோரம் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களில் இத்தகைய நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. சிறுபான்மைச் சமூகங்கள் நடத்தும் பல தொண்டு நிறுவனங்கள், பெரும்பான்மைச் சமூக மக்களுக்கே பெரிதும் சேவை செய்கின்றன என்பது உண்மை. பிரிவு 16A-இன் கீழ், ஒரு அமைப்பின் எஃப்சிஆர்ஏ பதிவு காலாவதி யானாலோ, புதுப்பித்தல் தாமதமானாலோ, பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற கன்னியாஸ்திரி பள்ளிகள் (Convent schools), மிஷன் மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்கள், வெறும் நிர்வாகப் பிழைகள் காரணமாகவே அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிட லாம். 2014 முதல் 2026 வரை சுமார் 22,000 எஃப்சிஆர்ஏ உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள் ளன. இதனால், பெரும்பான்மை மக்களுக்குச் சேவை செய்து வரும் சிறுபான்மை அமைப்பு களின் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் அரசின் கவனத்திற்கு இலக்காகின்றன என்ற அச்சம் எழுந்துள்ளது.

பொருளாதாரப் பாதிப்பும் வேலைவாய்ப்பு இழப்பும்

எஃப்சிஆர்ஏ உரிமங்கள் ரத்து செய்யப்படு வதால், குழந்தைகள் பாதுகாப்பு, தடுப்பூசி திட்டங்கள், புதிதாகப் பிறந்தவர்களின் சுகாதா ரம், ஊட்டச்சத்து, ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசுத் திட்டங்களைப் பெறுவதற்கான உதவி போன்ற தொடர்ந்து நடைபெற்று வரும் களப்பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும். இந்தத் துறை நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% பங்களிப்பு செய்கிறது. உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, ஒவ்வொரு அமைப்பின் செயல்பாடுகளாலும் பயனடைந்த சுமார் 4 லட்சம் முதல் 8 லட்சம் நபர்கள் வரை தங்களின் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை இழக்கும் அபாயம் உள்ளது. 2014ஆம் ஆண்டு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கையின்படி, குடிமைச் சமூக அமைப்புகள் இந்தியாவில் 27 லட்சம் வேலைவாய்ப்புகளையும், 34 லட்சம் முழுநேர தன்னார்வலர்களையும் உருவாக்கியுள்ளன. இது நம் நாட்டின் பொதுத் துறை வேலைவாய்ப்புகளின் அளவைக் கூட மிஞ்சக்கூடியதாகும். எனவே, இந்தத் திருத்தங்கள் அமைப்புகளின் இருப்பை மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் சமூக உள்கட்டமைப்புகளையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.

அச்சுறுத்தலின் கீழ் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள்

விமர்சகர்கள் இந்த மசோதாவை குடிமைச் சமூகம் மற்றும் சிறுபான்மை நிறுவனங்களுக்கு ஒரு தீவிரமான அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தெளிவற்ற “பொது நலன்” என்ற அளவுகோல், சிறுபான்மையினர் உரிமைகள், பழங்குடியினர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் அல்லது பொதுக் கொள்கை ஆதரவு ஆகியவற்றிற்காகப் பணி யாற்றும் அமைப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்தப் படலாம். இதனால் ஒரு அச்சுறுத்தும் விளைவு ஏற்படலாம்; இது நன்கொடையாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இத்தகைய அமைப்புகளை ஆதரிப்பதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்யும். இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டக் கவலைகளையும் எழுப்புகிறது, குறிப்பாக அரசியல் சட்டப் பிரிவுகள் 14, 19(1)(c), 25, 26, 29, 30 மற்றும் 300A ஆகியவற்றின் கீழ். பரந்த அதிகாரங்களை நிர்வாகத் துறையிடம் குவித்து வைப்பதன் மூலம், இது சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம், மத மற்றும் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி உரிமை , மற்றும் சொத்துரிமைகள் ஆகியவற்றைச் சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்கு படுத்தும் எந்தவொரு சட்டமும், சட்டப்படி உரிய நடைமுறை, சுதந்திரமான கண்காணிப்பு மற்றும் தன்னிச்சையான அரசு நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இணைந்திருக்க வேண்டும். இத்தகைய பாதுகாப்புகள் இல்லாவிட்டால், இந்த 2026 மசோதா நவீன இந்தியாவில் குடிமைச் சமூகத்தைப் பாதிக்கும் மிகக் கடுமையான சட்டங்களில் ஒன்றாக மாறும் அபாயம் உள்ளது.