“Father Mother Sister Brother” “பொய் முகங்களும்... நிஜ உறவுகளும்” - கி.ஜெயபாலன்
20 Jun 2026, 8:42 pm

“Father Mother Sister Brother” “பொய் முகங்களும்... நிஜ உறவுகளும்” - கி.ஜெயபாலன்

“நேரம் தொடர்ந்து நகர்கிறது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.வாழ்க்கையின் அர்த்தம் பெரிய சம்பவங்களில் இல்லை.அன்றாட சிறிய தருணங்களில்தான் மனித வாழ்வின் அழகு இருக்கிறது” என்கிறார் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜிம் ஜார்முஸ். இக்கோட்பாட்டின்படி மூன்று வெவ்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது,”Father Mother Sister Brother”என்ற திரைப்படம்..

{1} நீண்ட காலத்திற்குப் பிறகு, ஜெஃப் எமிலி ஆகியோர் பனிபடர்ந்த மலைகளின் ஒதுக்குப்புறத்தில், தனியாக வாழும் தங்கள் தந்தையைச் சந்திக்க காரில் செல்கிறார்கள்.தந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்ற அவர்கள், அவருடன் தேநீர் அருந்தியபடி தங்கள் வாழ்க்கையைப் பற்றி உரையாடுகின்றனர்.

தந்தை, மகன் அவ்வப்போது தரும் பணமே, தனக்கு பேருதவியாக உள்ளது என்கிறார். ஆனால் அவர் அணிந்தி ருக்கும் ரோலக்ஸ் கடிகாரத்தை கவனித்த மகள், அது உண் மையானதா என்று கேட்க,அவர் அதை போலி என்று கூறுகி றார். பிள்ளைகள் அதனை நம்பவில்லை.

அடுத்து,தந்தைக்கு பண உதவி செய்துவிட்டு வெளி யேறும் பிள்ளைகள்,தந்தையின் பழைய காரைப் பார்த்து அவருக்காக வருந்துகின்றனர்.ஆனால் அவர்கள் சென்ற பிறகு, தந்தை மறைத்து வைத்திருந்த நல்ல காரை எடுத்துக் கொண்டு, புதிய கோட் சூட்டில் தனது தோழியைச் சந்திக்கச் செல்கிறார்.மறுபுறம்,ரோலக்ஸ் கடிகாரம் பற்றிய தந்தை யின் பொய்,பிள்ளைகளுக்கு குழப்பம் மற்றும் ஏமாற்றத் தை ஏற்படுத்துவதோடு காரில் திரும்புகின்றனர்.

{2} டப்ளினில் எழுத்தாளராக வாழும் காத்தரீன், ஆண் டுக்கு ஒருமுறை சந்திக்க வரும் தனது மகள்கள் டிம் மற்றும் லிலித்தின் வருகைக்காக உணவு மேசையை அலங்கரித்து காத்திருக்கிறார். வழியில் டிமின் கார் பழுதாகி தாமதமாகிறது; தோழியின் காரில் வந்த லிலித்,உஃபரில் வந்ததாகத் தாயிடம் பொய் சொல்கிறாள்.

ஒருவழியாகச் சந்தித்த மூவரும் மகிழ்ச்சியுடன் உரை யாடி, மலர்க்கொத்தால் அலங்கரிக்கப்பட்ட உணவு மேசை யில் அமரத் தயாராகின்றனர்.தாய் வருவதற்குள், லிலித் உணவு மேசை நாகரீகத்தை மீறி கேக்கை ருசிக்க,டிம் அதைக் கண்டிக்கிறாள்.உணவின் போது மகள்களின் வாழ்க்கை யைப் பற்றி தாய் விசாரிக்கிறார்.தனது ரோலக்ஸ் கடிகாரத் தை பெருமையாகக் காட்டும் லிலித்,தனது உண்மையான வாழ்க்கையை மறைத்துப் பேசுகிறாள்.இது மற்ற இருவ ருக்கும் ஏமாற்றத்தைத் தருகிறது.

பிரியும் நேரம் வருகிறது.உஃபர் செலவுக்கான பணத் தை லிலித் தாயிடம் கேட்க,தாயும் தருகிறார். கார் வரும் வரை மூவரும் பேச வார்த்தைகளின்றி வாசலில் வெவ்வேறு திசைகளில் அமைதியாக நிற்கின்றனர். இறுதியில், மகள்கள் புறப்படுகின்றனர்.தாய் தனிமையில் வாசலில் நின்று பார்த் துக் கொண்டிருக்கிறார்.

{3} தங்களது இறந்த பெற்றோர் கடைசியாக வாழ்ந்த பாரீஸ் நகரிலுள்ள வீட்டைப் பார்க்க காரில் வருகிறார்கள் இரட் டையர்களான பில்லி,ஸ்கீ.வழியிலே காபி அருந்துகிறார் கள்.

வெறிச்சோடிய வீட்டிற்குள், பெற்றோர் வாழ்ந்த பகுதி களான உணவுக்கூடம்,படுக்கையறை, பால்கனி, ஹால் ஆகியவற்றில் அமர்ந்தும்,படுத்தும் பெற்றோரோடு இருப் பதாக உணர்கிறார்கள். தங்களுடைய பழைய புகைப் படங் கள், பாஸ்போர்ட், பெற்றோரின் போலி திருமணச் சான்று, மற்றும் தங்களின் கல்விச்சான்றுகள் ஆகியவற்றை பார்த்த வாறு அக்காலத்திற்குள் சஞ்சரிக்கிறார்கள்.

விமான விபத்தில் இறந்த பெற்றோரின் உடல்கள் கிடைக் காதது குறித்து கவலைப் படுகின்றனர். தந்தையின் ரோலக்ஸ் கடிகாரம், தாயின் சன் கிளாஸ் ஆகியவற்றை தங்கைக்கு பெற் றோரின் நினைவாக பில்லி அளிக்கிறான். அதனை அணிந்த வாறே, பெற்றோர் பயன்படுத்திய பொருட்களை பாதுகாக் கும் கிடங்கிற்கு காரில் செல்கின்றனர்.தந்தைக்குப் பிடித்த பாடலை காரில் கேட்டவாறே கிடங்கை அடைகின்றனர்.அங்குள்ள பொருட்களை பார்த்துக்கொண்டே பெற்றோ ரை மனதில் நிறுத்தி அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் அந்த நினைவுகளோடும் பரஸ்பர ஆறுதலோடும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி நடந்து செல்கிறார்கள்.

ன்று கதைக் களங்களிலும் ரோலக்ஸ் கடிகாரம், உணவு மேசையில் தேநீர் பருகுவது,காரில் சாலைப்பயணம், சாலையோரக் காட்சிகளான வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள கார்கள்,வீடுகள், சாலை விதிகளை மதிக்காத ஸ்கேட்டர்ஸின் (Skaters)சாகச ஓட்டங்கள்,Nowheresville என்ற வசனம் மற்றும் போதைப் பொருட்கள் குறித்த உரை யாடல்கள் ஆகிய அனைத்தையும் இயக்குநர் காட்சிக்காக இணைக்கவில்லை. கதாபாத்திர உணர்வுகளின் படிமங் களாகவே சேர்த்துள்ளார்.

காலத்தின் அடையாளமே ரோலக்ஸ் கடிகாரம். இங்கு, வில்ஹெல்ம் ரைக் எழுதிய The Mass Psychology of Fascism நூலையும், டயோஜனீஸ் போன்ற சினிச சிந்தனையாளர் களையும் வாசிக்கும் தந்தை,தனது உண்மையான கடிகாரத் தை போலி என்கிறார். இதனால் தனது உண்மையான வாழ்க் கையை பிறரிடமிருந்து மறைத்துக் கொள்கிறார். மறுபுறம், தாய் எழுதிய,The Boundaries of Love,The Unfaithful Tomorrow போன்ற நாவல்களைக் கண்டு வியக்கும் லிலித், போலி ரோலக்ஸை காட்டி, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிப் போலியாக வாழ்கிறார். அதேபோல், முன்மாதி ரியாக நினைத்த இறந்த பெற்றோரின் போலிக் கல்யாணச் சான்றிதழைக் கண்டு சிறு அதிர்ச்சி அடைந்தாலும், இரட் டையர்கள் தந்தையின் ரோலக்ஸை ஒரு சின்னமாகப் பார்க் கின்றனர்.இந்த மனித முரண்பாடுகளையே இயக்குநர் நுட்பமான படிமங்களின் வழி சுட்டிக் காட்டுகிறார்.

கார் பயணங்களில் குறுக்கிடும் ஸ்கேட்டர்ஸை ஜெஃப் களைச்செடியைப் போலத் தொந்தரவாகக் காண்கிறான். டிம்மோ,திடீரென சாலையில் வட்டமிடும் அவர்களை ஆச்சரியத்துடன் நோக்கினாலும் எரிச்சலடையாமல் சாகசமாய் பார்க்கிறாள்.போலீஸ் கார் முன்பே இயல்பாகச் சென்று கட் அடிக்கும் ஸ்கேட்டர்ஸை, ஸ்கீ, ஒரு பொருட் டாய் கூட நினைக்கவில்லை.இங்கு ஸ்கேட்டர்ஸை அத்துமீற லின் படிமமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது ஒருவருக் குத் தொந்தரவாகவும், மற்றொருவருக்கு சாகசமாகவும், இன்னொருவருக்கு இயல்பான ஒன்றாகவும் தோன்று கிறது.

இயக்குநர் கிம் ஜார்முஷ், எப்போதும் கதையைத் தாண்டி கதாபாத்திரங்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிப்பார் என்பதை மீண்டும் இப்படத்தின் மூலம் உறுதிபடுத்தி யுள்ளார்.

தந்தையாக நடித்துள்ள டாம் வெயிட்ஸ், தாயாக நடித் துள்ள ஷார்லட்டோ ராம்ப்ளிங் ஆகியோர் சிறப்பாக நடித்துள் ளனர்.பிரபல நடிகர் ஆடம் ட்ரைவர்,ஜெஃப் ஆக,தனது நுட்ப மான முகபாவங்களின் மூலம் சிறப்பாக நடித்துள்ளார்.இரட் டையர்களாக வரும் இந்டியா மூர்,லூகா ஷாபாட் ஆகியோர் மனதின் துயரத்தை முகத்தில் தெளிவாகக் காண்பித்து சிறப்பித்துள்ளனர்.

மூன்று கதைகளையும் இணைக்கும் ஒரு பாத்திரம் போன்று பின்னணி இசையையும் மிக நுட்பமாக உருவாக்கி யுள்ளார் இசை ஆமைப்பாளரான இப்பட இயக்குநர். சவுண்ட் எஃபெக்ட்,படத்தொகுப்பு, ஒளிப்பதிவு ஆகியவை படத் தின் பலமாக அமைந்துள்ளது.

நான் வெளியே நடந்து திரிந்து கொண்டிருந்தேன். இந்நாட்களில் நான் அதிகம் பேசுவதில்லை. ஆம், இந்நாட்களில் நான் அடிக்கடி நினைத்துப் பார்க் கிறேன், உனக்காகச் செய்ய மறந்துபோன விஷயங்களை உனக் காக இருந்த வாய்ப்புகளை நான் தவறவிட்ட அந்த நேரங்களையெல்லாம்.... என்ற மேற்கண்ட ஜாக்ஸன் ப்ரவ்னியின் பழைய பாட லோடு, படம் முடிந்தாலும்,பார்வையாளர்களை தங்கள் கடந்த கால வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் நிலையை இப்பாடல்வரிகள் நிச்சயம் உருவாக்கும்.

இப்படம் 2025,வெனீஸ் உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான தங்கச் சிங்க விருது பெற்றுள்ளது.முபி-இல் இப்படம் உள்ளது.