சென்னை விரைவு செய்திகள்
5 Dec 2025, 4:21 pm

திருவண்ணாமலையில் டிச. 9 விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை, டிச. 5- திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு மற்றும் கீழ்பென்னாத்தூர் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடத்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, விவசாயப் பெருங்குடி மக்கள் விவசாயம் மற்றும் விவசாயத் திட்டங்கள் சம்மந்தமான தகவலை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகள், விவசாயப் பொருட்களைக் கையாளுவதில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு செய்யும் வகையிலும் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட உள்ளது. டிசம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் திருவண்ணாமலை மாநகரம் காமராஜர் சிலைக்கு அருகிலும், பழைய அரசு பொது மருத்துவமனைக்கு எதிரிலும் புதிதாக அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கம் என்ற புதிய கட்டிடத்தில் வரும் 9.12.2025 அன்று முற்பகல் 10.30 மணியளவில் திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவண்ணாமலை ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரி வித்துள்ளார்.

இதயச் செயலிழப்பு, புற்றுநோய் 10 மணி நேர அறுவை சிகிச்சை

சென்னை, டிச.5 வங்கதேசத்தைச் சேர்ந்த 60 வயது நோயாளி ஒருவருக்கு, சென்னையில் 10 மணி நேர உயிர்காக்கும் புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. இந்த நோயாளிக்கு இதயச் செயலிழப்பு (ரத்த வெளியேற்றம் 29%) இருந்ததால், இந்தியா மற்றும் வங்கதேசத்தின் பல மருத்துவமனைகள் அறுவை சிகிச்சை மிகவும் ஆபத்தானது எனக் கைவிட்டன. நம்பிக்கை இழந்த நிலையில், ஐஸ்வர்யா மருத்துவமனைக்கு வந்த அவருக்கு, பேரிட்டோனியல் சூடோமைக்சோமா என்னும் அரியவகை வயிற்றுப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையின் புற்றுநோயியல் இயக்குனர் டாக்டர் எஸ். ராஜசுந்தரம் தலைமையில், இதய நோய் நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களைக் கொண்ட பல்துறை குழு, இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டது. நோயாளியின் இதயச் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் சூடான கீமோதெரபி சிகிச்சை அளித்து 10 மணி நேரத்தில் நிறைவு செய்தனர். சிகிச்சைக்குப் பின் நோயாளி 12வது நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மிகவும் சிக்கலான இந்தச் சவாலை வெற்றிகரமாகச் செய்தது, மருத்துவமனையின் நிபுணத்துவத்தைக் காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

3 யானைகள் உயிரிழப்பு பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே காரணம் தெரியும்

வேலூர், டிச.6- வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள சாத்கர் மலைப்பகுதியில் வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து, வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வன பாதுகாவலர் பெரியசாமி, சுமார் 10 முதல் 15 நாட்கள் இடைவெளிக்குள் இந்த மூன்று யானைகளும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறினார். உயிரிழப்பின் காரணத்தை கண்டறிய, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, யானைகளின் உடற்பாகங்கள், அத்துடன் அப்பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட மண் மற்றும் தண்ணீரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வறிக்கை வந்த பின்னரே யானைகள் உயிரிழந்ததற்கான சரியான காரணம் தெரியவரும் என்று அவர் தெரிவித்தார். மதுரை மாவட்ட வன கால்நடை பராமரிப்பு அலுவலர் கலைவாணன் பேசுகையில், யானைகள் விசம் வைத்து கொல்லப்பட்டதா, மின்சாரம் அல்லது மின்னல் தாக்கியதா அல்லது வைரஸ் காய்ச்சலால் இறந்ததா போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், இவற்றிற்கான விடை உடற்கூறு ஆய்வில் தெரியவரும் என்றும் கூறினார். வேட்டையாடப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.