திருச்சி விரைவு செய்திகள்
16 Dec 2025, 3:51 pm

எம்.எல்.ஏ., கார் மோதிய விபத்தில் விவசாயி பலி

தஞ்சாவூர், டிச.16– தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ்(50). இவருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விவசாய வேலை காரணமாக, வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற, திருவையாறு எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரனின் கார், கோவிந்தராஜ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த ஒரத்தநாடு காவல்துறையினர், கோவிந்தராஜ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர். மேலும், காரையும் பறிமுதல் செய்தனர்.

நட்சத்திர தமிழன் விருது வழங்கல்

பாபநாசம், டிச.16- மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கலை, விளையாட்டு, சமூக சேவை, மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு விருது வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரியில் நடந்த விழாவிற்கு சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆரணி ராஜன் தலைமை வகித்தார். நிறுவனர் வினோத் முன்னிலை வகித்தார். பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்த நாட்டுச்சேரி முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கருக்கு, ஊராட்சியை மேம்படுத்தியதற்காக நட்சத்திர தமிழன் விருது வழங்கப்பட்டது. வன உயிர் அறிவியல் அறிஞர் புபேஷ் குப்தா, புதுச்சேரி சிறைத் துறை சூப்பிரண்டு பாஸ்கரன், ஸ்ரீபெரும்புதூர் கோட்ட வருவாய் அலுவலர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.