தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வீழ்ச்சியடையும் ஏகாதிபத்தியமும் சோசலிசத்திற்கான தேவையும் - பேராசிரியர் விஜய் பிரசாத்

14 Jun 2026, 10:32 pm
வீழ்ச்சியடையும் ஏகாதிபத்தியமும் சோசலிசத்திற்கான தேவையும் - பேராசிரியர் விஜய் பிரசாத்

வீழ்ச்சியடையும் ஏகாதிபத்தியமும் சோசலிசத்திற்கான தேவையும் - பேராசிரியர் விஜய் பிரசாத்

சரிந்து வரும் உலகளா விய ஏகாதிபத்திய அமைப்பு, தனது வீழ்ச்சி யடைந்து வரும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக உலகெங்கும் வன்முறையையும் போர் களையும் ஏவிவிட்டு வரும் தற்போதைய சூழலில், உழைக்கும் வர்க்க அமைப்பாய் திரள்வது என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உயிர்வாழ்விற்கும் மிக இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. 1976 ஜூன் 16 அன்று தென்னாப்பிரிக்காவின் சோவெட்டோ (Soweto) நகரில் நிறவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடி உயிர்த்தியாகம் செய்த மாணவர்களின் ஐம்பதாவது ஆண்டு நினைவை நோக்கி நாம் நகரும் இவ்வேளை யில், உலகிற்கு ஒரு துடிப்பான இடதுசாரி இயக்கம் முன்பை விட இப்போது மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் இன்றைய சூழலும் இடதுசாரிகளின் மாநாடும் கடந்த மே 29 முதல் 31 வரை, தென்னாப்பிரிக்கா வின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இடதுசாரி சக்திகள் ஒன்றிணைந்து ‘இடதுசாரிகளின் மாநாடு’ (Confe rence of the Left) ஒன்றை நடத்தின. முறையான நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகியும், தென்னாப்பிரிக்க மக்கள் இன்னும் தங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே கடுமையாகப் போராடி வருகின்றனர். நாட்டின் அதிகாரப்பூர்வ வேலையின்மை விகிதம் 32.7% ஆக உள்ளது, வேலை தேடுவதையே கைவிட்ட விரக்தியடைந்த தொழிலாளர்களையும் சேர்த்தால் இது 43.7% ஆக உயர்கிறது.

மறுபுறம், நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் செல்வங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டப்படு கின்றன. செல்வத்தை உருவாக்குவதிலும் அதை விநியோகிப்பதிலும் நிலவும் இந்த சமநிலையின்மை யைக் களையத் தவறியதால், ஒரு காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதன்மை இயக்கமாக இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) இன்று சிதறலடைந்து, செல்வந்தர்களின் கட்சியாக சீரழிந்து போயுள்ளது. அதே நேரத்தில், இடதுசாரி சக்திகள் சோர்வடைந்துள்ள சூழலில், பழைய நிறவெறி நில பிரபுத்துவ முதலாளித்துவ சக்திகள் உள்ளிட்ட வலது சாரி சக்திகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன.

இத்தகைய இக்கட்டான தருணத்தில், தென்னாப்பி ரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP) மற்றும் மாநாட்டு வழி காட்டுதல் குழு ஆகியவை இணைந்து, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற பல்வேறு அமைப்புகள் உள்ளிட்ட பல அரசியல் சக்திகளை ஒரே மேடையில் திரட்டின. தென்னாப்பிரிக்கா மற்றும் அதுபோன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பிற நாடுகளின் நீண்டகால மற்றும் நடைமுறை உத்திகள் குறித்து விவாதிக்க இந்த மாநாடு வழிவகுத்தது.

போராட்டங்களின் வழியே பிறக்கும் வெற்றி

வரலாற்றில் நாம் போராடும்போதுதான் வெற்றி களைப் பெறுகிறோம். தோல்விக்கு பயந்து நாம் முடங்கிப் போனால் எதையும் சாதிக்க முடியாது. மே 30 அன்று, 70லட்சத்திற்கும் அதிகமான தொழிலா ளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 56-வது ஆண்டு தொடக்க நாளாகும். கடந்த பிப்ரவரி 12 அன்று, இந்தியாவில் தொழிலாளர்களின் கூட்டுப் பேர உரிமைகளைப் பறிக்கும், ஒப்பந்த முறையை ஊக்குவிக்கும் மற்றும் வேலை நேரத்தை அதிகரிக்கும் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக சிஐடியு மற்றும் பிற மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகளுடன் இணைந்து பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. நாடு தழுவிய இந்த மாபெரும் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்களும் விவசாயிகளும் பங்கேற்றனர். இது 2020-2021 ஆம் ஆண்டுகளில் இந்திய விவசாயி கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் தொடர்ச்சியாகும். லட்சக்கணக்கான விவசாயிகள் ஓராண்டு காலம் தில்லியின் எல்லைகளில் தங்கி நடத்திய போராட்டத்திற்கு கோடிக்கணக்கான தொழி லாளர்களும் ஏழை எளிய மக்களும் ஆதரவளித்தனர். இதன் விளைவாக, இந்திய அரசாங்கம் தனது விவ சாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாம் போராடும்போது உடனடி யாக இலக்குகளை அடைய முடியாவிட்டாலும், அடுத்தகட்டப் போராட்டத்திற்கான நம்பிக்கையையும் அனுபவத்தையும் பெற்றுக் கொள்கிறோம். பாரிஸ் கம்யூன் (1871), அக்டோபர் புரட்சி (1917), வியட்நாம் புரட்சி (1945), சீனப் புரட்சி (1949), கியூபா புரட்சி (1959) மற்றும் ஆப்பிரிக்காவின் சாஹெல் (Sahel) பிராந்தியத்தில் தற்போது நடைபெற்று வரும் ஏகாதி பத்திய எதிர்ப்பு நிகழ்வுகள் வரை, நூறு ஆண்டு களுக்கும் மேலான உழைக்கும் வர்க்க, விவசாய மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்களின் பாரம்பரி யத்தில் நாம் நிற்கிறோம். எனவே, இடதுசாரிகளின் விவாதம் ஒருபோதும் விரக்தியில் தொடங்க வேண்டியதில்லை.

தீவிர ஏகாதிபத்தியத்தின் கட்டமும் உலகளாவிய நெருக்கடியும்

2008 ஆம் ஆண்டின் உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு, உலகப் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சி, அதிகக் கடன் சுமை, குறைந்து வரும் உற்பத்தி முதலீடு மற்றும் ஆழமான சமூக சமத்துவமின்மை ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக வட அட்லாண்டிக் நாடுகளின் (அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள்) பொருளாதாரம் ‘மூன்றாவது பெரும் மந்தநிலை’யால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிதி, தொழில்நுட்பம் மற்றும் இயற்கை வளங்கள் மீதான தங்களின் கட்டுப்பாடு பலவீனமடைந்து வருவ தால், வீழ்ச்சியடைந்து வரும் ஆபத்தான மேற்கத்திய ஆளும் வர்க்கங்கள், தங்களின் உலகளாவிய ஒழுங்கைக் காப்பாற்றிக் கொள்ள தகவல் தளங்களை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, போர்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலை யை நாம் ‘தீவிர ஏகாதிபத்தியம்’ (Hyper-imperialism) என்று அழைக்கிறோம். சீனா, கியூபா, ஈரான், லெபனான், பாலஸ்தீனம், வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இத்தகைய தீவிர ஏகாதிபத்தியத் தாக்குதல்களின் இலக்குகளாக மாறியுள்ளன. குறிப்பாக, சீனாவின் எழுச்சியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முனையும் புதிய பனிப்போர் (New Cold War) இந்த நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியுள்ளது. எனவே, நமது சகாப்தத்தின் முதன்மை முரண்பாடு என்பது, தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்கத் துடிக்கும் வீழ்ச்சியடையும் ஏகாதிபத்திய அமைப்பிற்கும், இறையாண்மை, வளர்ச்சி மற்றும் சமூக நீதியை நாடும் ஒடுக்கப்பட்ட மக்களின் தேவை களுக்கும் இடையேதான் நிலவுகிறது.

சமூக ஜனநாயகத்தின் வீழ்ச்சியும் இடதுசாரிகளின் கடமையும்

கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய விடுதலைக் கட்சிகளும், ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகளும் தங்களின் வரலாற்றுப் பணி களைத் தொலைத்துவிட்டன. மக்கள் நலனுக்கான அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்ட இக்கட்சி கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ‘சிக்கன’ நட வடிக்கைக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டன. இந்தக் கொள்கை ரீதியான வீழ்ச்சியால், அரசா ங்கங்கள் தங்களின் சொந்த மக்களின் அவசரத் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு, செல்வந்தர் களுக்கும் கடன் பத்திரதாரர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுகின்றன. சமூக ஜனநாயகத்தின் இந்த முழுமையான வீழ்ச்சியால், இடதுசாரி இயக்கங் களின் கடமை இப்போது இருமடங்காக மாறியுள்ளது. புரட்சிகர மாற்றத்திற்கான வரலாற்றுப் போராட்டத் தோடு சேர்த்து, மக்களின் அன்றாடத் தேவைகளான உணவு, நீர், சுகாதாரம் மற்றும் சமூக நலனைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் இடதுசாரிகளே முன்னெடுக்க வேண்டியுள்ளது.

உழைக்கும் வர்க்க சக்தியை மறுசீரமைத்தல்

வெகுமக்களின் பலம் என்பது ஆளும் வர்க்கங் களின் கணக்கீடுகளாலோ அல்லது சர்வதேச நிறு வனங்களின் பெருந்தன்மையாலோ தீர்மானிக்கப்படு வதில்லை; அது மக்களின் அமைப்பாய் திரளும் சக்தி யாலேயே தீர்மானிக்கப்படும். ஆளும் வர்க்கங்கள் உலகளவில் கார்ப்பரேட்டுகள், வங்கிகள், ஊட கங்கள் மற்றும் ராணுவக் கூட்டணிகள் மூலம் பலமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. எனவே, உலக மக்களும் அதே தீவிரத்துடன் தங்களை அமைப்பாக ஒழுங்க மைத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பொறுமை, கருத்தியல் தெளிவு மற்றும் சோசலிச அரசியலின் மீதான நம்பிக்கை அவசியம். இடதுசாரி முகாமிற்குள் பல்வேறு விவாதங்களும் மரபு களும் இருக்கலாம், ஆனால் உழைப்பிற்கும் மூல தனத்திற்கும் இடையே உள்ள முதன்மை முரண் பாட்டை நாம் மறந்துவிடக் கூடாது. தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சோலிமாபைலா (Solly Mapaila) குறிப்பிட்டது போல, “கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் எதிரிகள் அல்ல”. இடதுசாரிகள் சிதறிக் கிடக்கும் போது, பிற்போக்கு சக்திகள் மக்களின் விரக்தியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்கின்றன. ஆனால், இடதுசாரிகள் அரசியல் கல்வி, மக்கள் திரள்இயக்கம் மற்றும் உறுதியான போராட்டங்கள் மூலம் ஒன்றிணைந்து செயல்படும்போது, தொழிலாளர்கள் தங்களின் கூட்டு ஆற்றலை உணர்கிறார்கள். எனவே, உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே நம் முன்னாலுள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். இது வெறும் தேர்தல் கூட்டணிகளோ அல்லது தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளோ அல்ல; மாறாக தொழிலாளர்கள், வேலை வாய்ப்பற்றோர், பெண்கள், மாணவர்கள், முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அடிமட்ட அளவில் அமைப்புகளை உருவாக்குவதாகும்.

சாத்தியமான கம்யூனிசமும் புதிய உலகமும்

சோசலிசம் என்பது இனி வெறும் ஒரு விருப்பம் அல்ல; அது மனிதகுலம் உயிர்வாழ்வதற்கான அத்தி யாவசிய நிபந்தனையாகும். இந்தியாவின் கேரளாவில் இடதுசாரிகளால் கட்டப்பட்ட கூட்டுறவு சங்கங்கள், பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கத்தின் குடி யிருப்புகள், தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்புப் பிரச்சார வாகனங்கள் (Red Caravans) ஆகி யவை தற்போதைய சூழலிலேயே புதிய எதிர்காலத் திற்கான அடித்தளத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்பதற்கான சிறந்த உதாரணங்கள் ஆகும். இந்த சோதனைகளைத்தான் கார்ல் மார்க்ஸ் ‘சாத்திய மான கம்யூனிசம்’ (Possible communism) என்று அழைத்தார். முதலாளித்துவம் வன்முறையானது, ஆனால் அது நிரந்தரமானது அல்ல. ஏகாதிபத்தியம் சக்தி வாய்ந்தது, ஆனால் வீழ்த்த முடியாதது அல்ல. உழைக்கும் வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களுமே வரலாற்றைப் படைப்பவர்கள். அந்த வரலாற்றுச் சக்தியை உலகளாவிய ரீதியில், புரட்சிகரப் பொறுமை யுடன், உணர்வுப்பூர்வமாக ஒழுங்கமைப்பதே நம் முன்னுள்ள முதன்மையான கடமையாகும். தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.