திருச்சி விரைவு செய்திகள்
13 Mar 2026, 4:52 pm

இன்று நியாய விலைக்கடை குறைதீர்க்கும் முகாம்

புதுக்கோட்டை, மார்ச் 13- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும், நியாயவிலைக் கடை தொடர்பான குறைதீர் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல், மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில், குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல், அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு மாற்றம் ஆகிய சேவைகளுக்கு முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம். மேலும், அட்டைதாரர்கள் சார்பாக நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-இன் படி தெரிவித்தும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

15 வயதிற்கு மேற்பட்ட பள்ளி செல்லாதோர் கணக்கெடுப்பு பயிற்சி கூட்டம்

தஞ்சாவூர், மார்ச் 13- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வட்டார வளமையம் சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான (ஒற்றை நோடல் ஏஜென்சி) SNA SPARSH மற்றும் 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளி செல்லாதோர் கணக்கெடுப்பு பயிற்சி கூட்டம், குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் ராமமூர்த்தி துவக்கி வைத்தார். பயிற்சியின் நோக்கம் பற்றி வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் கூறினார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு மாணவர் சேர்க்கை, மாணவர்களின் பாதுகாப்பு, கற்றல்-கற்பித்தல் செயல்முறைகள், 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் சரவணன், சிறப்பாசிரியர் ரவிச்சந்திரன், கணக்காளர் ராஜ்மோகன் ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை வந்த நாகர்கோவில் - சார்லப்பள்ளி அம்ரித் பாரத் ரயிலுக்கு வரவேற்பு

தஞ்சாவூர், மார்ச் 13- தஞ்சாவூருக்கு, வெள்ளிக்கிழமை காலை வந்த நாகர்கோவில் - சார்லப்பள்ளி புதிய அம்ரித் பாரத் ரயிலை வரவேற்ற காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினர், பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் . தமிழ்நாட்டின் நாகர்கோலில்- தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சார்லப்பள்ளி ஆகியவற்றை இணைக்கும் புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்கள் வழியாக பயணிக்கும் இந்த ரயில், வியாழக்கிழமை இரவு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்த ரயிலுக்கு, காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கம் சார்பில், செயலாளர் வழக்குரைஞர் வெ. ஜீவக்குமார், நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ரயில் ஓட்டுநர் உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

பெட்ரோல் - டீசல், கேஸ் தட்டுப்பாடின்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

தஞ்சாவூர், மார்ச் 13- தஞ்சாவூர் மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா - இஸ்ரேல் ஏகாதிபத்தியங்கள் ஈரான் மீது நடத்தக்கூடிய போரின் விளைவாக, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கடந்த சில தினங்களாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு கடும் நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சமையல் எரிவாயு பதிவு செய்ய முடியவில்லை. சிலிண்டர்களும் கிடைக்காததால் ஹோட்டல்கள் மட்டுமல்லாது, வீடுகளிலும் சமையல் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், உணவுப் பண்டங்கள் தாறுமாறாக விலை உயர்கிறது. தட்டுப்பாடும் ஏற்படுகிறது. எனவே, சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும், நேற்றிலிருந்து பெட்ரோல், டீசல் கிடைக்காது என்ற தகவல் விரைவாக மக்களிடம் பரவியதால், மக்கள் கூட்டம் கூட்டமாக பெட்ரோல் நிலையங்களின் முன்பு திரண்டு, மணிக்கணக்கில் நின்று வாங்குகின்றனர். மேலும், பிளாஸ்டிக் கேன்கள், வேறு பாத்திரங்களில் வாங்கிக் கொண்டு செல்கின்றனர். இதனால், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் கையிருப்பு இருக்கிறது என்று எண்ணெய் நிறுவனங்களும், ஒன்றிய அரசும் தெரிவித்திருந்தாலும் கூட மக்களிடம் தட்டுப்பாடு வரும் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, பதற்றத்தை தடுக்கவும், இந்த நெருக்கடியை பயன்படுத்தி பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் பதுக்குவதை தடுக்கவும், மக்களுக்கு சீராக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்திடவும், கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை, மார்ச் 13- புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் 1 ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசுமன்(31). இவர், வியாழன் மதியம், காந்திநகர் 4 ஆம் வீதியைச் சேர்ந்த அவரது நண்பர் ராஜ்கபூருடன், அசோக் நகரிலுள்ள மதுக்கடைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது இவர்களின் இரு சக்கர வாகனத்தை சுமார் 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. இதை அறிந்த ராஜ்கபூர், அங்கிருந்து தப்பியோடினார். அந்தக் கும்பல் ஜெயசுமனை கால், தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பியோடியது. தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா. பிருந்தா தலைமையிலான காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2025 ஜுன் மாதம் புதுக்குளம் அருகே, போஸ்நகர் 8 ஆம் வீதியைச் சேர்ந்த தினேஷ்குமார் கொலை வழக்கில், தற்போது கொலையான ஜெயசுமன் 2 ஆவது குற்றவாளியாவார். இவர் சிறையில் இருந்தபோது, தினேஷ்குமாரின் நண்பர்கள் 4 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். இந்த நிலையில்தான் ஜெயசுமன் அண்மையில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளார். எனவே, தினேஷ்குமார் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இது நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கணேஷ்நகர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

பாபநாசம், மார்ச் 13- தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே ராராமுத்திரைகோட்டை ஊராட்சியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும், ஆயிரக்கணக்கானோருக்கு அரசுப் பேருந்து வசதி இல்லாததால், பள்ளி செல்லும் குழந்தைகள், பெண்கள் மற்றும் கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இப்பகுதிகளில், தனியார் மினி பேருந்துகளையும் வேறு தடங்களில் ஓட்டுகிறார்கள். தமிழக அரசின் மகளிர் விடியல் பேருந்துகள் இப்பகுதியில் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். பலமுறை மனுக்கள் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் பேருந்து இயக்கப்படாததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மார்ச் 12 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அம்மாபேட்டை காவல்துறை ஆய்வாளர், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் மற்றும் வருவாய் அலுவலர்கள் ராராமுத்திரைகோட்டை ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு மார்ச் 15 ஆம் தேதி முதல் பேருந்து இயக்க உறுதியளித்தனர். இதனால் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், ஒன்றியச் செயலாளர் வி. ரவி, ஒன்றியக் குழு உறுப்பினர் கே. முனியாண்டி, ராராமுத்திரைகோட்டை கிளைச் செயலாளர் மாணிக்கம் உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.

மின் பகிர்மானங்கள் பெயர் மாற்றம்

திருவில்லிபுத்தூர், மார்ச் 13- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கோட்டம் ஊரகம் / திருவில்லிபுத்தூர் உட்கோட்டம் உதவி மின்பொறியாளர் ஊரகம் /தெற்கு / திருவில்லிபுத்தூர்ர் பிரிவு அலுவலகத்தில் உள்ள A. பெரியகுளம் மின் பகிர்மானம் (269-003) ஆனது தற்போது மகாத்மா நகர் மின் பகிர்மானமாகவும் (265 - 013) பி-பெரியகுளம் மின் பயிர்மானம் (269 - 004)தற்போது பெரியகுளம் மின் பகிர்மானமாகவும் (265-014) உதவி பொறியாளர் பகிர்மானம் படிக்காசு வைத்தான் பட்டிபிரிவு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துர்கா நகர், தாய் நகர், டிவிஎஸ் நகர், பெரியகுளம் உள்ளிட்ட ஏரியாக்கள் மாற்றம் செய்யப்பட்ட மின் ஏரியா பகுதிக்குள் அடங்கும் என்ற விவரத்தை திருவில்லி புத்தூர் ஊரகம் உதவி செயற் பொறியாளர் கு. காலாசாமி அறிவித்து ள்ளார்.