மேட்டுப்பாளையம் அருகே கார் மீது பாறை விழுந்து முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு!
7 Oct 2026, 12:43 pm

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பர்லியாறு பகுதியில் மலைப்பாதையில் உருண்டு வந்த பாறை கார் மீது விழுந்ததில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் ஜெகதளா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது மகன் கார்த்திக், மனைவி தேவகி மற்றும் உறவினர்கள் இருவருடன் இன்று காலை குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

பர்லியாறு பகுதியில் கார் சென்றபோது, நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக மலைப்பகுதியில் இருந்து திடீரென பாறை ஒன்று உருண்டு வந்து கார் மீது விழுந்தது. இதில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி தேவகி ஆகியோர் காயமடைந்தனர்.

இருவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். தேவகிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.