இயந்திரக் கோளாறுகளால் புதுச்சேரியின் பல இடங்களில் வாக்குப்பதிவு காலதாமதம்
10 Apr 2026, 5:30 am

இயந்திரக் கோளாறுகளால் புதுச்சேரியின் பல இடங்களில் வாக்குப்பதிவு காலதாமதம்

புதுச்சேரி, ஏப்.9- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் காலை 6:30 மணிக்கே வாக்காளர்கள் குவியத் தொடங்கினர். ஆனால், 7 மணியைக் கடந்தும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இயந்திரம் வேலை செய்யவில்லை என்று அதிகாரிகள் கூறிய நிலையில், இயந்திரத்தில் கோளாறு இருப்பது பின்னர் தெரியவந்தது. தொழில்நுட்பக் குழுவினர் வந்து இயந்திரத்தைச் சீரமைத்த பிறகு, சுமார் 35 நிமிடம் தாமதமாக 7:35 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோல், புதுச்சேரி நகர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 10 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை வாக்குப்பதிவு தாமதமானது. ஏனாம் பகுதியில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், வாக்குப்பதிவு நடுவே சிறிது நேரம் தடைபட்டது. முதலியார்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளிலும் இயந்திரம் வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது.

தகவல் அறிந்த தேர்தல் துறையினர் உடனடியாக மாற்று இயந்திரங்களை அனுப்பியும், தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டும் கோளாறுகளைச் சரிசெய்து வாக்குப்பதிவைத் தொடர்ந்தனர். இயந்திரக் கோளாறுகளால் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.