சென்னை விரைவு செய்திகள்
19 Feb 2026, 3:09 pm

தொழில் முனைவோர் மேம்பாட்டு அலுவலகம் திறப்பு

வேலூர், பிப். 19- வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் புதிய அலு வலகத்தை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தின் மூலம் அழகுகலை, பேக்கரி தயாரிப்பு, தங்க நகை மதிப்பீடு, சிறுதானியம் மற்றும் கற்றாழை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு, தையல் பயிற்சி, ஜிஎஸ்டி மற்றும் ஐடி ரிட்டன் பைலிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் துவங்கப்பட்டுள்ள இந்த நிகழ்வின் போது, மாவட்ட திட்ட மேலாளர் புவனா குண சேகரன் உடனிருந்தார்.

தேமுதிகவின் முடிவு சரியான நகர்வு; இந்தியா கூட்டணி வலுவடைந்துள்ளது சோஷலிஸ்ட் ஜனதா கட்சிவரவேற்பு

தஞ்சை, பிப்.19 - தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், தேமுதிக எடுத்துள்ள முடிவு சரியான ஒன்று என சோஷலிஸ்ட் ஜனதா கட்சி மாநிலத் தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக அரசியல் கட்சிகள் கலக்கமுற்ற நிலையில் இருந்தபோது, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மிகச் சரியான அரசியல் காய் நகர்த்தலை மேற்கொண்டுள்ளார். ஆளாளுக்கு முன்வைத்த விமர்சனங்களைத் தகர்த்து எறிந்துவிட்டு, மத்தியில் உள்ள ஆட்சிக்கு எதிராகத் தெளிவான முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த முடிவால் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன. தமிழகத்தில் தற்போது ‘இந்தியா’ கூட்டணி மிகவும் வலிமையடைந்துள்ளதுஎன்று கூறியுள்ளார். இவ்வாறு தனது அறிக்கையில் தஞ்சை இளஞ்சிங்கம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்

சென்னை, பிப். 19 - மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமிய சமூகத்தின ருக்கான 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டி ருப்பதற்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்பின் சமூகநீதி நோக்கத்தையும், மாநிலங்களின் உரிமையையும் பாதிக்கும் செயலாகும். இடஒதுக்கீடு என்பது மத அடிப்படையிலான சலுகை அல்ல; அது பின்தங்கிய சமூகங்களுக்கு வழங்கப்படும் சம வாய்ப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய முன்னுதாரணம் பிற மாநிலங்களிலும் சமூகப் பாதுகாப்பு ஒதுக்கீடுகளைக் குறைக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ள அவர், ரத்து செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை! இளைஞர் கைது

சென்னை, பிப்.19- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் சிவராத்திரியை முன்னிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது சகோதரியின் மகளான 17 வயது சிறுமியுடன் மயான கொள்ளை நிகழ்ச்சி மற்றும் காளி ஆட்டத்தை காண சென்றிருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி, உடனே தன் சித்தியிடம் இளைஞர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை கூறி அழுதுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் சித்தி பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் பிடிபட்ட நபரை காவல் துறையினர், மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மகளிர் போலீசார் அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

மெட்ரோ ரயிலில் பாலியல் தொல்லை: வாலிபர் கைது

சென்னை, பிப்.19- சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயிலில், தண்டையார்பேட்டை நிலையம் அருகே பெண் பொறியாளர் ஒருவரிடம் போதையில் இருந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்தப் பெண் கூச்சலிடவே, சக பயணிகள் அந்த வாலிபரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அனில் சவுத்ரி (25) என்பது தெரியவந்தது. தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சியில் 2-ஆம் கட்ட குடும்ப கணக்கெடுப்பு தொடக்கம்

சென்னை, பிப்.19- மக்களுக்குப் பொது சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய, தாம்பரம் மாநகராட்சி மற்றும் யுனிசெஃப் இணைந்து தமிழகத்திலேயே முதன்முறையாக மின்னணு குடும்பப் பதிவேடு தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக மண்டலம் 1-ல் 54% பணிகள் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு தற்போது அனைத்து மண்டலங்களிலும் தொடங்கி மே மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. இப்பணியில் அடையாள அட்டை அணிந்த கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், ஆதார், சொத்து வரி, கல்வி, தடுப்பூசி மற்றும் நோய் பாதிப்பு உள்ளிட்ட தகவல்களைச் சேகரிப்பார்கள். பொதுமக்கள் இது குறித்த சந்தேகங்களுக்கு 18004254355 மற்றும் 18004251600 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாணவர்களின் நூல் வாசிப்பு கூட்டம்

திருவண்ணாமலை,பிப்.18- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில், கோடை விடுமுறையில் மாணவர்கள் நூலகம் சென்று வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள் முன்னி லையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வாசகர் வட்டத் தலைவர் ராஜ சேகரன், கிளை நூலகர் பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நூல் வாசிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்

சிதம்பரம், பிப். 19- சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் நீர்நிலை கரைகளில் உள்ள வீடுகள் நீதிமன்ற உத்தரவினை சொல்லி தொடர்ந்து அகற்றி வருகின்றனர். இதில் தில்லையம்மன் ஓடை, பாலமான் கரை, உப்பனாற்றங்கரை, இந்திரா நகர், நேரு நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளனர். வீடுகளை அகற்றும் போது மாற்று இடம் வழங்காமல் தொடர்ந்து அகற்றும் பணி இன்றளவும் நடைபெற்று வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தம்!

வேலூர், பிப்.19- வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 9 வயது சிறுமி ஷாலினிக்கு ரூ.66 ஆயிரம் மதிப்புள்ள அதிநவீன செயற்கை கால் பொருத்தப்பட்டது. திரு வண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இச்சிறுமி, 3 வயதில் ஏற்பட்ட விபத்தில் தனது இடது காலின் முட்டிக்குப் கீழ் பகுதியை இழந்தார். குழந்தையின் வளர்ச்சியைத் தொடர்ந்து, பழைய செயற்கை காலிற்கு மாற்றாகப் பொருத்தப்பட்ட இந்த புதிய நவீன கால், பாதம் அசைக்கக்கூடிய வசதியைக் கொண்டது. இதன் மூலம் சிறுமி தற்போது நடனப் போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். பள்ளிச் செல்லவும், இயல்பான வாழ்க்கையை வாழவும் உதவிய அரசுக்கும் மருத்துவர்களுக்கும் சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.