எங்க வீட்டுப் பூப்பந்துகள்! - பழனி.சோ.முத்துமாணிக்கம்
18 Jul 2026, 10:08 pm

எங்க வீட்டுப் பூப்பந்துகள்! - பழனி.சோ.முத்துமாணிக்கம்

“ஓடி வாங்க... ஓடி வாங்க...” என்று சொன்னபடியே இனியன் வீட்டைச் சுற்றி ஓடத் தொடங்கினான். அவன் பின்னால் மல்லியும் முல்லையும் ‘மியாவ்... மியாவ்...’ என்று கத்தியபடி ஓடி வந்துகொண்டிருந்தன. பள்ளிக்குச் சென்ற நேரம் தவிர்த்து, மற்ற எல்லா நேரங்களிலும் இந்தப் பூனைகளுடன்தான் விளையாடிக் கொண்டிருப்பான் இனியன். வீட்டுப் பாடங்களை எழுதும்போதுகூட, இவை அவன் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்து, ‘என்னுடன் பேச மாட்டாயா?’ என்று கேட்பதுபோலப் புலம்பிக் கொண்டிருக்கும். இனியனின் அம்மா தங்கரேவதிக்கு, இந்தப் பூனைகள் வீட்டை அசுத்தப்படுத்தித் தொல்லை தருகின்றனவே என்று கவலை. எங்கிருந்தோ வந்த இந்தப் பூனைக்குட்டிகளை வளர்க்கலாம் என்று மகன் ஆசைப்பட்டதால், அவளும் பொறுமை காத்து வந்தாள். ”அம்மா இங்க பாருங்கம்மா... பூச்செண்டு மாதிரி இருக்குல்ல; ஓடும்போது பூப்பந்துபோல இருக்குதுல்ல; தூக்கி மடியில் வச்சுக்கிட்டா மெதுமெதுன்னு இருக்குமல்ல!” என்று இனியன் கூறும்போது, மகன் மனம் நோகக் கூடாதே என்று, ”ஆமாமா... ஆமாமா...” என்பாள் தங்கரேவதி. ஒருமுறை தங்கரேவதி வேகமாக வீட்டைவிட்டு வெளியே வந்தார். அந்த நேரம் மல்லியைத் துரத்திவந்த முல்லை, அவரது கால்களுக்கு இடையே நுழைந்தது. ”அம்மா!” என்று அலறிய தங்கரேவதி, அதிர்ச்சியில் கீழே விழுந்தார். பெரிய அளவில் அடியொன்றும் படவில்லை என்றாலும், அன்றுமுதல் இந்தக் குறும்புக்காரப் பூனைகளை வீட்டைவிட்டு விரட்டியாக வேண்டும் என்று சினம் கொண்டார். இனியனை அழைத்து, ”டேய்... ராத்திரியில இந்தப் பூனைகள் கத்துறது மனுஷக் குழந்தைகள் அழுகுற மாதிரியே இருக்குடா. எங்கேயாவது கொண்டுபோய் விட்டுட்டு வந்துடுடா, என்னால சகிக்க முடியலடா!” என்றார். ”சரிங்கம்மா... கொஞ்சம் பொறுத்துக்கங்கம்மா, நான் ஏற்பாடு செய்யறேன்,” என்று சமாளித்தான் இனியன். இனியனின் அப்பா பழனிக்குமார் எப்போதும் மகனின் ஆசைகளுக்கு எதிராகப் பேச மாட்டார். அப்பாவும் மகனும் தனியாகப் பேசிக் கொள்ளும்போது, அதிக நேரம் மல்லியையும் முல்லையையும் பற்றித்தான் பேசுவார்கள். இனியன் ஆர்வமாகவும் புதிது புதிதாகவும் கேட்கும் கேள்விகளுக்குச் சலிக்காமல் விடை சொல்வார் பழனிக்குமார். இனியனுக்கு அப்பாவிடம் ஓர் ஐயத்தைக் கேட்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ”அப்பா, மனிதனுக்கு மட்டும்தானே ஆறறிவு? விலங்குகளுக்கு ஐந்துதானே?” ”அதிலென்னடா சந்தேகம்?” ”இல்லப்பா... நம்ம மல்லியும் முல்லையும் நான் சொல்லிக்கொடுத்தபடியெல்லாம் செய்யுது. கைகுலுக்கக் கைநீட்டினா, இதுகளும் முன்னங்காலை நீட்டிக் குலுக்குது. வாகனங்கள் வந்துச்சுன்னா, சத்தம் கேட்டு விலகிப் போகுது.” பழனிக்குமார் சிரித்தபடியே சொன்னார்: ”ஆமாண்டா... ஐந்தறிவுன்னு நாம நினைச்சதெல்லாம் கட்டுப்பாட்டோடு நடக்குது. இந்த ஆறறிவுக்காரர்கள்தான் ஆறாவதைப் பயன்படுத்துறது குறைஞ்சுகிட்டே வருது. டேய்... எல்லாம் சரி, அம்மாவுக்கு இந்த இரண்டும் தொல்லை கொடுக்காமல் பார்த்துக்கடா!” நாட்கள் சில கழிந்தன. ஒரு நாள் பள்ளியை விட்டு வந்தவுடனேயே மல்லியையும் முல்லையையும் தேடினான் இனியன். அம்மாவும் வீட்டுக்குள் இல்லை. வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் தேடினான். அங்கே அவன் கண்ட காட்சியை அவனாலேயே நம்ப முடியவில்லை! கொய்யா மரத்தின் அடியில் அம்மா உட்கார்ந்திருந்தார். அவரது மடியில் மல்லி சொகுசாகப் படுத்திருந்தது. அம்மாவின் ஒரு கை முல்லையை அன்போடு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. இனியன் மகிழ்ச்சியோடு அம்மாவைக் கூப்பிட்டான். ”அம்மா... என்னம்மா அதிசயமா இருக்கு?” தங்கரேவதி சிரித்துக்கொண்டே, ”அங்கே பாரடா... என் உயிரைக் காப்பாற்றினதே இந்த இரண்டு செல்லங்கள்தான்!” என்றார். அங்கே சற்றுத் தொலைவில், ஒரு கட்டுவிரியன் பாம்பு பூனைகளால் கடியுண்டு இரண்டு துண்டுகளாகக் கிடந்தது!