எரிசக்தி நெருக்கடி கோடிக்கணக்கான மக்களை பசியில் தள்ளும் ஆப்பிரிக்க மக்களுக்கு பெரும் பாதிப்பு அபாயம்
22 Jul 2026, 9:22 pm

எரிசக்தி நெருக்கடி கோடிக்கணக்கான மக்களை பசியில் தள்ளும் ஆப்பிரிக்க மக்களுக்கு பெரும் பாதிப்பு அபாயம்

ரோம், ஜூலை 22- ஐ.நா. உணவுப் பாதுகாப்பு அறிக் கையில், 2030-க்குள் 50 கோடி க்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து நாள்பட்ட பசியை எதிர்கொள்ள நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆப்பிரிக்கா தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் அதிகரித்து வரும் எரிசக்தி நெருக்கடியானது கோடிக்க ணக்கான மக்களைப் பசியில் தள்ளக் கூடும் என்று ஐ.நா அவையின் சர்வதேச விவசாய வளர்ச்சி நிதியத்தின் (IFAD) தலைவர் அல்வாரோ லாரியோ எச்சரித்துள்ளார். மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் அதிகளவில் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீதான போர், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்தடைகள் தொடர்ந்தால், கூடுதலாக 90 லட்சம் முதல் 1.8 கோடி மக்கள் பட்டினியில் தள்ளப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

மேலும் உலக அளவில் வறுமையை குறைப்பதற்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக போர்கள் உள்ளன. போர்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக கப்பல் போக்குவரத்து, எரிசக்தி விநியோகம், விவசாயத்திற்கு தேவையான உரங்களின் விநியோகத்தை தடுப்பது, ஏற்கெனவே பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தில் உணவுக்கான செலவுகளை அதிகரிக்கின்றன.

அதிக எரிபொருள் விலையானது உரங்கள் மற்றும் விவசாய உற்பத்தியைப் பாதிக்கின்றன. தண்ணீர் இறைக்கவும், பயிர்களை அறுவடை செய்யவும், சந்தைக்குப் பொருட்களைக் கொண்டு செல்லவும் டீசல் எரிபொருளை நம்பியிருக்கும் சிறு விவசாயிகளுக்கு இதன் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது என அல்வாரோ லாரியோ குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் பசி

உலகளவில் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ள முதன்மைப்பகுதியாக ஆப்பிரிக்கா உள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆசியாவைவிட அதிக மக்கள் வறுமையில் வாடும் நாடாக ஆப்பிரிக்கா உள்ளது. 2030-க்குள் உலகின் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் வாழும் கண்டமாக ஆப்பிரிக்கா இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

போர்கள் நிறுத்தப்பட்டு போதிய முதலீடுகள் செய்யாவிட்டால், தற்போது நடைபெற்று வரும் போர்கள் , எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் தீவிர காலநிலை மாற்றங்கள் ஆகியவை வளர்ச்சியை தடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.