பெண்ணியமும் தொழிற்சங்கவாதமும் இணைந்த போராட்டப் பாதை!
21 Jun 2026, 9:24 pm

பெண்ணியமும் தொழிற்சங்கவாதமும் இணைந்த போராட்டப் பாதை!

தொழிற்சங்க இயக்கத்தில் செயல்படுபவர்கள் வறட்டு வேதாந்திகள் அல்ல; அவர்கள் இயக்கத்திற்காகத் தங்களது சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்யக்கூடியவர்கள்” என்ற ஆழமான உண்மையை நெஞ்சார உணர்த்துகிறது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் வேலூர் கோட்டத் தலைவர்களில் ஒருவரான தோழர் எஸ். ஜெயஶ்ரீ எழுதிய ‘என் தடம்’ என்னும் நூல். தொழிற்சங்கம் என்றாலே சம்பள உயர்வு, போனஸ் கேட்டு கொடி பிடிப்பவர்கள் மட்டுமே என்ற பொதுச் சமூகக் கருத்தை உடைத்து, ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டுவது எவ்வளவு பெரிய சவால் என்பதைத் தன் சொந்த அனுபவங்களின் வழியே இந்நூலில் ஆசிரியர் விரிவாகப் பேசியுள்ளார்.

ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, இன்சூரன்ஸ் பொதுத்துறை நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த ஒரு பெண், எப்படி ஒரு தொழிற்சங்கத் தலைவராக உயர்ந்தார் என்பதை இந்நூல் ஒரு முக்கிய ஆவணமாகப் பதிவு செய்கிறது. பெண்கள் பொதுவாழ்விற்கு வரும்போது எதிர்கொள்ளும் சவால்கள், எல்.ஐ.சி நிறுவனத்தின் தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஊழியர்கள் முன்னெடுத்த நீண்டகாலப் போராட்டங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் சங்கத்தின் பங்கு ஆகியவற்றைத் தரவுகளுடன் ஆசிரியர் விளக்குகிறார்.

பணி சார்ந்த கோரிக்கைகளைத் தாண்டி, சமூகத்தில் நிலவும் சாதிய, பாலினப் பாகுபாடுகளுக்கு எதிரான இடதுசாரி சித்தாந்தப் பார்வையும், சமூக நீதிக்கான நிலைப்பாடும் இந்நூலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. மிக எளிமையான, நேர்மையான மொழியில் தன் வெற்றிகளைப் போலவே தான் சந்தித்த தோல்விகளையும், சங்கடங்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள விதம் அடுத்த தலைமுறை பெண் ஊழியர்களுக்கும், இளம் தொழிற்சங்கவாதிகளுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகும். பெண்ணியமும் தொழிற்சங்கவாதமும் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாய் விளங்கும் இப்புத்தகம், தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமாகும். என் தடம் (அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கரம் பிடித்து…) ஆசிரியர்: எஸ். ஜெயஸ்ரீ விலை: ₹50/- தொடர்புக்கு: 94860 78070