சென்னை விரைவு செய்திகள்
6 Feb 2026, 5:17 pm

பறவைக் காய்ச்சல் தொற்று: ‘மக்கள் அச்சப்பட வேண்டாம்!’

சென்னை, பிப்.6 - சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், H5N1 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கோழிப் பண்ணைகளுக்குள் வெளி நபர்களை அனுமதிக்கக் கூடாது, பிற மாநிலங்களில் இருந்து கோழிகளையோ இறைச்சியையோ கொண்டுவரக் கூடாது, உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது என்று கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவிக்கையில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், திறந்தவெளியில் இறந்த பறவைகளைக் கண்டால் நேரிடையாகத் தொடவோ எடுக்கவோ வேண்டாம் என்றும் கூறினார். தற்போது மனிதர்களுக்கு இந்தத் தொற்று கண்டறியப்படவில்லை என்றும், மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

செவிலியர் மூலம் கீமோதெரபி சேவைகளை வழங்கத் திட்டம்

சென்னை, பிப் 6- தீவிர சிகிச்சைக்கான மருந்துகளை வழங்கும் முன்னணி தளமான மிஸ்டர்மெட் (MrMed), தனது அடுத்தகட்ட விரிவாக்கத்தை அறிவித்துள்ளது. சென்னை, டெல்லி, பெங்களூருவைத் தொடர்ந்து தற்போது கவுஹாத்தியிலும் தனது நேரடி விநியோ கத்தைத் தொடங்கியுள்ளது. பெங்களூருவில் புதிய குளிர்சாதனச் சேமிப்புக் கிடங்கை அமைத்துள்ள இந்நிறுவனம், உயிர் காக்கும் மருந்துகளை நோயாளி களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் தேவாஷிஷ் சிங் மற்றும் இணை நிறுவனர் சௌரப் ஜெயின் ஆகியோர் சென்னை யில் செய்தி யாளர்களிடம் பேசுகை யில், , மருந்துகளைத் தாண்டி வீட்டிலேயே செவிலியர் மூலம் கீமோ தெரபி போன்ற ஆதரவுச் சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்தியா மரக்கண்காட்சி

பெங்களூரு, பிப் 6- பெங்களூருவில் உள்ள பி.ஐ.இ.சி வளாகத்தில், இந்தியா வுட் 2026 என்று மரச் சாமான்கள் கண்காட்சி பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை நடைபெறவுள்ளது. இந்த 26-வது பதிப்பில், 50 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கின்றன.இந்தியாவை மர விற்பனையில் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் முக்கிய மையமாக மாற்றுவதே இதன் நோக்கம் என மேலாண்மை இயக்குநர் சோனியா பிரசார் தெரிவித்துள்ளார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடை யிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இத்துறைக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். 85,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இக்கண்காட்சியில், மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் நவீன மரப்பணி தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. சுமார் 90,000 தொழில் நிபுணர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நில மோசடிக்கு சாட்சி கையொப்பமிட்டவர் கைது

அம்பத்தூர், பிப். 6- போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்ட வழக்கில் சாட்சி கையொப்பமிட்ட நபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். புழல் கிராண்ட் லைன் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி (60). இவரது வீட்டின் அருகில் தந்தை கந்தாசாமிக்கு சொந்தமான 1,736 சதுர அடி நிலம் இருந்தது. கடந்த 1996ஆம் ஆண்டு கந்தசாமி உயிரிழந்தார். இதையடுத்து அந்த சொத்து அவரது வாரிசுகள் கமலா, ராணி, வசந்தி, விஜயா, செல்வராஜன் ஆகியோருக்கு சொந்தமானது. இந்நிலையில் இவர்களது சகோதரர் செல்வராஜன் என்பவர், மேற்படி குடும்ப சொத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி, அம்மாயி என்பவரிடம் பேசி, அவரது பூர்வீக சொத்து என்பது போல் போலியான ஆவணங்களை செல்வராஜன் தயார் செய்து, தனது மனைவி ஜெயலட்சுமி பெயரில் மேற்படி சொத்தை கிரையம் செய்து கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு மேற்படி நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்க செல்வராஜன் முயன்றார். அப்போது வசந்தி வில்லங்கச் சான்று போட்டு பார்த்த போது நில மோசடியில் செல்வராஜன் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில், அம்மாயி மற்றும் தமிழரசன் ஆகியோர் சாட்சி கையொப்பமிட்டுள்ளனர். இதுகுறித்து வசந்தி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே செல்வராஜன், விஜயலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். மேலும் மோசடிக்கு உடந்தையாக சாட்சி கையொப்பமிட்ட புழல் காவாங்கரை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த தமிழரசன் (41) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனர். பின்னர் அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஆவடியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் மின்வாரிய அதிகாரி கைது

திருவள்ளூர், பிப் 6- திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோவில்பதாகை பொன்னம்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் ராகவன் (வயது 47). விவசாயியான இவர் இப்பகுதியில் தனக்குச் சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டிற்கு நான்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். அதாவது இரண்டு லயன் சிங்கிள் ஃபேஸ் ஆகவும், இரண்டு த்ரீ ஃபேஸ் வழங்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் மின் வருவாய் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 47) என்பவர் புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 15 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும் என ராகவனிடம் தெரிவித்துள்ளார். லஞ்சப்பணம் கொடுக்க விரும்பாத ராகவன், இது தொடர்பாக திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறையில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆய்வாளர் மாலா மற்றும் காவல்துறையினர் ஆவடி கோவில்பதாகை மின்வாரிய அலுவலகப் பகுதியில் மறைந்திருந்தனர். அப்போது ராகவனிடம் இருந்து மின்வாரிய அதிகாரி பாலசுப்பிரமணி ரூ. 15 ஆயிரம் லஞ்சப்பணம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். லஞ்சப்பணம் ரூ. 15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.