தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியத் தேர்தல் ஆணையம்: பாஜகவின் நிழல் அணியா? - எம்.கண்ணன்

13 Apr 2026, 4:16 pm
இந்தியத் தேர்தல் ஆணையம்: பாஜகவின் நிழல் அணியா? - எம்.கண்ணன்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, தேர்தல் ஆணையம் என்பது எந்தவொரு அரசியல் அழுத்தத்திற்கும் உட்படாத தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், "பாஜகவின் நிழல் அணியா?" என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

ஞானேஷ் குமாரின் பின்னணி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பணிக்காலம் முழுவதையும் உற்று நோக்கினால், அவர் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களுக்கு, குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எவ்வளவு நெருக்கமானவர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அமித் ஷா எந்தத் துறைக்குச் சென்றாலும், அங்கே ஞானேஷ் குமாருக்கு ஒரு முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்செயலான நிகழ்வா?

காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவு ரத்து!

காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபோது, அதன் பின்னணியில் இருந்த அனைத்துத் திட்டங்களையும் (Plan A to Z) வகுத்துக் கொடுத்தவர் இவரே. இதன் மூலம் ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் கொள்கைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாக அவர் செயல்பட்டார் என்பதுதான் உண்மை.

அயோத்தி ராமர் கோவில் தொடர்பு

ஞானேஷ் குமார் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராக இருந்தபோது, அயோத்தி தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்புப் பிரிவின் (Ayodhya Desk) பொறுப்பாளராகச் செயல்பட்டார். குறிப்பாக, அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளை தொடர்பான பணிகளிலும் ஒரு பிரச்சாரகர் போன்றே செயல்பட்டவர். ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்து செயல்பட்ட ஒருவர், எப்படி ஒரு தன்னாட்சி அமைப்பின் உயர் பதவியில் அமர முடியும்?

அந்த 745 கோடி மர்மம்!

2016-ல் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, வெறும் ஐந்தே நாட்களில், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா இயக்குநராக இருந்த அகமதாபாத் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ₹745.59 கோடி பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டன. இந்தியாவின் 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலேயே அதிகப் பணம் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி இதுதான்.

அந்த நேரத்தில் ஞானேஷ் குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும், கறுப்புப் பணப் புழக்கத்தைக் கண்காணிக்கும் குழுக்களில் பிரதிநிதியாகவும் இருந்தார். இவ்வளவு பெரிய தொகை ஒரே வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டபோது, அதைத் தடுக்கவோ அல்லது கேள்வி கேட்கவோ வேண்டிய இடத்தில் இருந்தவர் அமைதி காத்தார்.

அதேபோல், பல மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் பாஜக பிரமுகர்கள் கறுப்புப் பணத்தை மாற்றியதாகப் புகார்கள் வந்தன. ஆனால், ஞானேஷ் குமார் அந்தத் தரவுகளை வெளியே விடாமல் தடுத்ததாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில்தான் அமித் ஷா நேரடியாகக் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராக ஞானேஷ் குமாரை நியமித்தார். அதன் பின் இந்த வங்கிகள் மீதான தணிக்கை அறிக்கைகளைக் கையாண்டபோது, விசுவாசத்திற்கான கைமாறாகப் புகார்களுக்கு "கிளீன் சீட்" கொடுத்ததும் இதே ஞானேஷ் குமார்தான்.

அமித் ஷாவின் நிழல்!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, 2023 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பின்படி, தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகிய மூவரும் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதனால் பதறிப்போன ஒன்றிய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது (தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், 2023). அக்குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாகப் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு மத்திய அமைச்சரைச் சேர்த்தது. புதிய குழுவில் பிரதமர் மற்றும் அவர் நியமிக்கும் ஒரு மத்திய அமைச்சர் இருப்பதால், தேர்வுக் குழுவில் அரசுக்கு 2:1 என்ற பெரும்பான்மை கிடைத்துவிடும். இந்தச் சதித்திட்டத்தின் வழியாகவே அமித் ஷாவின் நிழலாக இருந்து வந்த ஞானேஷ் குமார், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

மோடியின் முகமையா ?

தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பாகச் செயல்படாமல், ஆளும் பாஜகவின் விருப்பப்படி தேதிகளை முடிவு செய்யலாமா? பிரதமர் மோடி அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க வசதியாக, குஜராத் முதல் தமிழ்நாடு வரை பலமுறை தேர்தல் தேதிகள் திட்டமிட்டுத் தள்ளிப்போடப்பட்டுள்ளன.

2024 ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிராக "வெறுப்புப் பேச்சு" பேசியதாக 2,000 புகார்கள் வந்தன. வழக்கமாகத் தவறு செய்த நபருக்கே நோட்டீஸ் அனுப்பப்படும். ஆனால், வரலாற்றிலேயே முதல்முறையாகப் பிரதமர் மோடியைத் தவிர்த்து, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதிலும் "பிரதமர்" என்ற பெயரைக் குறிப்பிடாமல் "நட்சத்திரப் பேச்சாளர்" என்று மழுப்பியதுடன், தேர்தல் முடியும் வரை அவர் தடையின்றிப் பிரச்சாரம் செய்ய வழிவகை செய்தது.

அதே சமயம் ராகுல் காந்தி, கெஜ்ரிவால் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது புகார் வந்தபோது, அவர்களுக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன், உடனடி பிரச்சாரத் தடைகளும் விதிக்கப்பட்டன. பாஜக தலைவர்களின் பேச்சை "கருத்துரிமை" என்றும், எதிர்க்கட்சிகளின் பேச்சை "விதிமுறை மீறல்" என்றும் முத்திரை குத்தும் தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடு, அது ஒரு நடுநிலையான அமைப்பல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது.

நேரடி கூட்டணி?

தேர்தல் ஆணையம் ஒரு 'சமமான ஆடுகளத்தை' உருவாக்குவதற்கு மாறாக, ஓர் அணியுடன் கூட்டணி வைத்துச் செயல்படுவது போல அதன் நடவடிக்கைகள் இருக்கின்றன. குறிப்பாக, தேர்தல் நேரங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள உயர் அதிகாரிகளை (IAS/IPS) தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்கிறது. இந்த இடமாற்றங்களைச் செய்யும்போது எதிர்க்கட்சி மாநில அரசுகளுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்கிறது. அதே சமயம் பாஜக ஆளும் மாநிலங்களில் அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதில்லை.

தேர்தல் நேரத்தில் அனுபவம் வாய்ந்த தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை மாற்றுவது, அந்த மாநிலத்தின் நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து, ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் ஒரு சூழ்ச்சியின்றி வேறென்ன? மாற்றப்படும் அதிகாரிகள் "ஆளுங்கட்சியின் விசுவாசிகள்" என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதன் மூலம், தேர்தல் களத்தில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு எதிர்மறையான சூழலை ஆணையம் உருவாக்குகிறது. இந்த இரட்டை நிலைப்பாடுதான் தேர்தல் ஆணையம் பாஜக அணியில் நேரடியாக இணைந்திருக்கிறதோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் வலுப்படுத்தியிருக்கிறது.

தேர்தல் ஆணையமா? பாஜக அலுவலகமா?

கேரளாவில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வக் கடிதத்தில் பாஜக முத்திரை இருந்தது எதைக் காட்டுகிறது? தேர்தல் ஆணையத்தின் ரகசியக் கோப்புகள் பாஜக அலுவலகங்களில் கையாளப்படுகின்றனவா என்ற அச்சத்தை இது உறுதிப்படுத்துகிறது. தொழில்நுட்பத் தவறு என்று ஆணையம் கூறினாலும், ஒரு தன்னாட்சி அமைப்பின் ஆவணத்தில் ஆளும் கட்சியின் முத்திரை எப்படி வர முடியும்?

எஸ்ஐஆர் (SIR) திருத்தங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள், குறிப்பாகச் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் பெயர்கள் நீக்கப்படுவது ஏன்? பாஜகவின் ஐடி பிரிவினர் (IT Wing) தேர்தல் ஆணையத்தின் தரவுகளைக் கையாளுவதாகவும், அவர்கள் கொடுக்கும் பட்டியலின் படியே பெயர்கள் நீக்கப்படுவதாகவும் வரும் புகார்களை எப்படிப் புறந்தள்ள முடியும்? தேர்தல் தரவுகளை நிர்வகிக்கப் பாஜகவிற்கு நெருக்கமான குஜராத் நிறுவனங்களை ஆணையம் பயன்படுத்துவது ஏன்? VVPAT இயந்திரங்களை முழுமையாக எண்ண வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட ஆணையம் தொடர்ந்து நிராகரிப்பது ஏன்?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயல்பாடுகள் ஒரு நடுநிலையாக தெரியவில்லை. தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தருணம் இது. தேர்தல் ஆணையம் என்பது பாஜகவின் ஒரு கிளை அலுவலகமாகச் செயல்படுவதைத் தடுத்து நிறுத்தி, அதன் அரசியல் சார்பற்ற தன்னாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு "நடுவர்" ஆட்டக்காரராக மாறும்போது, ஆட்டம் நியாயமானதாக இருக்காது என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற, தமிழகத்தைப் பாதுகாக்க, கட்சியினர் மட்டுமின்றி ஒவ்வொரு வாக்காளரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

- எம்.கண்ணன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.