தேர்தல் தூதுவர்களான மெய்யன் - மெய்யாள் விழிப்புணர்வு அஞ்சல் தலை வெளியீடு
28 Mar 2026, 4:13 pm
<p><strong>தேர்தல் தூதுவர்களான மெய்யன் - மெய்யாள் விழிப்புணர்வு அஞ்சல் தலை வெளியீடு</strong></p>
<p>கும்பகோணம், மார்ச் 28- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் அருகே, மெய்யன்- மெய்யாள் தேர்தல் விழிப்புணர்வு சிறப்பு தபால் தலையினை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா. பிரியங்கா பங்கஜம், வெளியிட்டார். 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தேர்தல் தூதுவர்களாக மெய்யன் - மெய்யாள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் முதல் முறையாக மக்கள் பயன்படுத்தும் வகையில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில், தஞ்சாவூர் மாவட்டத்திற்கான சட்டமன்றத் தேர்தல் தூதுவர்களான மெய்யன் - மெய்யாள் குறித்த விழிப்புணர்வு அஞ்சல் தலைகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டார். மேலும் அங்கிருந்த பொதுமக்களிடம் நேர்மையாக நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களையும் வழங்கி, அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமலை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
