தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எல்நினோ தாக்கத்தால் பலவீனமாகும் தென்மேற்கு பருவமழை: எச்சரிக்கும் நிபுணர்கள்!

29 May 2026, 12:58 pm
எல்நினோ தாக்கத்தால் பலவீனமாகும் தென்மேற்கு பருவமழை: எச்சரிக்கும் நிபுணர்கள்!

இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட குறைவாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல்நினோ தாக்கம் விரைவில் உருவாக உள்ளதால், 2026ஆம் ஆண்டின் பருவமழை பலவீனமடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த மழைப்பொழிவு பதிவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

எல்நினோ என்பது, புவி நடுக்கோட்டை ஒட்டிய பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் வானிலை நிகழ்வாகும். கடந்த சில வாரங்களாக பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரிப்பு தீவிரமாக இருப்பதாகவும், 2026 ஜூலை மாதத்திற்குள் எல்நினோ நிகழ்வு தொடங்கக்கூடும் என்றும் அமெரிக்காவின் கடல்சார் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எல்நினோ தாக்கம் உருவாகும் காலங்களில் உலகின் பல பகுதிகளில் காலநிலை மாற்றங்கள் தீவிரமடைவது வழக்கம். இந்தியாவில் குறிப்பாக வெப்பநிலை அதிகரிப்பு, கடுமையான வெப்ப அலை மற்றும் பருவமழை குறைவு போன்ற விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை, இந்தியாவின் ஆண்டு மழைப்பொழிவில் சுமார் 70 சதவீதத்தை வழங்குகிறது. நாட்டின் நீர்வளத்தை நிரப்புவதிலும், பாசன வசதி இல்லாத விவசாய நிலங்களை தாங்குவதிலும் இந்த மழை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் சுமார் பாதி மக்கள் நேரடியாக விவசாயத்தை சார்ந்தே வாழ்கின்றனர்.

2026ஆம் ஆண்டுக்கான பருவமழை, நீண்டகால சராசரியின் 90 சதவீதம் மட்டுமே இருக்கும் என மத்திய புவியியல் அமைச்சக செயலாளர் எம். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட முன்கணிப்பில் இது 92 சதவீதமாக இருந்தது. 2015ஆம் ஆண்டில் எல்நினோ தாக்கத்தால் மழை 87 சதவீதமாக குறைந்திருந்த நிலையில், அதன்பிறகு இதுவே மிகவும் பலவீனமான பருவமழையாக இருக்கும் என கூறப்படுகிறது.

பருவமழை குறைவு, விவசாய உற்பத்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக பருப்பு வகைகள், பருத்தி, எண்ணெய் விதைகள் மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களின் ஆரம்பகட்ட விதைப்பு பாதிக்கப்படலாம். இதனால் விவசாய உற்பத்தி குறைந்து, உணவுப் பொருட்களின் விலை உயர்வதுடன் பணவீக்கமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மேலும், கிராமப்புற மக்களின் வருமானம் குறைவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசு மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம் என்றும், இல்லையெனில் பொதுமக்கள் கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.