எகிப்து பாலைவனத்தின் அடியில் 7 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 'சுறா உலகம்' கண்டுபிடிப்பு!
25 Aug 2026, 8:55 pm

கெய்ரோ: எகிப்தின் வறண்ட பாலைவனப் பகுதியில், சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வெப்பமண்டல கடல் இருந்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கெய்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், எகிப்தின் அபு-தார்தூர் பீடபூமியின் மேற்குப் பாலைவனப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 5 அழிந்துபோன சுறா இனங்களைச் சேர்ந்த 14 புதைபடிவப் பற்கள் கண்டெடுக்கப்பட்டன.

கண்டறியப்பட்ட சுறா இனங்களில் Serratolamna cf. serrata மற்றும் Squalicorax bassanii ஆகியவை இதற்கு முன்பு எகிப்தில் கண்டறியப்படாதவை. மேலும், ஊசி போன்ற கூர்மையான பற்களைக் கொண்ட Scapanorhynchus cf. raphiodon சுறா இனத்தின் புதைபடிவம் ஆப்பிரிக்காவில் இதற்கு முன்பு கண்டறியப்படாமல் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சுறாக்களின் பற்கள் வெவ்வேறு வடிவங்களில் இருந்துள்ளன. சில ஊசி போன்றும், சில அகலமாகவும் ரம்பம் போன்ற விளிம்புகளுடனும் காணப்பட்டன. இதன் மூலம் வெவ்வேறு சுறா இனங்கள் வெவ்வேறு வகையான இரைகளை வேட்டையாடியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சுறா புதைபடிவங்களுடன் சிறிய மீன்கள், முதுகெலும்பில்லா உயிரினங்கள் மற்றும் கடல்வாழ் ஊர்வனவற்றின் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அந்தப் பகுதி கிரிட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில் (14.5 கோடி முதல் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு) வளமான கடல் சூழலாக இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன.

அந்தக் காலத்தில் பூமி இன்றைவிட வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருந்ததாகவும், கடலின் ஆழத்திலிருந்து ஊட்டச்சத்துக்கள் மேலே கொண்டுவரப்பட்டதால் பிளாங்க்டன் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் பெருகி, அவற்றைச் சார்ந்த மிகப்பெரிய கடல்வாழ் உயிரினச் சங்கிலி உருவாகியிருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உலகின் மிக வறண்ட பகுதிகளில் ஒன்றாகக் காணப்படும் எகிப்திய பாலைவனம், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சுறாக்கள் உள்ளிட்ட ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்த செழிப்பான கடல் பகுதியாக இருந்திருக்கலாம் என்பது இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.