தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும் கல்வியாளர்கள் வலியுறுத்தல்
13 May 2026, 11:53 pm

தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும் கல்வியாளர்கள் வலியுறுத்தல்

சென்னை, மே 13- நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகள் காரணமாக அத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், முறையான தேர்வினை நடத்தத் தவறிய தேசிய தேர்வு முகமையை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்று மூத்த கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தேர்வு ரத்து நடவடிக்கையானது மருத்துவக் கனவில் இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கள செயல்பாட்டாளரும் கல்வியாளரு மான பிரின்ஸ் கஜேந்திரபாபு இது குறித்துக் கூறுகையில், நீட் தேர்வு அறி முகப்படுத்தப்பட்ட காலம் முதலே ஆண்டு தோறும் ஏதேனும் ஒரு வடிவில் குழப்பங் கள் தொடர்கதையாகி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தத் தேர்வு முறையானது ஒரு கல்வி மதிப்பீடாக அமையாமல், வெறும் வணிகம் சார்ந்த போட்டியாக மட்டுமே மாறிவிட்டது என்றும், தேர்வைக் கொண்டு வந்ததன் நோக்கம் சிதைந்துவிட்டதாகவும் அவர் தெரி வித்துள்ளார்.

தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது நீட் தேர்வு முறையின் தோல்வியையே பறைசாற்றுகிறது எனக் குறிப்பிட்ட அவர், மீண்டும் ஒருமுறை தேர்வை நடத்துவது மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும் சுமையையும் தரும் என்று கூறியுள்ளார்.

எனவே, தேசிய தேர்வு முகமையை உடனடியாகக் கலைத்துவிட்டு, பழைய நடைமுறைப்படி பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரும் சவாலுக்கு உள்ளாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டிற்கும் மத்திய கல்வி அமைச்சகமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதற்குத் தீர்வாக ஒன்றிய கல்வி அமைச்சர் தனது பதவியை விலகுவதே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தேசிய தேர்வு முகமை தகுதியிழந்து விட்டதால் அதைக் கலைக்க வேண்டும் எனக் கூறிய அவர், வினாத்தாள் கசிவில் தொடர்புடைய அதிகாரிகள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாய வேண்டும் என்றும், இத்தகைய குழப்பங்கள் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை முறை யையுமே சீர்குலைத்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.