தேர்தலுக்குப் பின் அதிமுகவை பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி இணைத்து விடுவார் அரியலூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல்!
12 Mar 2026, 4:20 pm
<p><strong>தேர்தலுக்குப் பின் அதிமுகவை பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி இணைத்து விடுவார் அரியலூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல்!</strong></p>
<p>அரியலூர், மார்ச் 12- “பாசிச பாஜக அரசால் வஞ்சிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது; வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடினார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் புதிய ஒன்றிய திமுக அலுவலகம் மற்றும் அண்ணா, கலைஞர் சிலைகளைத் திறந்து வைத்து அவர் ஆற்றிய உரையின் சாராம்சம்: “ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்வதில்லை. கல்வி நிதி, குடிநீர் திட்ட நிதி என எதையும் வழங்காமல் 100 நாள் வேலைத் திட்டத்தையும் முடக்கப் பார்க்கிறது. இந்த அநியாயங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி துணை போகிறார். சிபிஐ, வருமான வரித்துறை மிரட்டல்களுக்குப் பயந்து ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அவர் அடகு வைக்கப் பார்க்கிறார். பீகாரில் நிதிஷ்குமாரை ஏமாற்றியது போல, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கும் எண்ணம் அமித்ஷாவிற்கு கிடையாது; அதிமுகவை அபகரிப்பதே அவர்களின் நோக்கம். ஆனால், திமுக இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சாது. டெல்லி அணியை வீழ்த்தத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ்நாடு அணி’ களத்தில் நிற்கிறது. வரும் தேர்தலில் அந்த அணியை மக்கள் ‘கிளீன் போல்ட்’ செய்வார்கள். திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, தேவனூரில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தனது தந்தையின் நினைவாக அமைத்துள்ள நூலகம் மற்றும் பயிற்சி மையங்களையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் எம்.பி ஆ. ராசா, எம்.எல்.ஏ-க்கள் க.சொ.க. கண்ணன், பிரபாகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
