எடப்பாடியின் மனக் கணக்கு... உதவாத ஓட்டைக் கணக்கு - எஸ்.பி.ராஜேந்திரன்
11 Dec 2025, 3:52 pm

எடப்பாடியின் மனக் கணக்கு... உதவாத ஓட்டைக் கணக்கு

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10 புதனன்று சென்னையில் நடைபெற்றது. அடுத்த ஆண்டு நடைபெற வுள்ள சட்டமன்றத் தேர்தலில் 210 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்பட்ட விஷயங்களை ஆராய்ந்தால், அதிமுக எதிர்கொள்ளும் கடுமையான அரசியல் நெருக்கடிகளும் கொள்கைக் குழப்பங்களும் மக்கள்நலன் சார்ந்த நிலைப்பாடுகளின் வெற்றிடமும் தெளிவாகத் தெரிகின்றன. பொதுக்குழுக் கூட்டம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், இடைத் தரகர்கள், துரோகிகள் பற்றிய பேச்சுகளே ஆதிக்கம் செலுத்தின. கட்சித் தலைமை, நேரம் முழுவதையும் எதிரிகளும் துரோகிகளும் பற்றி பேசுவதற்கே செலவிட்டது. இது, சொந்தக் கட்சிக்குள்ளேயே அச்சமும் அவநம்பிக்கை யும் அதிகம் இருக்கிறது என்பதைக் காட்டு கிறது.

எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் ஆற்றிய உரைகள், வெளியில் எதிரிகளை எதிர்கொள்வ தை விட உள்ளே யார் துரோகி என்று கண்டு பிடிப்பதிலேயே தலைமை கவனம் செலுத்து கிறது என்ற பலவீனத்தை வெளிப்படுத்தியது. கூட்டணிக் குழப்பம் அதிமுகதான் கூட்டணித் தலைமை என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இப்படி ஒரு தீர்மானமே கொண்டு வர வேண்டிய நிலை ஏற் பட்டிருப்பது, பாஜகவின் அழுத்தத்தையும் அதி முகவின் தற்காப்பு முயற்சியையும் காட்டுகிறது. கூட்டணியை யார் நடத்திச் செல்லவேண்டும், ஓ.பன்னீர்செல்வம் அல்லது டி.டி.வி.தினகரன் சேர்க்கப்பட வேண்டுமா, தில்லி முடிவு செய்ய வேண்டுமா என்று தொடர்ந்து வரும் பேச்சுக்கள், ஏற்கெனவே, அதிமுக தலைமை குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக ஒரு படிமத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் பொதுக்குழுவில், ‘உறவாடிக் கெடுப்பவர்கள்’ என்ற எடப்பாடி பழனிசாமியின் எச்சரிக்கை, அண்ணாமலை யைத்தான் குறிக்கிறது என்று அதிமுகவினர் பேசிக் கொண்டது தெரிந்தது. இவையெல்லாம் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக தலையிட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள்தான். தமிழகத்தின் மிகப்பெரிய மாநிலக் கட்சியாக இருந்த அதிமுக, தன் கூட்டணி கட்டமைப்பையே பாரதிய ஜனதா கட்சி தீர்மானிக்க அனு மதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்வியையே இது எழுப்புகிறது.

ஓட்டைக் கணக்கு எடப்பாடி பழனிசாமி தமது உரை யில், அதிமுக அணிக்கு 41.3 சதவீத வாக்கு இருப்பதாக கூறினார். அதை வைத்து 210 இடங்களை கைப்பற்றுகிறோம் என்று இலக்கு நிர்ணயித்தார். இது முழுக்க பழைய தரவுகளைக் கூட்டிப் போட்ட ஓட்டைக் கணக்கு ஆகும். 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 31.06 வாக்குகள் பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 39.70 வாக்குகள் பெற்றது. 2024 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்து தனித்தனியாக நின்றதில் அதிமுக அணி 23 சதவீதம் வாக்குகளும், பாஜக அணி 18.24 சதவீதம் வாக்குகளும் பெற்றன. கடைசியாக இரு அணிகளும் தனித்தனியாக நின்று பெற்றதை கூட்டித்தான், 41.3 சதவீதம் என்று கணக்கு போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகை யில், பிரிந்த கூட்டணி (ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பாமக உடைசல், புதிய கட்சிகள்) என பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிடமிருந்து பிரிந்ததால் அதிமுகவுக்கு சாதகமாக விழுந்த வாக்குகளும் இதில் இருக்கின்றன என்பதை அவர் மறந்துவிட்டார். இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், அதிமுகவின் நிலைப்பாட்டால் எதிர் நிலைக்கு சென்றுள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களையும் சேர்த்து கணக்குப் போடுகிறார். மேலும் புதிதாக வந்துள்ள விஜய் கட்சி, அதிமுகவின் வாக்கு அடித்தளத்திற்கு தான் சவாலாக உள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுக்கா மல், கடந்தகால தரவுகளை அப்படியே போட்டு 210 இடங்கள் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வதில் எந்த அறிவியல்பூர்வ அடிப்படையும் இல்லை.

முதலில் அக்கட்சி தனது உள்கட்சிப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும், கூட்டணி தலைமையைத் தெளிவுபடுத்த வேண்டும், அதன் பிறகுதான் எண்களைப் பற்றிப் பேச முடியும். ‘ஓட்டு வராது’ எஸ்.பி.வேலுமணியின் பேச்சில் பூத் முகவர்கள் களத்துக்குப் போய் வேலை பார்க்க வேண்டும், திமுக மீதான மக்கள் கோபத்தால் மட்டுமே ஓட்டு நமக்கு வராது என்று கூறியிருப்பது, அதிமுக தொண்டர்கள் சோர்வு நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடே. சி.வி.சண்முகம் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று பெரும் கூச்சல் போட்டார். அவரது உரையில், நாங்கள் துரோகிகள் அல்ல என்றும், நம்பிக்கையோடு இருங்கள் என்றும் பேசினார். யாரும் நம்மை சந்தேகிக்கிறார்களோ என்ற பதற்றம் தான் அவரது பேச்சில் வெளிப்பட்டது. மதவாத அரசியலுக்கு அடிபணிந்த அதிமுக திருப்பரங்குன்றம் பிரச்சனையில் அதிமுகவின் நிலைப்பாடு குழப்பமானதாக உள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு, இந்துத்துவா அமைப்புகளின் கோரிக்கை, சிறுபான்மை யினரின் அச்சம் போன்ற விஷயங்களில் ஒரு தெளிவான நிலைப்பாடு எடுக்காமல் நழுவியுள்ளது.

இது அதிமுகவினர் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சித்திட்டத்தைப் பின்பற்று கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளது. அதிமுக ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின் ஓர் அங்கமாக இருந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் சமூக நீதி, மதச்சார்பின்மை, என்பவை அக்கட்சியின் அடிப்படைகளாக இருந்தன. ஜெயலலிதாவும் கடைசி வரை பாஜகவுக்கு எதிராக இருந்தார். ஆனால் இன்றைய அதிமுக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், அந்தக் கொள்கை அடிப்படைகளில் இருந்து விலகி வருகிறது. திருப்பரங்குன்றம் போன்ற பிரச்சனை களில் மதவாத சக்திகளின் அழுத்தத்துக்கு அஞ்சும் நிலை, மதச்சார்பின்மையில் சமரசம் செய்யும் கட்சியாக அதிமுகவைக் காட்டுகிறது. காவி நிகழ்ச்சித்திட்டத்திற்கு தமிழக மண்ணில் இடம் கொடுக்கும் பாத்திரத்தை அதிமுக ஏற்றுக்கொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இதுபற்றி அதிமுக பொதுக்குழு கமுக்கமாக கடந்து செல்கிறது. தொழிலாளர், விவசாயிகள் எங்கே? அதிமுகவின் பொதுக்குழுத் தீர்மானங் களில் மக்கள்நலன் சார்ந்த கொள்கைகள் எங்கே? தொழிலாளர்களின் உரிமைகள், குறைந்தபட்ச ஊதியம், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு உருவாக்கம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை விஷ யங்களைப் பற்றி எந்த விவாதமும் இல்லை. முழுக்க முழுக்க உள்கட்சிப் பிரச்சனைகள், அதிகார வேட்கை, முதல்வராகும் தாகம், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் மீதான தாக்குதல், இவையே பொதுக்குழுவை ஆக்கிரமித்திருந்தன. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன செய்யப் போகிறது என்ற தொலைநோக்கு இல்லாமல், எப்படி ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற குறுகிய அரசியல் கணக்குகளில் மட்டுமே மூழ்கி யுள்ளது. இது, பொதுக்குழுவில் அப்பட்டமாக வெளிப்பட்டது. பொருளாதாரக் கொள்கை? அதேபோல, அதிமுக பொதுக்குழுவில் பொருளாதாரக் கொள்கை குறித்த விவாதமே இல்லை. தனியார்மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, கார்ப்பரேட்டு களுக்குச் சலுகை, சிறு குறு தொழில்களின் அழிவு, இவை குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதில் தெளிவு இல்லை.

பாரதிய ஜனதா கட்சியின் நவதாராளவாதக் கொள்கைகளுக்கு அதிமுக எந்த அளவுக்குத் துணை போகும்? வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, தனியார்மய அபாயம் போன்றவற்றை எதிர்க்குமா அல்லது ஏற்றுக்கொள்ளுமா? இவை குறித்து மக்க ளுக்குத் தெளிவான பதில் இல்லை. கார்ப்பரேட் நலன்களுக்குச் சார்பான அல்லது எதிரான நிலைப்பாடு இல்லாமல், எப்படி மக்களிடம் பேசுவார்களோ? சாதி ஒழிப்பும் சமூக நீதியும் எங்கே? தமிழகத்தில் சாதி ஒழிப்பு, சமூக நீதி என்பவை அரசியலின் அடிப்படைகள்.

ஆனால் அதிமுக பொதுக்குழுவில் இவை குறித்து எந்தத் தீர்மானமும் இல்லை. தலித் உரிமை கள், பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிப்பது, இவை எல்லாம் அதிமுகவின் கவனத்திலேயே இல்லை. அதிமுக பொதுக்குழு வெளிப்படுத்தியது ஒரு நெருக்கடியில் சிக்கிய கட்சியின் நடவடி க்கையைத்தான். உட்கட்சிப் பிளவுகள் ஆறாத நிலை, பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தத்தில் தன் சுயத்தை இழக்கும் நிலை, கற்பனை யான வாக்குக் கணக்குகள், தொண்டர் களின் அவநம்பிக்கை, கொள்கைக் குழப்பங் கள், மக்கள்நலன் மறந்த அரசியல், இவை யெல்லாம் அதிமுக எதிர்கொள்ளும் கடுமை யான சவால்களை எடுத்துக்காட்டுகின்றன. திராவிட இயக்கத்தின் வேர்களில் இருந்து விலகிச் செல்லும் அதிமுக, தமிழக அரசியலில் மாற்று சக்தியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியுமா என்பது கேள்விக் குறியே. 210 இடங்களைக் கைப்பற்று வோம் என்ற எடப்பாடியின் உரத்த அறிவிப்பு களுக்குப் பின்னால், ஒளிந்திருப்பது, அதிமுகவின் தார்மீக வீழ்ச்சியே!