பொருளியல் அரங்கம் - க.சுவாமிநாதன்
10 Feb 2026, 4:50 pm

பொருளியல் அரங்கம்

நாய்க்கு எங்கே கல்லடிபட்டாலும் காலைத்தான் இழுத்துக் கொண்டு ஓடும் என்பார்கள். அது போலவே முதலாளித்துவ பொருளாதாரப் பாதையும்... எந்த நெருக்கடியும், சிக்கலும் சாதாரண மக்களின் வாழ்க்கையையே பதம் பார்க்கும். நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்துள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டும் இதற்கு உதாரணம். இப்போதெல்லாம் பட்ஜெட் மதிப்பீடுகளுக்கு எந்த மரியாதையும் இல்லை. திருத்திய மதிப்பீடுகள் என 10 மாதங்கள் கழித்து வெளியிடப்படும் கணக்குகள் பட்ஜெட் மதிப்பீடுகளில் இருந்து வெகு தூரத்தில் இருக்கின்றன. பட்ஜெட்டில் அரசின் வரி வருவாய் மிக முக்கியமானது. 2025- 26 பட்ஜெட் மதிப்பீட்டை ஒப்பிடுகையில் ஒன்றிய அரசுக்கு உண்மையில் கிடைத்த நிகர வரி வருவாய் ரூ.1.6 லட்சம் கோடி குறைவாக உள்ளது. அரசின் பட்ஜெட் என்பது குடும்ப பட்ஜெட் போன்றது அல்ல. குடும்ப வருமானமோ தனி நபர் வருமானமோ ஏற்கெனவே அறிந்ததே. ஆதலால் அதற்கு உட்பட்டு செலவு செய்வது என்பதே சரி. ஆனால் தேசத்தின் பட்ஜெட் அப்படிப்பட்டது அல்ல. அரசின் செலவினங்கள்தான் முதலில் திட்டமிடப்படும். அதற்கு பின்னர் செல வினங்களுக்கு நிதி திரட்டுவது எப்படி என நிதியமைச்சர் முன் மொழிவுகளை அவையின் முன் வைப்பார். காரணம் அரசுக்கு வரி போடுகிற அதிகாரங்கள் இருப்பதால் செலவினங்களுக்கு ஏற்ப நிதி திரட்ட இயலும் என்பதே. ஆனாலும் 2025 - 26 பட்ஜெட்டில் வரி வருவாயில் 1,60,000 கோடி பள்ளம் விழுந்துள்ளது. அதை ஈடுகட்ட அரசு என்ன செய்திருக்க வேண்டும்? யாரிடம் இருந்து வரிகளை அதிகமாக திரட்ட வாய்ப்புள்ளது என்பதை யோசித்திருக்க வேண்டும். கார்ப்பரேட் வரிகளை அதிகரிக்க வேண்டும்; செல்வந்தர்கள் மீது செல்வ வரி போட வேண்டும்; வாரிசுரிமை வரியை அறிமுகப்படுத்தலாம் என்கிற விவாதம் பல ஆண்டுகளாக நடந்தேறி வருகிறது. ஆனால் நிதியமைச்சர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால் நிதிப் பற்றாக்குறையை 4.4 % குள்ளாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதை மட்டும் கறாராக அமல்படுத்த முனைந்துள்ளார். “நிதிப் பற்றாக்குறை” என்பது அரசே விரும்பி, தனது கால்களைக் கட்டிக் கொண்டுள்ள ஏற்பாடு ஆகும். அதற்காகவே நிதிப் பொறுப்பு மற்றும் மேலாண்மைச் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றி வைத்திருக்கிறது. இதற்கு மேல் நான் போக முடியாது என சட்டத்தின் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்கிறது. வருவாயில் பள்ளம் விழுகிறது. வசதி படைத்தவர்கள் மீது வரிகள் போடத் தயாராக இல்லை எனில் எப்படி ஈடுகட்டுவது? அரசு கண்டுபிடித்துள்ள வழி மக்கள் நலனுக்கான வளர்ச்சி திட்டங்கள் மீது கைவைப்பதுதான். “பீப்பிள்ஸ் டெமாக்ரசி “(பிப்ரவரி 8, 2026) இதழில் “நிதி ஒழுங்கு: சாமானிய மக்களின் நலனுக்கே பங்கம்” என்ற சஞ்சய் ராய் கட்டுரையில் தந்துள்ள தகவல் கீழே: “மத்திய ஆதரவு திட்டங்களில் ரூ.1.21 லட்சம் கோடி பெரிய அளவில் வெட்டப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கான செலவு குறைப்புகள் செல்வந்தர்களையும் பணக்காரர்களையும் பாதிக்காது; இந்தச் செலவுக் குறைப்பின் சுமையை ஏழைகளும் உழைக்கும் மக்களும் தான் சுமக்க வேண்டியுள்ளது. பல திட்டங்களுக்கான 2026–27 நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 2025–26 நிதியாண்டின் ஏற்கெனவே குறைக்கப்பட்ட திருத்திய மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது அதே அளவில் அல்லது மிகச் சிறிய அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த பட்ஜெட்டின் ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது திருத்திய மதிப்பீட்டில் பின்வரும் திட்டங்களில் குறைப்புகள் செய்யப்பட்டுள்ளன: தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் (Rashtriya Krishi Vikas Yojana) – ரூ.1,500 கோடி பிரதான் மந்திரி போஷன் - குழந்தைகளுக்கான உணவு (PM POSHAN) – ரூ.1,900 கோடி பிஎம் ஸ்ரீ (PM SHRI) – ரூ.3,000 கோடி பிரதான் மந்திரி வீட்டு திட்டம் (நகர்ப்புறம்) – ரூ.12,294 கோடி பிரதான் மந்திரி வீட்டு திட்டம் (கிராமப்புறம்) – ரூ.22,332 கோடி ஆயுஷ்மான் பாரத் (PMJAY) – ரூ.406 கோடி ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிக்கட்டுமானம் (PMABHIM) – ரூ.1,757 கோடி.” திட்டங்களுக்கு நிதி அறிவிக்கப்படும் போது இவ்வளவு சதவீதம், அவ்வளவு சதவீதம் உயர்வு என்று துள்ளிக் துள்ளிக் குதிப்பவர்கள் பல்லாயிரம் கோடிகளை வெட்டும் போது சத்தமில்லாமல் செய்து விடுகிறார்கள். நாய்க்கு கல்லடிபடும் கதைதான். “நிதி ஒழுங்கு” என வரும் போது சாமானிய மக்களின் நலனுக்கான திட்டங்கள்தான் நகர முடியாமல் திண்டாடுகின்றன.

பணம் என்ன குப்பையிலா கிடப்பது?

“பணம் என்ன மரத்திலா காய்க்கிறது” என்று கேட்ட ஒன்றிய நிதி அமைச்சர்கள் கடந்த காலங்களில் உண்டு. ஆனால் காலகாலமாக தோப்பு தோப்பாக பணம் காய்க்கிற மரங்கள் கார்ப்பரேட்டுகளுக்காக உருவாக்கப்பட்டன என்பது பொருளாதார வரலாறு. ஆனால் இங்கே நாம் பேசுவது வேறு கதை. பணம் என்ன குப்பையிலா கிடக்கிறது? என்று கேட்கிற அளவுக்கு மோசமான செலவினங்கள் அரங்கேறுகின்றன. இதோ உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை ஒரு உதாரணம். “உடான்” (UDAAN - Ude desh ka aam nagarik) என்ற திட்டம். இதன் பொருள் “சாமானியரும் பறக்கலாம்” என்பதே. பிராந்திய அளவில் விமானப் பயண ஒருங்கிணைப்பு என்ற வகையில் 10 ஆண்டுகளாக புதிய “விமான வழிகள்” அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் 550 கோடிகள் ஒதுக்கீடு. போன ஆண்டும் இதே தொகைதான். வழக்கம் போல திருத்திய மதிப்பீடு வேறு. செலவிடப்பட்டு இருப்பது 434 கோடிகள் மட்டுமே. 2016 லிருந்து 923 புதிய வழிகள் அறிவிக்கப்பட்டன. அதற்கான செலவினங்கள் செய்யப்பட்டன. ஆனால் அவற்றில் செயல்பாட்டில் வந்தவை 479 வழிகள் மட்டுமே. அவற்றில் இப்போது 225 வழிகள் அதாவது 50% மூடப்பட்டு விட்டன. இந்த திட்டத்தின்படி இந்த வழிகளில் அதாவது இரண்டாம் தட்டு மூன்றாம் தட்டு நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் 50% இருக்கைகள் அரசின் மானியத்தை பெறும். ரயில்களில் சாதாரண பதிவு செய்யப்படாத பெட்டிகளை குறைத்து வருவதோடு, மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை 6 ஆண்டுகளாக தர மறுத்து வரும் அரசாங்கமே மலிவு விமான கட்டண சலுகையை “உடான்” திட்டம் வாயிலாக அறிவித்து வருகிறது என்பது நகை முரண். தவறான திட்டமிடல், கிராக்கி குறித்த அதீத மதிப்பீடு மூலம் அரசின் கருவூ லத்திற்கு பெரும் இழப்பை இத்திட்டம் மூலம் ஏற்படுத்தி உள்ளார்கள் என்பதே. நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி - பிப்ரவரி 8, 2026 - Science and Development