முன்னாள் ராணுவத்தினரின் நலன் பாதுகாக்கப்படுமா? - ப. தட்சிணாமூர்த்தி
yesterday

முன்னாள் ராணுவத்தினரின் நலன் பாதுகாக்கப்படுமா? - ப. தட்சிணாமூர்த்தி

முன்னாள் படைவீரரும் அவர்கள் குடும்பத்தாரும் இலவச மருத்துவ சேவை பெற 2003 இல் தொடங்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் “முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம்” (ECHS), நாடு முழுவதும் 31 மண்டல மையங்கள், 456 பாலிகிளினிக் உட்பட 3,144 சுகாதார நிறுவனங்களைக் கொண்டு 69 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்குச் சேவை செய்கிறது. 1,147 மருத்துவர்கள், 270 சிறப்பு மருத்துவர்கள் உட்பட 8,252-க்கும்மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர் — இவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையிலானவர்களே. மேஜர் ஜெனரல் அனில் சந்தேல் இதன் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் எச்சரிக்கை

2018–19 முதல் 2022–23 வரையிலான காலத்திற்கான தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) தணிக்கை அறிக்கை 18.12.2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இல்லாமை, ஆள் பற்றாக்குறை,பணம் வழங்குவதில் தாமதம், பட்டியலிடப்பட்ட தனியார் மருத்துவமனைகள் நாடு முழுவதும் சீரற்று, போதுமானதாகவும் இல்லாதது ஆகியவற்றால் பயனாளிகள்சிகிச்சைக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதாக அறிக்கை சுட்டியது. நிலுவை பில்களைக்குறைக்கவும், முந்தைய நிதியாண்டு நிலுவைச் செலவுகளை நடப்பு ஆண்டுக்குக் கொண்டுவரும் சுமையைத் தவிர்க்கவும் ஒருமுறை போதிய நிதிஒதுக்க வேண்டும், பாலிகிளினிக் வகைப்ப்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும், பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால் பெரும்பாலான பத்திரிகைகள் இதைச் சுட்டிக்காட்டிமோடி அரசை விமர்சிக்கவில்லை. அரசும் அதைக் கண்டு கொள்ளவில்லை.

பாக்கித் தொகையும் நிதி நெருக்கடியும்

முந்தைய நிதியாண்டுகளின் பற்றாக்குறையால் குவிந்த மருத்துவக் கட்டணப் பாக்கி சுமார் ரூ.20,000 கோடி. கோவாவின் ஒரே தனியார் மருத்துவமனைக்கு ரூ.5.2 கோடி செலுத்தப்படாததால், மறைந்த கடற்படை அதிகாரியின் 73 வயதான மனைவி சஞ்சுதா மிஸ்ராவின் புற்றுநோய் சிகிச்சையே நிறுத்தப்பட்டது; ஆனால் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்இதை மறுத்து, பில்லிங் முரண்பாடே தாமதத்திற்குக் காரணம் என உண்மையைத் திசை திருப்பினார். சிஏஜி பரிந்துரைத்த ஒருமுறை ஒதுக்கீட்டுக்குப் பதிலாக, 2026–27க்கு ரூ.15,827 கோடி தேவைப்பட்ட இடத்தில் ரூ.12,100 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு, மீதியை “திருத்தப்பட்ட மதிப்பீடு” கட்டத்தில் கோருவதாகக் கூறப்பட்டது — இது சிஏஜி பரிந்துரைக்கு நேர் எதிரானது, திட்டத்தைக் கட்டம் கட்டமாகச் சிதைப்பதே. பணம் தாமதமாவதால் பட்டியலிடப்பட்ட பல தனியார் மருத்துவமனைகள் சேவையைநிறுத்தியும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமலும் உள்ளன.

ஊழல் வலையமைப்பு

உயர் சிகிச்சைகளில் லாபமே குறிக்கோளாகக் கொண்ட தனியார் மருத்துவமனைகளையே முழுமை

யாகச் சார்ந்திருப்பதால், ஏழை முதியோர் முன்னாள்படைவீரரின் மருத்துவம் முற்றிலும் தனியார் வியாபாரமாகிவிட்டது. ஹரியானாவின் ரோத்தக்கில் ஒரு மண்டல மைய மருத்துவர், இடைத்தரகர் உள்ளிட்ட நால்வர் மீது ரூ.1.40 கோடி ஊழல் வழக்கு பதிவாகி, ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டனர்; பாதுகாப்பு அமைச்சக மூத்த கணக்கு அதிகாரி ஒருவரும் துணைபுரிந்ததாகக் கைதானார் (சிபிஐ தகவல், 27.1.2025). ராஜஸ்தானில் முன்னாள் வீரரின் பெயர் பட்டியலில் நீடிக்க ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்ட முன்னாள் லெப்டினன்ட் கர்னல் அமர்ஜித் சிங் ரூ.22.5 லட்சம் வாங்கும்போது பிடிபட்டார் (சிபிஐ தகவல், 24.4.2025). நொய்டாவில் போலி மருத்துவ (ECHS) அட்டைவைத்து நோயாளிகளைச் சேர்த்த நால்வர் கைதாகினர் (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 19.10.2025). பானிபட்டில் ஒரு பாலிகிளினிக் மருத்துவர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பரிந்துரைக்க மாதம் ரூ.3.5 லட்சம் கேட்டு, ரூ.2.5 லட்சம்வாங்கும்போது பிடிபட்டார் (ட்ரிப்யூன், 8.2.2026). எட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ மேஜரும் நொய்டா பெலிக்ஸ்மருத்துவமனை நிர்வாகியும் ரூ.3 லட்சம் லஞ்சத்துடன் பிடிபட்டனர் (இந்துஸ்தான் டைம்ஸ், 16.3.2026). சண்டிகரில்மந்தன் ஹெல்த்கேர், தரம் மருத்துவமனை ஆகியவை போலி ஆவணங்கள் உருவாக்கி, 50:50 வருவாய் பங்கீட்டு ஒப்பந்தத்துடனும் இடைத்தரகர் கமிஷனுடனும் பெரும் மோசடி நடத்தியது அம்பலமானது (இந்துஸ்தான் டைம்ஸ், 19.10.2025).

இவை தவிர, சாதாரணப் பரிசோதனைக்கு வரும் புறநோயாளிகளைக் கூடக் கட்டாயமாக அனுமதித்துக் கட்டணத்தை உயர்த்துவது, தேவைக்கு அதிகமான காலம் தங்கவைப்பது, போலி டிஸ்சார்ஜ் சுருக்கங்களும் மருந்துச் சீட்டுகளும் உருவாக்குவது, பழைய ஆய்வக முடிவுகளை எடிட்செய்து புதிய அறிக்கைகளாகக் காட்டிப் பலமுறை பணம் பெறுவது என ஏராளமான மோசடிகள் தொடர்கின்றன. ஹரியானாவின் ஹிசாரில் 2023–25 காலத்தில்தேவையற்ற அனுமதிகளுக்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டதும், பாலிகிளினிக்–மண்டல மைய அதிகாரிகள் தனியார் மருத்துவமனைகளுடன் கூட்டுச்சேர்ந்ததும் கண்டறியப்பட்டது (மெடிக்கல் டயலாக்ஸ், 11.5.2026). சண்டிகர்–மொஹாலி–பஞ்ச்குலா பகுதியில்இவ்வாண்டு ஏப்ரலில் நடந்த சோதனையில், 11 நோயாளிகளைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததாகக்காட்டி கோடிக்கணக்கில் நிதி சுருட்டிய மோசடி வலையமும், போலி ஆய்வக அறிக்கைகளும் சிபிஐயால்மீட்கப்பட்டன.

குஜராத்தின் அதிர்ச்சி ஊழல்

குஜராத்தில் எல்லாம் சிறப்பு என்ற தோற்றம் முற்றிலும் தவறானது. அகமதாபாத்தின் கியாதி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஆயுஷ்மான் பாரத் (PM-JAY) நிதியை அபகரிக்க இலவச முகாம்கள்நடத்தி, ஆரோக்கியமான கிராமப்புற மக்களுக்கும் 30–40% தமனி அடைப்புள்ளோருக்கும் 90% அடைப்பு எனப் பொய் சொல்லி ஆஞ்சியோபிளாஸ்டி செய்தது; 9.11.2024 மெஹ்சானா முகாமில் 16 பேருக்கு மேல் பரிசோதனை பரிந்துரைக்கப்பட்டு, 7 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர், 5 பேர் கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இம்மருத்துவமனை இசிஎச்எஸ்(ECHS) திட்டத்தி

லும் இணைக்கப்பட்டிருந்தது (இந்தியன் எக்ஸ்பிரஸ், 8.12.2024). தன் சொந்த மாநிலத்தின் இந்த ஊழலைப் பற்றி பிரதமர் மோடி வாயே திறக்கவில்லை.

இந்த ஊழல் வலை பெரும்பாலும் ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், இமாசலப்பிரதேசம், சண்டிகர், குஜராத் என பாஜக ஆட்சி/செல்வாக்குள்ள மாநிலங்களிலேயே அதிகம் நடந்துள்ளது; கேரளா,தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் மட்டுமே இத்தகைய மோசடிகள் இல்லை — கேரள மருத்துவமனைகளே முன்னாள் படை வீரர்க்கு சிறந்தசேவை தருவதாகத் தகவல்கள்.

உறுதிமொழிக்கு முரணான நிபந்தனை

ராணுவச் சேவையில் இருக்கும்போதும் ஓய்வுக்குப் பின்னும் இலவச மருத்துவம் என்பதே ஆரம்பத்தில் படைவீரருக்கு அளிக்கப்பட்ட உறுதி. ஆனால் இசிஎச்எஸ் திட்டத்தில் இணைவது கட்டாயமாக்கப்பட்டு, தர ஊதியத்திற்கேற்ப ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை ஒருமுறைப் பங்களிப்பும், ஓய்வூதியத்தில் மாதம் ரூ.1,000 மருத்துவப் படியும் இழக்க வேண்டிய நிலை உள்ளது — இது ஆரம்ப உறுதிமொழிக்கு முரணானது. தேவையான பாலிகிளினிக்குகளும் உயர் சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளும் நாடு முழுவதும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. பாலிகிளினிக் மருந்துகள் தரக் கட்டுப்பாடோ கண்காணிப்போ இன்றி நேரடிச் சந்தையிலேயே கொள்முதல் செய்யப்படுவதும், மருத்துவர்–பணியாளர்கள் அனைவரும் ஒப்பந்த/தொகுப்பூதிய அடிப்படையில் உறுதியற்ற முறையில்பணிபுரிவதுமே பாதிவழி ராஜினாமா, காலிப்பணியிடங்கள், ஊழல் ஆகியவற்றுக்கு அடிப்படைக் காரணம்.

கோரிக்கைகள்

ஆண்டுதோறும் போதிய நிதி ஒதுக்கீடு; பழைய பாக்கி பில்களை ஒருமுறையாகத் தீர்த்தல்; ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு பாலிகிளினிக்; அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கையைப் பரவலாக உயர்த்தி, கடும் கண்காணிப்புக்கான சிறப்பு விதிகள்; ஒப்பந்த முறையை முற்றிலும் நிறுத்தி, முன்னாள் படைவீரர்களையே நிரந்தர ஊழியர்களாக நியமித்தல் ஆகியவை அவசியம்.

29.8.2026 நிலவரப்படி 32.46 லட்சம் முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதியர்களாக உள்ளனர்; ஆண்டுதோறும் 60,000புதிதாக ஓய்வு பெறுவோரும், 1,44,000 குடும்ப உறுப்பினர்களும் திட்டத்தில் இணைகின்றனர் — பயனாளிகள் எண்ணிக்கை 2004இல் 3.5 லட்சமாக இருந்தது 2024இல் 59 லட்சமாகவும், 2026 முதல் காலாண்டில் 69 லட்சமாகவும் உயர்ந்துள் ளது. அம்பானி, அதானி உள்பட பாஜகவின் பிரிய

முதலாளிகளுக்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதிச் சலுகை வழங்கும்மோடி அரசுக்கு, முன்னாள் படை வீரர் மருத்துவத் திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.20,000 கோடி ஒதுக்கு

வது எளிய காரியமே. காவி பரிவாரங்கள் உலகில் வேறெங்கும் காணமுடியாத ராணுவ பக்தியைத் திட்டமிட்டு வளர்த்து, அதைத் தங்கள் பாசிசத் தேசிய வெறிக்குப் பயன்படுத்த முனைகின்றன; ஆனால் இது இந்திய மக்களிடம் எடுபடாது என்பதற்கு நாடு முழுவதும் நடந்த மாணவர் போராட்டங்களே சான்று. எல்லையோரங்களில் பண்டிகைக் காலங்களில் ராணுவ வீரர்களுக்கு லட்டு ஊட்டி புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடுவது இனி பலனளிக்காது; அவர்களையும் அவர்தம் குடும்பங்களையும் பாதுகாப்பதற்கான மருத்துவத் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கி, முன்னாள்படைவீரர் நலனைப் பாதுகாப்பதே அரசின் கடமை.