குருதி கொடையாளர்களின் சாதி விவரங்கள் சேகரிப்பிற்கு கண்டனம் கோவையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
8 Oct 2026, 3:05 am
<p><strong>குருதி கொடையாளர்களின் சாதி விவரங்கள் சேகரிப்பிற்கு கண்டனம் கோவையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, அக்.7–உதகையில் ரத்ததானம் செய்ய வந்த மாணவர்களின் சாதி விவரங்கள் சேகரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்தும் கோவையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இம்முகாமில், ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் இயங்கும் நீலகிரி மேரா யுவ பாரத் அமைப்பை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர், ரத்ததானம் செய்த வந்த மாணவர்களிடம் தனியாக படிவம் வழங்கி அதில் பெயர்,வயது, பயிலும் பட்டப்படிப்பு, சாதி, தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை எழுதி வாங்கியுள்ளார். இதனை பார்த்த சில மாணவர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ரத்ததான முகாமில் கொடையாளர்களின் சாதி விவரங்களை சட்டவிரோதமாக பெற்ற ரஞ்சித் குமார் என்பவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணிநிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, சென்னையில் அமைதியான முறையில் போராடிய செவிலியர்களை காவல்துறையின் அடக்குமுறை கொண்டு கைது செய்த தமிழக அரசை கண்டித்தும், கோவை மாவட்டம், அன்னூரில் இந்திய ஜனநாயகவாலிபர் சங்கத்தினர் செவ்வாயன்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்கத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளர் அர்ஜுன் கண்டன உரையாற்றினார். இதில் ஒன்றியச் செயலாளர் ரஞ்சித் குமார், துணைச்செயலாளர் இப்ராஹிம், துணைத்தலைவர் சிவா, ஒன்றியக்குழு உறுப்பினர் அல்லாபக்ஸ்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
