சாதியற்ற சமத்துவ ஊராட்சியை உருவாக்குக! கிராமசபையில் வாலிபர் சங்கத்தினர் மனு
2 Nov 2026, 12:34 am

சாதியற்ற சமத்துவ ஊராட்சியை உருவாக்குக!

கிராமசபையில் வாலிபர் சங்கத்தினர் மனு

உடுமலை, நவ.1-திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட உரல்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு நாள் மற்றும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், ஊராட்சிக்குட்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உரல்பட்டி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் சி. கருப்புச்சாமி தலைமையில் கிராம சாபையில் அளிக்கப்பட்ட மனுவில், ஆண்டியகவுண்டனூர் என்ற ஊராட்சிப் பெயரில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயரை நீக்கி, தியாகிகளின் பெயரில் புதிய பெயர் சூட்ட வேண்டும். இதற்கான தீர்மானத்தை கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றி, மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவலியுறுத்தப்பட்டது.

மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களின் நலன் கருதி பொது நூலகம் அமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சுத்தமான குடிநீர் வழங்கவும், திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும். விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். வீடில்லாமல் வசிக்கும் ஏழை பட்டியலின குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். திறந்தவெளியில் உள்ள சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி, மின்விளக்கு, காத்திருப்புக் கூடம் மற்றும் எரியூட்டு மேடை அமைத்துத் தர வேண்டும்.

சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கும் மின்கம்பிகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அவற்றை அகற்றி புதிய மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், வாலிபர் சங்க உரல்பட்டி கிளை உறுப்பினர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உடுமலை ஒன்றிய துணை செயலாளர் சிவகுமார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதேபோன்று, எரிசனம்பட்டி கிராம சபைக் கூட்டத்தில், கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்குவதுடன், தினக்கூலியாக ரூ.700 வழங்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை ஒன்றியம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தனி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

குரல்குட்டை ஊராட்சியில் அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். இக்கூட்டத்தில் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கி.கனகராஜ், கமிட்டி உறுப்பினர்கள் ஜி.செந்தில்குமார்,எம்.தட்சிணாமூர்த்தி, கே.ஆனந்தன், வி.மருதமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜல்லிப்பட்டி ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் அளித்த மனுவில், வேலை உறுதித் திட்டத்தின் கீழ், அரசு அறிவித்துள்ள ரூ.345 தினக்கூலியை முழுமையாகவும் முறையாகவும் வழங்க வேண்டும், ஊராட்சிப் பகுதிகளில் மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்குப் பயனற்ற நிலையில் உள்ள தார் சாலைகளைச் சீரமைத்து புதிய தார் சாலைகள் அமைக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றிப் புதிய மின் கம்பங்கள் அமைத்துத் தரவேண்டும். வெங்கிட்டாபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதேபோன்று, குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சியில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி, கிராம சபைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.