சங் பரிவாரத்துக்கு வாய்ப்பை உருவாக்காதீர்! - அ.அன்வர் உசேன்
17 Aug 2026, 10:10 pm

சங் பரிவாரத்துக்கு வாய்ப்பை உருவாக்காதீர்! - அ.அன்வர் உசேன்

தமிழ்நாடு மதவெறிக்கு எதிரான பண்பாடு கொண்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை. சங் பரிவாரம் பகீரத முயற்சிகள் செய்த பொழுதும் அவர்களால் தங்கள் திட்டத்தை சாத்தியமாக்க இயலவில்லை. அதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் இந்து-இஸ்லாமிய- கிறித்துவ மக்களிடையே உள்ள ஒற்றுமைதான்! எனினும் சங் பரிவாரத்தினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறைத்து மதிப்பிட இயலாது. அதே சமயத்தில் மக்களிடையே பிளவை சாத்தியமாக்க பெரும்பான்மை மதவாதத்திற்கு எந்த ஒரு வாய்ப்பையும் சிறுபான்மையினர் உருவாக்கிவிடக்கூடாது என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சில நாட்களாக தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் இத்தகைய கவலைகளை தோற்றுவிக்கின்றன.

பட்ஜெட்டும் ‘கடவுளும்’

வேளாண்துறை அமைச்சர் வேளாண் பட்ஜெட்டை திருப்பதி கோவிலுக்கு சென்று அர்ப்பணித்து வந்ததை பலரும் கடுமையாக விமர்சித்தனர். இந்த விமர்சனம் நியாயமான ஒன்று. பட்ஜெட்டுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? பட்ஜெட் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது. ஒரு பிரிவின் ஆன்மீக தலத்துக்கு அதனை அர்ப்பணிப்பது எப்படி சரியாக இருக்கும்? வேளாண் பட்ஜெட் குறித்து விமர்சனங்கள் அடங்குவதற்குள் பொது பட்ஜெட் சர்ச்சை உருவானது. நிதி அமைச்சர் கிறித்துவ மதத்தை சார்ந்தவர் என்பதால் அவர் பட்ஜெட்டுடன் ஜெபமாலை கொண்டு வந்தார் என்பதும் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானது. வேளாண் பட்ஜெட் திருப்பதிக்கு சென்றது எப்படி தவறோ அதே போலவே பொது பட்ஜெட்டை ஜெபமாலையுடன் அல்லது கிறித்துவ மதப்பிரிவுடன் தொடர்பு உருவாக்குவதும் மிகவும் தவறானது. மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் அரசாங்கங்கள் இப்படி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பட்ஜெட்டுகள் திருப்பதிக்கு பயணித்தாலும் அல்லது வேளாங்கண்ணிக்கு பயணித்தாலும் அதனை அங்கீகரிக்க இயலாது. குறிப்பாக இத்தகைய செய்கைகள் சங் பரிவாரத்தினரின் பிரச்சாரத்துக்கு வாய்ப்பாக அமையும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். எந்த ஒரு அரசியல் தலைவர் அல்லது அமைச்சரின் தனிப்பட்ட நம்பிக்கையில் எவரும் தலையிட உரிமை இல்லை. ஆனால், மதத்தை பொதுவெளியில் பட்ஜெட் போன்ற ஆவணத்துடன் தொடர்புபடுத்துவது வலுவாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று.

தமிழும் கிறித்துவமும் முரண்பட்ட கருத்தியலா?

நிதி அமைச்சரின் தமிழ் உச்சரிப்பு குறித்து சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின் பொழுது அவர் கொடுத்த பதில் பல விவாதங்களை கிளப்பியுள்ளது. தன்னுடைய நடையை மாற்றிக்கொள்ள இயலாது என அவர் கூறியது தன்னடக்கமா என்பதும் பொருத்தமானதா என்பதையும் அவருக்கே விட்டு விடுவோம். ஆனால் அதற்கு பின்னர் அவர் கூறியதுதான் விமர்சனத்துக்குரியதாக அமைந்துள்ளது.

“கிறித்துவம் எனக்கு ஒரு மொழியை போதித்துள்ளது. அது அன்பும் அமைதியும் ஆகும். தமிழைப் படிப்பதன் மூலம் பாதிப் பேர் அதனை புரிந்துகொள்ள இயலாது” என அவர் கூறியுள்ளார். தமிழையும் கிறித்துவத்தையும் எதிரெதிராக முன்வைப்பது மிகவும் அபத்தமான ஒன்று.

தமிழுக்கு கிறித்துவம் ஆற்றிய தொண்டு அளப்பரியது. முதன்முதலில் ஐரோப்பிய மொழி அல்லாத ஒரு மொழியில் அச்சிட்ட ஆவணம் தமிழில்தான் வெளிவந்தது. ஹென்றிக் ஹென்ரிக்ஸ் எனும் போர்த்துகீசிய பாதிரியார் 1578 ஆம் ஆண்டு ‘தம்பிரான் வணக்கம்’ எனும் நூலை அச்சிட்டு வெளியிட்டார். தமிழ் அச்சின் பிதாமகர் என இவர் அறியப்படுகிறார். 1712 ஆம் ஆண்டு ஜெர்மானிய பாதிரியார் பார்த்தலோமியூ சீகன்பால்கு தரங்கம்பாடியில் தமிழுக்காக ஒரு அச்சகத்தையே நிறுவினார். ஏராளமான தமிழ் ஆவணங்களை அச்சிட்டு வெளியிட்டார்.

பாடல் வடிவத்தில் இருந்த தமிழ் மொழி நடையை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் உரைநடை வடிவமாகப் பரிணமிக்க வைத்ததில் கிறித்துவப் பாதிரியார்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. தமிழில் முதல் அகராதியை வெளியிட்டவர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனிவர். அவர்தான் ‘தேம்பாவணி’ எனும் உன்னதமான காவியத்தையும் உருவாக்கினார். ஜி.யூ.போப் மற்றும் கால்டுவெல் ஆகியோர் தமிழுக்கு ஆற்றிய பங்கை எவராவது குறைத்து மதிப்பிட முடியுமா?

தமிழை வளர்ப்பதில் கிறித்துவம் மிகப்பெரிய தொண்டாற்றியுள்ளது. இதனைச் சாதித்தவர்கள் கிறித்துவத்தையும் தமிழையும் எதிரெதிராக நிறுத்தவில்லை. மாறாக, கிறித்துவத்தை வளர்க்க தமிழைப் பயன்படுத்தினர். அதனூடே தமிழும் வளமானது. பௌத்தம், சமணம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்துவம் என அனைத்து மதங்களும் தமிழை வளர்ப்பதில் பங்காற்றியுள்ளன. எனவே, அமைச்சர் தமிழையும் கிறித்துவத்தையும் எதிரெதிர் கருத்துகளாக முன்வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவரது கருத்து பா.ஜ.க.வினருக்கு ஆயுதமாகப் பயன்பட்டது என்பதை அவர்களின் எதிர்வினையிலிருந்து அறியலாம்.

கருக்கலைப்பு உரிமை யாருக்கு?

சட்டமன்றத்துக்குள் இந்த விவாதங்களும் முரண்பாடுகளும் நடந்த அதே சமயத்தில் சென்னையில் சில கிறித்துவ அமைப்புகள் கருக்கலைப்புக்கு எதிரான பேரணியை நடத்தியுள்ளன. அந்தப் பேரணியில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பங்கேற்றது பல விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஒரு குழந்தையின் வாழ்வின் மதிப்பு அது பிறக்கும் நாளில் இருந்து மட்டுமல்லாமல், கருவில் உருவாகும் கணத்திலிருந்தே மதிக்கப்பட வேண்டும் என்ற இந்த இயக்கத்தின் ஆழமான நம்பிக்கையைத் தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.

கருக்கலைப்பு என்பது அறிவியல் அடிப்படையிலும் சமூக அடிப்படையிலும் சிக்கலான ஒன்று. எனினும் முற்போக்கு சமூகம் ஏற்றுக்கொண்ட அடிப்படை கருத்து என்னவெனில், தன் வயிற்றில் கரு உண்டாக வேண்டுமா இல்லையா என்பதும், அவ்வாறு உண்டான கருவை வைத்துக்கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்பதும் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் முழு உரிமை ஆகும். கத்தோலிக்க பிரிவு உட்பட பல சமூகங்கள் கருக்கலைப்புக்கு எதிரான கருத்துகளைக் கொண்டுள்ளன. அது அவர்களின் தனிப்பட்ட மதக் கருத்து. ஆனால், அதனைப் பொதுவெளியில் முன்வைக்கும் பொழுது அதற்கு எதிர்வினையாற்றுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது.

தமிழகத்தில் நடைபெற்றுள்ள இத்தகைய நிகழ்வுகள் தமிழ் மண்ணின் முற்போக்கு பண்பாட்டுக்கு எதிரானது மட்டுமல்ல; சங் பரிவாரத்தினரின் மதவாதப் பிரச்சாரத்துக்கும் பயன்படும் கருத்தாக மாறும் ஆபத்து உள்ளது. நாடு முழுவதும் கிறித்துவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், தமிழ்நாட்டில் சங் பரிவாரத்துக்கு எந்த ஒரு வாய்ப்பும் தந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது அவசியமாகும்.