துயரத்தைத் துணையாக்கி... - பெரணமல்லூர் சேகரன்
24 May 2026, 12:02 am

துயரத்தைத் துணையாக்கி... - பெரணமல்லூர் சேகரன்

ஒரு சலவைக்காரர் நான்கைந்து கழுதைகளை வைத்துக்கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். அந்தக் கழுதைகளும் அவர் சொல்வதைப் பிசகின்றி செய்து வந்தன.

நிறைய பொதிகளைச் சுமந்து அவருக்கு உதவி செய்தன. ஒரு நாள் அவரது கழுதைகளுள் ஒன்று அந்த ஊரின் பாழுங்கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

அதிலிருந்து மீள்வதற்கு அது எவ்வளவோ முயற்சித்தது. முடியவில்லை.

தனது கழுதை கிணற்றில் விழுந்து விட்டதை அறிந்த சலவைக்காரர் அங்கு போய் பல விதத்தில் முயற்சி செய்து அந்தக் கழுதையை வெளியேற்றப் பாடுபட்டார். ஆனாலும் முடியவில்லை.

என்ன செய்வது என்று அவர் சோகத்துடனும் வருத்தத்துடனும் இருந்தபோது அவ்வூரைச் சேர்ந்த சிலர் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களிடம் தனது கழுதையை மீட்க உதவுமாறு அவர் வேண்டிக் கொண்டார்.

அதைக் கேட்டு அவர்கள் நக்கலுடன் சிரித்தனர். “போயும் போயும் கழுதைக்காக வருத்தப்படு கிறாயே, வெறும் அழுக்குப் பொதியை சுமந்து செல்வது தானே இது! மேலும் யாரைக் கண்டாலும் பின்னங் காலால் உதைக்க வேறு செய்யும்.

இப்படிப்பட்ட கழுதை உயிருடன் இருந்தால் என்ன இந்த கிணற்றிலே செத்து மடிந்தால் தான் என்ன? பைத்தியக்காரனான நீ இதை உயிருடன் மீட்க ஆசைப்படுகிறாய்” என்று சலவைக்காரை இகழ்ந்து பேசினர்.

அத்துடன் ஒன்று விடாமல் அங்கிருந்த கற்கள் புழுதி மண் மரக்கழிவுகளை அந்தக் கிணற்றுக்குள் ஏளனம் பேசியபடியே வாரி இறைத்தனர்.

கிணற்றுக்குள் இருந்த கழுதையோ, அந்தக் கற்கள் மண்களை எல்லாம் கிணற்றிலிருந்து, தான் மீள்வதற்கான வசதி வாய்ப்பாகவே கருதியது.

சற்று நேரத்தில் அந்தப் பாழும் கிணறு இவற்றால் மூடிவிடவே அந்தக் கழுதை அதிலிருந்து வெளியே வந்து உயிர் பிழைத்தது.

ஊர் மக்களின் தூற்றலையும் கேலி கிண்டலையும் எண்ணி வருந்தி அவர்களால் வீசி எறியப்பட்ட மண் மற்றும் கற்களின் மூடல்களில் அந்தக் கழுதை அமிழ்ந்து போயிருந்தால் அது செத்துப் போய் இருக்கும். ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை

. புத்திசாலித்தனமாக அவற்றைப் பயன்படுத்தியது. கிணற்றிலிருந்து தப்பித்து வெளியே வந்தது. உயிர் பிழைத்தது.

நம் வாழ்விலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நேரும்போது அதனால் வருத்தம் பெற்று அயர்ந்து போய்விடாமல் அதனையே வெற்றிக்கான வாய்ப்பாகக் கருதிப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எதனையும் சாதிக்க முடியும் வெற்றியை பெற முடியும்.