திருச்சி விரைவு செய்திகள்
15 Mar 2026, 4:11 pm

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்திகளை நம்ப வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்

அரியலூர், மார்ச் 15 பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற வதந்தியின் காரணமாக, அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படும் சில்லரை விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. மேலும் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும், வழக்கம் போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் பெட்ரோல், டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம் எனவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தினை தவிர்க்குமாறும் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் அங்கீகரிக்கப்படாத பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது எனவும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதிமன்றத்தில் 3,552 வழக்குகளுக்கு தீர்வு

புதுக்கோட்டை, மார்ச் 14- புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் மாவட்டம் முழுவதும் 13 அமர்வுகளில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 3552 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.15.72 கோடியில் தீர்வும் பிறப்பிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 6 அமர்வுகளும், மாவட்டம் முழுவதும் 13 அமர்வுகளும் நடைபெற்றன. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான க. பூரணஜெய ஆனந்த் தொடங்கி வைத்தார். போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிபதி டி. பன்னீர்செல்வம், கூடுதல் மாவட்ட நீதிபதி என்.எஸ். மீனாசந்திரா, தலைமைக் குற்றவியல் நடுவர் கே.எஸ். பால்பாண்டியன் உள்ளிட்ட நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் முத்தையன், செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மொத்த அமர்வுகளில் 5,827 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. இவற்றில், 3,552 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.15.72 கோடிக்கு தீர்வம் பிறப்பிக்கப்பட்டது. கீரனூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், சார்பு நீதிபதி சி. ராஜேஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. சர்மிஷ்டா, வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 1,440 வழக்குகள் பட்டியலிடப்பட்டு, 228 வழக்குகளுக்கு ரூ.2.31 கோடிக்கு தீர்வு காணப்பட்டு தீர்ப்பாணைகள் வழங்கப்பட்டன.