உயர் சிறப்பு மருத்துவப்படிப்பு இடங்கள் சரண்டர் திமுக எம்பி கண்டனம்
5 Jun 2026, 10:05 pm
<p>உதகை, ஜூன் 5- </p><p>152 உயர் சிறப்பு மருத்துவப்படிப்பு இடங்களை சரண்டர் செய்யும் விவகாரத்தில், தமிழக அரசின் செயல்பாட்டிற்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கண்டனம் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், உதகை வந்த பழங்குடியினர் நலன் நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ள திமுக எம்.பி., வில்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவப்படிப்புகளில் 50 சதகிவித இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை 2020ல் உயர் நீதிமன்ற வழக்கின் போது அரசாணை மூலம் அமல்படுத்தப்பட்டது. இந்த இட ஒதுக்கீடு மாநிலத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், குறிப்பாக மலை பிரதேசங்கள், கடினப் பகுதிகளிலும் பணியாற்ற ஊக்கமளிக்க உருவாக்கப்பட்டது. 2021 இல் திமுக அரசு வந்தபின், அந்த இட ஒதுக்கீட்டை ஆதரித்து உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றது. 2022 இல் இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவடைந்த பிறகு, தேர்வர்கள் இல்லாததால் மீதமான சீட்கள் அகில இந்திய கோட்டாவுக்கு சரண்டர் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் சூழ்நிலை வேறுபட்டது. யாருக்கும் பாதிப்பில்லாத நிலை. ஆனால், 2024-25 நிலவரத்தில், மே 29 அன்று முதல் கட்ட அகில இந்தியா மற்றும் மாநில கலந்தாய்வு நடந்தபோது, அகில இந்திய கோட்டா இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கவில்லை. பர்சன்டைல் குறைக்க மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வை தமிழக அரசு நடத்தியது. அதன் பிறகு 152 சீட்கள் காலியாக இருந்ததால், ஒரு மனுவின் பேரில் உச்ச நீதிமன்றம் அந்த சீட்களை அகில இந்திய கோட்டாவுக்கு சரண்டர் செய்ய உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உரிய முறையில் வாதாடாததே இந்த நிலை. 92 மருத்துவர்கள் இன்னும் சீட்டுக்காக காத்திருக்கும்போது, இந்த 152 சீட்களையும் பிற மாநில மாணவர்களுக்கு செல்ல விடுவது ‘தமிழக வளங்களின் இழப்பாகும்’. இந்த சீட்கள் மாநில வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் உள்ளதால், முதலில் தமிழக மருத்துவர்களுக்கே பயன்பட வேண்டும். தமிழக அரசின் செயல்பாடு கண்டனத்துக்குரியது. எனவே, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், இந்த உத்தரவுக்கு சீராய்வுக்கோரி சீட்களை மீட்டெடுக்க வேண்டும், என்றார்.</p>
