பாஜக தலைவர்கள் எத்தனை பேரும் படையெடுத்து வரட்டும் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்!
12 Apr 2026, 5:30 am

பாஜக தலைவர்கள் எத்தனை பேரும் படையெடுத்து வரட்டும் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி

சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னதுரைக்கு வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை, ஏப். 11 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப். 10) தஞ்சாவூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டு, சனிக்கிழமை புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் வழியில் கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மா. சின்னதுரையுடன் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். இரவு புதுக்கோட்டை ஜே.ஜே. கலை அறிவியல் கல்லூரியில் ஓய்வெடுத்தார்.

மறுநாள் சனிக்கிழமை காலையில் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கை கொடுத்துச் செல்பி எடுத்துத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

பெரிய கடை வீதியிலுள்ள வணிக நிறுவனங்கள், தேநீர் நிலையம், பெட்டிக் கடை உள்ளிட்ட இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். புதிய பேருந்து நிலையம் அருகே அவர் சென்ற போது பேருந்துப் பயணிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பேருந்து களில் உள்ள பயணிகளிடமும் ஆதரவு திரட்டிய முதலமைச்சர், கடை ஒன்றில் தேநீர் அருந்தினார். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து, திமுக வேட்பாளர் கே.கே. செல்வபாண்டியனுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு களைச் சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாகவும் சிறப்பாகவும் உள்ளது. தோல்வி பயத்தின் உச்சத்திற்கு போய்விட்ட எடப்பாடி பழனிசாமி விரக்தியில் மோசமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருந்தோம். தற்போது மக்களின் வரவேற்பைப் பார்க்கும் போது, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்; பாஜக-வைச் சேர்ந்த எத்தனை பேர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் வெற்றி பெறும்.

தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றி உள்ளனர். இது போன்று என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இதற்கு மேலும் பண்ணுவார்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

அதிமுகவை அடகு வைத்து விட்டனர். குத்தகைக்கு விட்டு பாஜக கும்பலுக்கு அடிமையாகிவிட்டனர். அதிமுக என்ற திராவிட கட்சி இப்படி போனதற்காக வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம். நடிகர் உள்ளிட்ட யார் வந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்.

நடிகர் பின்னால் சென்று வித்துக் கள நேரிடுவதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர் பின்னால் செல்லும் இளைஞர்கள் விரைவில் திருந்துவார்கள்” என்று தெரிவித்தார்.