தீபாவளிக்கு முன் தீப்பிடித்த விலைவாசி! காய்கறி மாலையுடன் போராடும் மக்கள்!
5 Nov 2026, 11:38 pm

தீபாவளிக்கு முன் தீப்பிடித்த விலைவாசி! காய்கறி மாலையுடன் போராடும் மக்கள்!

சென்னை, நவ. 5 –தீபாவளிக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள், இனிப்பு, கார வகைகள், புத்தாடைகள், பட்டாசுகள் எனப் பண்டிகைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலையும், இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதனால் நடுத்தரக் குடும்பங்கள் முதல் அன்றாடக் கூலியை நம்பி வாழும் தொழிலாளர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி, ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மக்கள் அமைப்புகள் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

அடுப்படியை உலுக்கும் விலையேற்றம்!

சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வழக்கமாக கிலோ ரூ. 900 முதல் ரூ.1,000 வரை விற்பனையான ஆட்டிறைச்சி தற்போது ரூ.1,100-ஐத் தொட்டுள்ளது. தரமான பொன்னி அரிசி கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை உயர்ந்துள்ளது. 26 கிலோ எடைகொண்ட ஒரு மூடை அரிசி ரூ. 2,200 வரை விற்கப்படுகிறது. 60 ரூபாய் அளவிற்கு விற்ற ஒரு கிலோ அரிசி தற்போது 80 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. தக்காளி, வெங்காயம் கிலோ ரூ. 60 முதல் ரூ. 80 வரையிலும், ஆப்பிள் ரூ. 180 முதல் ரூ. 240 வரையிலும் விற்பனையாகின்றன.

நெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் இனிப்பு, கார வகைகளின் விலையும் கிலோவுக்கு ரூ. 30 முதல் ரூ. 50 வரை அதிகரித்துள்ளது. நூல் விலை மற்றும் போக்குவரத்துச் செலவு உயர்வால் புத்தாடைகளின் விலைகளும் 15 முதல் 20 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. பட்டாசு விலையும் உயர்ந்துள்ளது.இதனால், தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் ஏழை, எளிய குடும்பங்கள் தவித்து வருகின்றன.

உணவகங்களில் விலை அதிகரிப்பு

19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 11 உயர்ந்து ரூ. 3,016.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சிறிய உணவகங்கள் முதல் பெரிய உணவகங்கள் வரை சமையல் செலவு அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் உணவுப் பொருட்களின் விலையிலும் எதிரொலிப்பதால், உணவகங்களில் சாப்பிடும் பொதுமக்களின் செலவும் அதிகரித்துள்ளது.

கடைகளில் கூட்டமில்லை; கவலையில் வியாபாரிகள்

விலைவாசி உயர்வால் பண்டிகைக் கால விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகத் தீபாவளியின்போது மக்கள் கூட்டத்தால் களைகட்டும் மளிகை, ஜவுளி, பட்டாசுக் கடைகளில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை. வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குவதைக் குறைத்துக் கொண்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

தங்கம், வெள்ளி விலையும் உயர்வு

22 காரட் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.2,10,000-ஐ எட்டியுள்ளது. இதனால் தீபாவளிக்கு நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சொந்த ஊர் செல்லவும் கூடுதல் செலவு

தீபாவளிக்கு சொந்தஊர்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் பண்டிகை கொண்டாடத் திட்டமிட்டுள்ளவர்களுக்கும் பயணக் கட்டண உயர்வு சுமையாகியுள்ளது. ரயில்களில் பயணச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளில் சென்னை - மதுரை பயணத்துக்கு ரூ.2,500, சென்னை-கோவை பயணத்துக்கு ரூ.2,400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.விமானப் பயணக் கட்டணமும் அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு ரூ.12,000, திருச்சிக்கு ரூ.14,700, தூத்துக்குடிக்கு ரூ.17,363 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர் செல்ல விரும்பும் நடுத்தரக் குடும்பங்கள் கூடுதல் செலவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காய்கறி மாலையுடன் போராட்டத்தில் மக்கள்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காய்கறிகளை மாலையாக அணிந்துகொண்டு பங்கேற்றது உள்ளிட்ட பல்வேறு நூதன முறைகளில் நடைபெற்ற இந்தப் போராட்டங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன.

வருமானம் உயராத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பயணக் கட்டணங்களும் தொடர்ந்து அதிகரிப்பதால் உழைக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விலைவாசியைக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.