100 நாள் வேலை வழங்க மறுப்பு அந்தியூரில் மாற்றுத்திறனாளிகள் மறியல்
6 Dec 2025, 2:48 pm
<p><strong>100 நாள் வேலை வழங்க மறுப்பு அந்தியூரில் மாற்றுத்திறனாளிகள் மறியல்</strong></p>
<p>ஈரோடு, டிச.6- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், அந்தியூர் ஒன்றியத்தில் வேலையளிக்க மறுக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டப்படி, கிராமப்புற ஊராட்சிகளில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை அளிக்க வேண்டும். இவ்வாறு வேலை பெற விண்ணப்பித்து அடையாள அட்டை பெற்றவருக்கு வேலை அளிக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் வேலை அளிக்கப்படாவிட்டால் நிவாரணம் அளிக்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு வேலை அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் 4 மணி நேரம் வேலை செய்தால் போதுமானது. ஆனால், அந்தியூர் வட்டத்திலுள்ள 16 ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அளிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வெள்ளியன்று முறையிடப்பட்டது. ஆனால், பிற்பகல் 3 மணி வரை காத்திருந்தும், முறையான பதிலளிக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி தலைமையில் அலுவலகம் எதிரில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால், எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளிக்காமல் கலைந்து செல்ல முடியாது என மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.</p>
