உதவித்தொகையை உயர்த்தக்கோரி ஆட்சியரகங்களில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
11 Nov 2025, 6:02 pm
<p><strong>உதவித்தொகையை உயர்த்தக்கோரி ஆட்சியரகங்களில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை</strong></p>
<p>தஞ்சாவூர், நவ.11- மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட 30 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை, காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சி.ஏ. சந்திரபிரகாஷ், பழ.அன்புமணி, சி.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில், தமிழ்நாட்டில் 75 சதவீதத்துக்கு கீழ் ஊனமுடைய மாற்றுத்தி றனாளிகளுக்கு ரூ.1500-ம், அதற்கு மேல் ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,000-மும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. இன்றைய வாழ்வாதாரச் சூழலில், இந்த உதவித் தொகை யானது மாற்றுத்திறனாளிகளின் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்கப் போதுமானதாக இல்லை. அண்டை மாநிலங்களில் ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த உதவித்தொகையே ஆகும். புதுச்சேரி மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,800 வரை வழங்கப்படுகிறது. ஆந்திராவில் சாதாரண ஊனமுற்றோருக்கு ரூ.6,000-மும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10,000-மும், அதிக ஆதரவு தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,000-மும் மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இது நாள் வரை ஒரு ரூபாய் கூட உயர்த்தி வழங்கப்ப டவில்லை. எனவே, தமிழக அரசு ஆந்திராவில் வழங்குவதைப் போல், தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லும்படி காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை, காவல்துறையினர் கைது செய்து செய்தனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.கணேஷ் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், லோகநாதன், கிரிஜா, திருப்பதி, சுரேஷ், லட்சுமணன், அந்தோணி, மார்க்கோஸ், மாலதி, ராதிகா, புவனேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர். மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் ஊனத்தின் தன்மையைக் கணக்கில் கொண்டு ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 என மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையின்றி நூறுநாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன. மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், முற்றுகைப் போராட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. கணேசன் தலைமையில் நடந்த போராட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மகா.புருஷோத்தமன், மாவட்டப் பொருளாளர் ஜி. லெட்சுமி, சங்க நிர்வாகிகள் யூ. ராஜேந்திரன், எம். சொக்கலிங்கம், பாரதிராஜா, டி. கோவிந்தசாமி, சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தில் வழங்குவதைப் போன்று தமிழ்நாட்டிலும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வலியுறுத்தி நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.</p>
