தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நானும் நண்பர் பாரதிராஜாவும்: ஒரு கலைப் பயணத்தின் நினைவலைகள் - தி.வரதராசன்

11 Jun 2026, 8:41 pm
நானும் நண்பர் பாரதிராஜாவும்: ஒரு கலைப் பயணத்தின் நினைவலைகள் - தி.வரதராசன்

நானும் நண்பர் பாரதிராஜாவும்: ஒரு கலைப் பயணத்தின் நினைவலைகள் - தி.வரதராசன்

நானும் என் அன்பு நண்பர் இயக்குநர் பாரதிராஜாவும் படம் வரைகிற ஓவிய நண்பர்கள்! ஆம், ஓவியக் கலைதான் எங்களை நண்பர்களாக ஆக்கியது. தேனி, அல்லிநகரம் பஞ்சாயத்து போர்டு தலைவர் தேர்தலில் என் பெரியப்பா போட்டியிட்டிருந்தார். நான் அவரின் ‘கார்’ சின்னத்தை வெள்ளைத் தாள் ஒட்டப்பட்ட தட்டி போர்டுகளில் வரைந்து கொண்டிருந்தேன். அப்போது, வெள்ளைச் சுவர்களில் எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் ‘கூஜா’ சின்னம் நேர்த்தியாக வரையப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். விசாரித்தபோது, ஓர் இளைஞர் தட்டி போர்டில் அதை வரைந்து கொண்டிருந்தார். “எதை வைத்து இவ்வளவு நேர்த்தியாக வரைகிறீர்கள்?” என்று கேட்டேன். “வீடு கூட்டுகிற விளக்குமாற்றுக் குச்சியை அரையடி அளவுக்கு ஒடித்து, அதன் ஒருபக்கத்து நுனியை பல்லால் கடித்து பிரஷ் போல் ஆக்கி, குருவி நீலக்கலரில் தொட்டு வரைகிறேன்” என்றார் அந்த இளைஞர். பிறகுதான் அவர் பெயர் சின்னச்சாமி என்று தெரிந்து கொண்டேன். இதுதான் நண்பர் பாரதிராஜாவின் இயற்பெயர். பிறகொரு சமயம் — அது சட்டமன்றத் தேர்தல் சமயம். தேனி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளருக்காக நானும் நண்பர் சின்னச்சாமியும் கீரைக்கல் என்ற இடத்தில் நுகத்தடி பூட்டிய இரட்டைக் காளைச் சின்னத்தை சேர்ந்து வரைந்தோம். அவர் அப்பா பெரியமாயத் தேவர் கின்னத்தில் தண்ணீரில் கரைத்த குருவி நீலத்தை ஏந்திப் பிடிக்க, நாங்கள் குச்சி பிரஷால் தொட்டுத் தொட்டு வரைந்தோம். இப்படித்தான் எங்கள் நட்பு உருவானது. சின்னச்சாமி வரையும் பென்சில் டிராயிங் கருப்பு-வெள்ளை போட்டோ போல் தத்ரூபமாக இருக்கும். விக்ரமாதித்யன் படத்தில் நடித்த எம்ஜிஆர்-பத்மினி படத்தை அவர் அழகாக வரைந்தது இப்போதும் என் மனதில் உள்ளது. கீழே பி.சி.சாமி (பெரியமாயத்தேவர் சின்னச்சாமி) என்று எழுதியிருந்தார். நான் சென்னையில் இருந்த சந்தனு சித்திர வித்தியாலயத்திலிருந்து தபால் மூலம் முறையாகச் சித்திரம் கற்ற பாடங்களையெல்லாம் என்னிடமிருந்து வாங்கிப் படித்தார். எங்கள் வீடு ஊரின் தெற்குப்பக்கம்; அவர் வீடு வடக்குப் பக்கம். அவர் அம்மா மீனாட்சி என்னை ‘தெக்குத் தெருவு தம்பி’ என்றுதான் கூப்பிடுவார். 1969-இல் நான் வரைந்து தபாலில் அனுப்பிய எனது முதலாவது அரசியல் கார்ட்டூன் ‘தீக்கதிர்’ வாரப் பத்திரிகையின் முன்பக்கத்தில் வெளிவந்திருந்தது. அதை எடுத்துக்கொண்டு போய் அவரிடம் காட்டியபோது மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிப் பாராட்டினார்.

நாடகக் கலைஞனும் ஸ்ரீதரின் தாக்கமும்

நண்பர் சின்னச்சாமி ஓவியர் மட்டுமல்ல; சிறந்த நாடகக் கலைஞராகவும் இருந்தார். “அல்லி கலா மன்றம்” என்ற குழுவை நடத்தி, கதை, வசனம், இயக்கம் எழுதி, நாடகத்தில் வில்லனாக சிவாஜி கணேசன் பாணியில் நடித்தார். கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும் நாடகம் நடத்தியுள்ளார். இவரது நாடகத்தை மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் ‘ஜனசக்தி’ பத்திரிகையில் பாராட்டி எழுதியிருந்தார். நாடகத்தில் நடித்தபோது அவர் தம் பெயரை ‘பாரதிராஜ்’ என்று மாற்றி, பின்னர் சினிமாவுக்கு வந்தவுடன் ‘பாரதிராஜா’ ஆனார். ஒரு சமயம் தேனி லட்சுமி தியேட்டரில் இயக்குநர் ஸ்ரீதரின் “கல்யாண பரிசு” படம் பார்த்துக் கொண்டிருந்தோம். காதலில் கதாநாயகனின் ஏமாற்றத்தை எரிமலை வெடிப்பது போல் காட்டியபோது, சின்னச்சாமி “ஒண்டர்ஃபுல்! ஒண்டர்ஃபுல்!” என்று திரையரங்கில் உரக்கக் குரல் எழுப்பி பாராட்டினார். இவருக்குள்ளும் ஒரு சிறந்த இயக்குநருக்கான கற்பனைத் திறன் இருப்பதாய் அன்று நான் கருதினேன். பின்னர், சென்னை சென்று கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து சினிமாவின் நுட்பங்களைக் கற்றார். பாரதிராஜாவின் திறமையைப் பார்த்து, “தனது குரு என்று பாரதிராஜா என்னை அழைக்கிறார், ஆனால் உண்மையில் அவர்தான் என் குரு” என்று புட்டண்ணாவே பாராட்டியுள்ளார்.

‘16 வயதினிலே’ தந்த திருப்பம்

பாரதிராஜா இயக்கிய முதலாவது படம் 1977-இல் வெளிவந்த “16 வயதினிலே”. ‘செம்மலர்’ பத்திரிகையில் அதை வெகுவாகப் பாராட்டித் திரைவிமர்சனம் எழுதப்பட்டது. ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையும் 100-க்கு 65 மார்க் போட்டுப் பாராட்டியது. நான் செம்மலர் இதழை எடுத்துக்கொண்டு அல்லிநகரத்தில் உள்ள அவர் வீட்டுக்குச் சென்று தந்தை பெரியமாயத் தேவரிடம் காட்டியபோது, அவர் பூரிப்படைந்தார். 16 வயதினிலே படத்தைப் பாராட்டி நான் எழுதிய கடிதத்திற்குத் தனது புகைப்படத்துடன் எனக்கு பதில் கடிதம் எழுதினார். அவரின் கடிதங்களை இன்றுவரை பத்திரப்படுத்தியுள்ளேன். “அரசியலில் கட்சி மாறும் கலாச்சாரம் உள்ள சூழலில் நீ மட்டும் இத்தனை வருசங்களாக ஒரே கட்சியில் (கம்யூனிஸ்ட் கட்சியில்) இருக்கிறாயே!” என்று ஒரு கடிதத்தில் அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

மண்ணின் வாசனையும் மார்க்சிய அறமும்

சாதி மறுப்பு, மதம் மறுப்பு, காதல் திருமணம் ஆகியவைதான் அவரது படங்களின் கருப்பொருள். “எனக்குப் பழக்கப்பட்ட மொழியில் இந்த மண்ணின் வாசனையோடு தர நினைக்கிறேன்” என்று ‘பேசும்படம்’ (1986) இதழிலும், “கிராமத்து மக்கள் நமக்கு உணவளித்துவிட்டு கால்வயிற்றுக் கஞ்சிக்குப் போராடுபவர்கள்; அவர்களின் பிரச்சனைகளைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று ‘குங்குமம்’ இதழிலும் அவர் குறிப்பிட்டிருந்தார். 16 வயதினிலே முதல் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், புதுமைப்பெண், கிழக்குச் சீமையிலே, வேதம் புதிது, கருத்தம்மா என அவரது பல படங்களும் இதை நிரூபித்தன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (தமுஎச) சார்பில் திண்டுக்கல்லில் மூன்று நாட்கள் “பாரதிராஜா படைப்புகள் ஆய்வரங்கம்” நடத்தப்பட்டது. இந்தியாவில் வேறு எந்தத் திரைப்பட இயக்குநருக்கும் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை. 2010-இல் மதுரையில் அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் நானும் பங்கேற்றுப் பேசினேன். திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தமுஎச கலை இரவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிராஜா பேசும்போது: “விஷயங்களைச் சேகரிப்பதில் இந்த மதுரை மண் இன்னும் மாறவே இல்லை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எந்தத் திசைவழியில் சென்றுகொண்டிருக்கிறதோ அதே திசைவழியில் நானும் சென்றுகொண்டிருக்கிறேன். என்னுடைய ‘வேதம் புதிது’ படத்திற்காக முதன்முதலாக அழைத்து பாராட்டிய அமைப்பு இது” என்று நெகிழ்ந்து கூறினார். அவருக்கு இந்திய ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது உள்பட 7 தேசிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. மாமேதை கார்ல் மார்க்ஸ் தனது ‘மூலதனம்’ நூலின் மூன்றாம் பாகத்தில், “பூமியை அதன் இயற்கை வளங்களை அடுத்து வரும் தலைமுறைக்கு மேம்பட்ட நிலையில் தர வேண்டியவர்களே மனிதர்கள்” என்று கூறுவார். அந்த சமூக நோக்குடன், இளைஞர்களை நல்ல கலைஞர்களாக்கும் நோக்கில் சென்னை தேனாம்பேட்டையில் ‘பாரதிராஜா சர்வதேச திரைப்படப் பயிற்சிக் கல்லூரி’ தொடங்கப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவியரசு வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழா தமிழ்த் திரையுலகின் ஒரு வரலாற்று மைல்கல். கிராமத்து மனிதர்களைத் தன் கலை மூலம் உயர்த்திக் காட்டிய இயக்குநர் இமயத்தின் மறைவு, வேதனை தருகிறது; அவருடனான நினைவுகளை அசைபோடச் செய்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.