இயக்குநர் பாக்யராஜ் காலமானார்!
10 hours before

தமிழ் திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் (73) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய பாக்யராஜுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனை அழைத்து செல்லும் போது வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளனர். அவரது குருவான இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமான சில நாட்களிலே பாக்யராஜ் மரணமடைந்தது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்:

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.

அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைத்துறையில் கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:

ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!

இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ் அவர்கள்.

தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.

சில மாதங்களுக்கு முன்புதான், பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது ரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.

திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.

அவரை இழந்து தவிக்கும் பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.