தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குளத்தில் கொட்டப்பட்ட ரசாயனக் கழிவால் விஷவாயு பாதிப்பு 5 நாட்களாக மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

14 Jul 2026, 9:41 pm
குளத்தில் கொட்டப்பட்ட ரசாயனக் கழிவால் விஷவாயு பாதிப்பு 5 நாட்களாக மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

குளத்தில் கொட்டப்பட்ட ரசாயனக் கழிவால் விஷவாயு பாதிப்பு 5 நாட்களாக மூச்சுத்திணறலால் மக்கள் அவதி கழிவுகளை அகற்ற ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., வலியுறுத்தல்

திண்டுக்கல், ஜூலை 14- திண்டுக்கல் அருகே பள்ளபட்டி ஊராட்சிக்குச் சொந்தமான குளத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட ரசாயனக் கழிவுகளிலிருந்து கடந்த 5 நாட்களாக விஷவாயு வெளியேறி வருவதால், சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், அவற்றை கொட்டியவர்களை கைது செய்ய வேண்டும் என திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வலியுறுத்தியுள்ளார். செவ்வாய்க்கிழமை பள்ளபட்டி ஊராட்சிக்குச் சொந்தமான குளம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சியின் பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பள்ளபட்டி ஊராட்சியில் உள்ள மயானத்தை ஒட்டிய சின்னக் குளத்தில் வெளியூரிலிருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட ரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் பிஸ்மி நகர், ஏ.பி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் துர்நாற்றம் மற்றும் விஷவாயு காரணமாக மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் முகக்கவசம் அணிந்தே ஆய்வு செய்ய வேண்டிய அளவுக்கு துர்நாற்றம் வீசியது.

இரவு நேரங்களில் பொதுமக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கழிவுகளை கொட்டிய வாகனங்களை கண்டறிய காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் கழிவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். முதற்கட்ட தகவலின்படி, அவை எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்ட ரசாயனக் கழிவுகள் எனத் தெரியவந்துள்ளது.

எனவே, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குளத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், மாநகராட்சியின் பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுகளை கொண்டு வரும் வாகனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா, எந்த வகை கழிவுகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பது உள்ளிட்ட விபரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்றும், விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வேடசந்தூர் பகுதியில் குடகனாற்றில் ரசாயனக் கழிவுகளை கொட்டிய வாகனத்தை பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது பாரபட்சமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா.அஜாய்கோஷ், ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் பாக்கியம், சிஐடியு மாவட்டப் பொருளாளர் தவக்குமார், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜீவநந்தினி, ராஜேந்திரன், கில்டாமேரி (மாதர்சங்கம்), உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.