ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்</strong></p>
<p>தஞ்சாவூர், நவ.16- ஒன்றிய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வீடு தேடி வழங்கப்படும் என்று தஞ்சை முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒன்றிய அரசு ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு தொழிலாளர் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் நவ.1 ஆம் தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை அவர்களது வீட்டிலேயே தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக தபால்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது பேஸ் ஆர்டி ஆப் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒருசில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். மேலும், இந்த சேவையை வழங்க அனைத்து தபால் அலுவலகங்களிலும் நவ.1-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன’’ எனக் கூறப்பட்டுள்ளது.</p>
