21 ஆம் நூற்றாண்டின் தரவு மூலதனக் கொள்ளை பன்னாட்டு ஏகபோகங்களின் டிஜிட்டல் காலனியாதிக்கம்!
7 Jul 2026, 10:12 pm

21 ஆம் நூற்றாண்டின் தரவு மூலதனக் கொள்ளை பன்னாட்டு ஏகபோகங்களின் டிஜிட்டல் காலனியாதிக்கம்!

கூகுள் (15 பில்லியன் டாலர்), மைக்ரோசாஃப்ட் (17.5 பில்லியன் டாலர்), அமேசான் (35 பில்லியன் டாலர்) என உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தரவு மையங்கள் (Data Centers) அமைக்க முதலீடுகளைக் கொட்டிக்கொண்டி ருக்கின்றன. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 2035-க்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ-AI) தரவு மையங்களில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் 480 ஏக்கர் நிலத்தில் அதானி-கூகுள் கூட்டு, இந்தியாவின் மிகப்பெரிய ஏஐ (AI) தரவு மைய வளாகத்தைக் கட்டி வருகிறது.

இந்தியாவில் தரவு மையங்கள் அமைக்கும் பணிகள் சில ஆண்டுகளாக வேகம் எடுத்து வருகின்றன. இதை ஊக்குவிக்க மோடி அரசு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 21 ஆண்டு வரி விலக்கு அளித்துள்ளது. 2026-27 பட்ஜெட்டில் நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் தரவு மையங்கள் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங் களுக்கு 2047 வரை வரிச் சலுகை அறிவித்தார். அந்த அறிவிப்பு வந்த பிறகுதான் அதானி குழுமம் தரவு மையங்களில் முதலீடு செய்வதாக அறிவித்தது. அரசுக் கொள்கையும் கார்ப்பரேட்டுகளின் லாப நோக்கமும் கைகோர்க்கும் முதலாளித்துவ இயல்பின் நேரடி வெளிப்பாடு இது. இம்முதலீடு உண்மையில் யாருக்கு லாபம்? யாருக்குச் சுமை?

நவீன காலத்தின் டிஜிட்டல் தொழிற்சாலை

நாம் கூகுள் டிரைவில் சேமிக்கும்போது, யூட்யூபில் வீடியோ பார்க்கும்போது, வாட்ஸ்ஆப்பில் படம் அனுப்பும்போது, செயற்கை நுண்ணறிவிடம் கேள்வி கேட்கும்போது என இணையத்தில் செய்யும் அனைத்துச் செயல்பாடுகளும் இந்தத் தரவு மை யங்களில்தான் செயலாக்கப்படுகின்றன. இணைய வழியாகத் தொலைவில் இருக்கும் தரவு மையங் களில் தரவுகளைச் சேமித்துப் பயன்படுத்தும் இம்முறையே ‘மேகக்கணிமை’ (Cloud Computing) எனப்படுகிறது. இன்றைய உலகப் பொருளா தாரத்தில் தரவுகள் புதிய வகை ‘கச்சா எண்ணெய்’ ஆகவும், ஏஐ (AI) அதனைச் சுத்திகரிக்கும் ஆலை யாகவும் உள்ளன. சர்வதேச அளவில் யார் “கச்சா எண்ணெய்” வர்த்தகத்தைக் கட்டுப்படுத்து கிறார்களோ, அவர்களே அனைத்துத் துறைகளிலும் ஆதிக்க சக்தியாக விளங்குகிறார்கள்.

மாமேதை காரல் மார்க்ஸ் குறிப்பிட்ட “உற்பத்திக் கருவிகள்” என்பதில் இன்று தரவுகளும் ஒரு பகுதியாக மாறியுள்ளன. தொழில்நுட்ப உலகில் யார் தரவு மையங்களைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே எதிர்கால உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் சக்தியாக மாறுவார்கள். 18-ஆம் நூற்றாண்டு தொழிற்புரட்சியின் நூற்பாலைகளைப் போல, இன்று தரவு மையங்கள் டிஜிட்டல் மூலதனக் குவிப்பின் “நிலையான மூலதனமாக” (Fixed Capital) செயல்படுகின்றன. 2026 ஜூன் நிலவரப்படி உலகம் முழுவதும் 11,600-க்கும் மேற்பட்ட தரவு மையங்கள் உள்ளன; இதில் அமெரிக்காவில் 4,300-ம், இங்கிலாந்தில் 540-ம், ஜெர்மனியில் 520-ம், சீனாவில் 360-ம், இந்தியாவில் 300-க்கும் மேலும் தரவு மையங்கள் அமைந்துள்ளன.

2026 பட்ஜெட், உலக மூலதனத்திடம் பாஜக அரசு சரணடைந்ததன் ஆபத்தான அத்தியாயமாகும். “21 ஆண்டு காலத்திற்கான வரி விலக்கு இந்தியாவின் நிலம், மின்சாரம், நீர், மக்களின் தரவுகள் மற்றும் வரிப்பணத்தைத் தொழில்நுட்ப ஏகபோக நிறு வனங்களிடம் தாரை வார்க்கும் செயல்” எனத் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் சங்கமான யுனைட் (UNITE) கடுமையாகக் கண்டிக்கிறது. இந்தியர்களின் தரவுகளை எடுத்துக்கொண்டு, இந்திய மக்களின் மின்சாரத்தையும் நீரையும் பயன்படுத்தி இந்நிறு வனங்கள் செயல்படுகின்றன. ஆனால், இதனால் உருவாகும் மதிப்பும் லாபமும் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, இந்தியாவின் தரவு இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்.

அபரிமித மின் நுகர்வு மற்றும் நீர்ச் சுரண்டல்

ஒரு ஹைப்பர் ஸ்கேல் தரவு மையத்தில் குறைந்தபட்சம் 5,000 சர்வர்கள் இருக்கும். இது ஆண்டுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை நுகரும். சர்வதேச ஆற்றல் முகமையின் (IEA) தகவல்படி, 2024-ல் தரவு மையங்கள் உலகளாவிய மின் விநியோகத்தில் 1.5 சதவீதத்தைப் (415 டெராவாட் மணி நேரம்) பயன்படுத்தியுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது ஆண்டுக்கு 15% வளர்ந்துள்ளது. இந்நிலை 2030-க்குள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 945 டெராவாட் மணி நேரமாக உயரும். (1 டெராவாட் மணி நேரம் என்பது 100 கோடி யூனிட் மின்சாரம் — இது சுமார் 50 லட்சம் வீடுகளுக்கு ஒரு மாத மின்சாரத்திற்குச் சமம்).

இந்தியாவின் தரவு மையங்கள் தற்போது 10 முதல் 15 டெராவாட் மணி நேர மின்சாரத்தை நுகர்கின்றன. இது 2030-க்குள் 40 முதல் 45 டெராவாட் மணி நேரமாக உயரும். ஒன்றிய மின்சார ஆணையத்தின் (CEA) 20-ஆவது ஆய்வறிக்கையின்படி, 2026-27 நிதியாண்டில் உள்நாட்டின் உச்சகட்ட மின் தேவை 277.2 கிகா வாட்டாக உயரும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. இதில் 1-2% (2.77 முதல் 5.54 கிகா வாட்) தரவு மையங்களுக்கே செல்லும். (1 கிகா வாட் என்பது 100 கோடி வாட்). இந்தியா பெரும்பாலும் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களையே பயன்படுத்துவதால், இது காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தும்.

மேலும், இம்மையங்களைக் குளிர்விக்கக் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படு கிறது. இதனால் நிலப்பரப்பின் வெப்பநிலை 2°C முதல் 9°C வரை உயர்கிறது. இதன் விளைவுகள் 10 கி.மீ தூரம் வரை உணரப்படுவதை “தரவு வெப்பத் தீவு விளைவு” (Data Heat Island Effect) என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலகளவில் 34 கோடி மக்கள் இதனால் பாதிக்கப் படுவர். ஒரு 100 மெகாவாட் ஹைப்பர் ஸ்கேல் மையம் ஆண்டுக்கு 250 கோடி லிட்டர் தண்ணீரை (80,000 மக்களின் ஒரு வருடத் தேவை) நுகரும்.

இந்தியாவில் தரவு மையங்களின் நீர் நுகர்வு 2024-ல் 15,000 கோடி லிட்டராக இருந்தது, இது 2030-க்குள் 35,800 கோடி லிட்டராக உயரும். இந்தியாவில் 5 கிகாவாட் தரவு மைய கட்டமைப்பு இயங்கும்போது, தினமும் 3,75,000 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட தரவு மையங்கள் நீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. விசாகப்பட்டினம் மாவட்டம் ஆந்திராவிலேயே குறைந்த நிலத்தடி நீர் கிடைக்கும் பகுதி (2026 ஏப்ரல் நிலவரப்படி 2.12 டிஎம்சி மட்டுமே உள்ளது). இந்த நிலையிலும் கூகுளின் 1 கிகாவாட் தரவு மைய வளாகம் அங்கு கட்டப்படுகிறது. அங்கு கூகுளின் மூன்று வளாகங்கள் ஒவ்வொன்றும் தினமும் 50 லட்சம் லிட்டர் நீரை நுகரும் என அரசாங்க ஆவணங்களே தெரிவிக்கின்றன. ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி ஆவணத்தில் செயல்பாட்டுக் கட்ட நீர் நுகர்வு விபரங்கள் வெளியிடப்படவில்லை.

2021-ல் அமெரிக்காவில் தரவு மையங்கள் 62,000 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தின. 2025-ல் உலகம் முழுவதும் அமேசான் தரவு மையங்கள் மட்டும் 950 கோடி லிட்டர் தண்ணீரை நுகர்ந்துள் ளன. இந்நிறுவனங்கள் தங்களது நீர், மின் பயன்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிப்ப தில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் சட்டத்திலேயே “ரகசியக் காப்பு விதியை” வைத்துள்ளன. தரவு மையங்களின் நுகர்வுத் தரவுகள் “வணிக ரகசியம்” என்ற பெயரில் மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இதே அபாயம் இருக்கிறது.

அறிவுசார் ஏகபோகமும் நிலப்பறிப்பும்

மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகுள், மெட்டா, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் “அறிவுசார் ஏகபோகம்” (Intellectual Monopoly) என்ற புதிய சுரண்டல் வடிவத்தைக் கையாள்கின்றன. பல்கலைக் கழகங்களில் பொது நிதியால் நடந்த ஆராய்ச்சிகள், இணையத்தில் மக்கள் உருவாக்கிய இலவசத் தரவுகள் (Open-source) அனைத்தையும் கார்ப்ப ரேட்டுகள் தனியுரிமைச் சொத்தாக மாற்றி லாபம் ஈட்டுகின்றன. ChatGPT (சாட் ஜிபிடி) போன்ற கருவிகள் இந்தியர்கள் உட்பட கோடிக்கணக்கான மக்களின் எழுத்துக்களைப் படித்துப் பயிற்சி பெற்றன; ஆனால் லாபம் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே செல்கிறது. இலவச அறிவை வைத்து வளர்ந்தவர்களிடம் நமது அறிவை வளர்க்க நாம் பணம் செலுத்த வேண்டியுள்ளது.

இதை “பறிமுதல் மூலம் செய்யப்பட்ட மூலதனக் குவிப்பு” (Accumulation by Dispossession) என மார்க்சின் வார்த்தைகளில் குறிப்பிடலாம். தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டு கள் அரசின் துணையுடன் நிலப்பறிப்பு செய்கின்றன. அமெரிக்காவின் வர்ஜீனியாவில் 15,000 ஆண்டு களுக்கும் மேலாக பமுன்கி ஆற்றங்கரையில் வாழும் பழங்குடி மக்கள், தங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சும் தரவு மையங்களுக்கு எதிராகப் போராடியதால், 2025-ல் மட்டும் 25 திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

சீனாவின் மாற்று வழி: திட்டமிட்ட பொருளாதாரம்

உலக நாடுகள் எதிர்கொள்ளும் இச்சவாலை சோசலிச சீனா முற்றிலும் வேறு விதமாகக் கையாள்கிறது. 2022-ல் சீன அரசு “கிழக்கத்திய தரவு, மேற்கத்திய கணக்கீடு” திட்டத்தின் கீழ், தரவு மையங்களை வளம் குறைந்த கிழக்கு மாகாணங்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறைந்த மேற்கு மாகாணங்களுக்கு மாற்றியது. தரவு மையங்கள் நுகரும் மின்சாரத்தில் 80 சதவீதத்தை 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெற வேண்டும் என கட்டாய இலக்கு நிர்ணயித்தது.

2026 மே மாதம் சீனா, காற்றாலை ஆற்றலில் கடலுக்கு அடியில் இயங்கும் உலகின் முதல் தரவு மையத்தைத் துவங்கியது. கடல் நீரையே குளிர்விக்கப் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் நுகர்வு அங்கு பூஜ்ஜியமாகிறது; நிலப் பயன்பாடு 90% குறைகிறது, மின்சார நுகர்வும் 22.8% குறைவாகும்.

கம்யூனிஸ்டுகளின் பார்வையும் முதலாளித்துவ போலி வளர்ச்சியும்

கம்யூனிஸ்டுகள் தொழில்நுட்பத்திற்கு எதிரான வர்கள் அல்ல. மனிதகுலத்தின் கூட்டு உழைப்பை எளிதாக்கும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி முற்போக்கானது. தொழில்நுட்பம் மனிதர்களைக் கடுமையான உடல் உழைப்பிலிருந்து விடுவிக்க வேண்டும். ஆனால், அதைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களின் வளங்களைச் சுரண்டக் கூடாது. ஏஐ (AI) -ஐக் காட்டி வேலைநீக்கம் செய்யாமல், பணி நேரத்தைக் குறைத்து, முறையான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். “முதலீடு வருகிறது, வேலை வாய்ப்பு உரு வாகும்” என்பது அப்பட்டமான பொய். ஒரு பிரம்மாண்ட தரவு மையம் கட்டுமானம் முடிந்தவுடன் 100-க்கும் குறைவான தொழிலாளர்களை மட்டுமே நியமிக்கும். இது முதலீட்டிற்கு ஏற்ப வேலை வாய்ப்பு உரு வாகாத ‘வேலையற்ற வளர்ச்சி’ (Jobless Growth). சாதாரண மக்கள் பணவீக்கத்தால் தவிக்கும் போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு 21 ஆண்டு வரிவிலக்கு அளிப்பது முதலாளித்துவ வர்க்கக் கொள்கை. விவசாயிகளுக்கு குடிக்கவும், பாச னத்திற்கும் நீர் இல்லை; கார்ப்பரேட்டுகளுக்குக் கோடிக்கணக்கான லிட்டர் நீர் உண்டு. இயற்கை யிலிருந்து மூலப்பொருட்களை எடுத்து மீண்டும் இயற்கைக்குத் திரும்பக் கொடுக்காமல், முத லாளித்துவ உற்பத்தி முறையானது, இயற்கை சுழற்சி யையே துண்டிக்கிறது என மார்க்ஸ் கூறினார். கட்டுப்பாடற்ற இந்நிலை தொடர்ந்தால், இது 21-ஆம் நூற்றாண்டின் ‘டிஜிட்டல் காலனியாதிக்கமாக’ மாறும். எனவே, ஏஐ (AI) நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; அதிக லாபங்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும். மின், நீர் பயன்பாட்டிற்கு வரம்புகள் விதிப்ப தோடு, தரவு உள்கட்டமைப்பில் அரசாங்கமே பொது முதலீடு செய்ய வேண்டும். இந்தியர்களின் தரவுகளைப் பாதுகாக்க வலுவான தரவுச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.