குடிநீர் தட்டுப்பாடு: பெண்கள் சாலை மறியல்
10 Oct 2026, 11:47 pm
<p><strong>குடிநீர் தட்டுப்பாடு: பெண்கள் சாலை மறியல்</strong></p><p>தருமபுரி, அக்.10-செக்கோடி சமத்துவபுரத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.</p><p>தருமபுரி மாவட்டம், பாலக்கோடை அடுத்த செல்லியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட செக்கோடி சமத்துவபுரத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுவரை இப்பகுதியில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை. இதனால் உப்புத்தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த கிராமசபை கூட்டத்தில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வேண்டி மனு வழங்கினர். அதன்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைத்து, சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சனியன்று 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் தருமபுரி - பாப்பாரப்பட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில், பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
