கோவில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளை வெளியேற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தல்
2 Sept 2026, 10:51 pm

கோவில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளை வெளியேற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தல்

தருமபுரி, செப்.2-கோவில் நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை வெளியேற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என அடிமனை பயனாளிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தருமபுரி மாவட்ட 4 ஆவது மாநாடு, தருமபுரி முத்து இல்லத்தில் புதனன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.என்.மல்லையன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் வ.செல்வம் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.அன்பு அறிக்கையை முன்வைத்தார்.

விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், மாவட்டத் தலைவர் எம்.குமார், மாவட்டப் பொருளாளர் ஆர்.சின்னசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34இன்படி, பல தலைமுறைகளாக குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அந்தந்த இடங்களுக்கு நியாயமாக விலையை தீர்மானித்து, அவர்களுக்கு சொந்தமாக்க வேண்டும்.

மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசே உரியத்தொகை செலுத்த வேண்டும். காலங்காலமாக கோவில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் ஏழை விவசாயிகளை, மறு ஏலம் என்ற பெயரில் நிலத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

பல தலைமுறைகளாக அடிமனைகளில் வீடுகள், சிறு கடைகள் கட்டி பயன்படுத்தி வருபவர்களை, ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட

வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஜி.நக்கீரன், செயலாளராக ஆர்.சின்னசாமி, பொருளாளராக ஆர்.சேகர், துணைத்தலைவராக பி.சி.விஜயன், துணைச்செயலாளராக வி.குழந்தைவேல் உட்பட 13 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், நிர்வாகி ஞானசேகர் நன்றி கூறினார்.