‘தர்ம சாஸ்த்ரச் சுருக்கம்’ நூல்
6 Jun 2026, 8:33 pm

‘தர்ம சாஸ்த்ரச் சுருக்கம்’ நூல்

இஃது தஞ்சாவூர் ஜில்லா பாபனாசம் தாலூகா கீழவிடையல் கிராமம் இராமஸ்வாமிஅய்யர் குமாரர் பென்ஷன்டு ரிவினியூ இன்ஸ்பெக்டர் ஆர். முத்துஸாமி அய்யரால் இயற்றப்பட்டது.

இந்த நூல் ரிஷிகள் முனிகள் பெயரிலுள்ள தர்ம சாஸ்திர நூல்களில் உள்ளவற்றையும் ஸ்மிருதி முக்தாபலமெனும் வைத்யநாத தீக்ஷிதீயத்தை அனுசரித்தும் எழுதப்பட்ட நூலாகும்.

இதில் ஆன்ஹிக காண்டத்தில் “சாப்பிடக்கூடாத விஷயங்கள்” எனும் தலைப்பில் பலவிதமான மூடநம்பிக்கை விசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மக்களின் ஆள் மனதில் பதித்த கொடுமையான மூட நம்பிக்கைகள் அனைத்தும் சனாதன நூல்களான தர்ம சாஸ்திர நூல்களிலிருந்து பெறப்பட்டவை என்பதில் சந்தேஹமில்லை.

குறிப்பாக ரிஷிகள் பெயர்களிலுள்ற தர்ம சாஸ்திர நூல்களில் உள்ளவற்றை பிராமணர்கள் இன்றும் பின்பற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலுள்ள தலைப்பில் உள்ள ஒருசில மூட நம்பிக்கை விசயங்களை மட்டும் எழுதுகிறேன், 8 சாப்பிடக்கூடாத விஷயங்கள்: பல்லினால் கடித்து கீழே வைக்கப்பட்டதும், வாயில்போன அன்னத்தின் மிச்சமும் உச்சிஷ்டமெனப்படுவதால் மறுபடி அவைகளை புஜிக்கக்கூடாது.

கையில் அன்னத்தை வைத்துக்கொண்டு புஜிப்பதும், சப்தத்துடன் சாப்பிடுவதும், விரல்களை விரித்துக் கொண்டு சாப்பிடுவதும் கோமாம்ஸபக்ஷணத்திற்கு ஸமானமாகும். ஈர வஸ்த்ரத்துடன் புஜிக்கக் கூடாது. ஒற்றை வேஷ்டியுடன் புஜிக்கக்கூடாது.

தெருக்கதவைச் சாற்றாமலும், சந்த்ரிகையின்(நிலா) வெளிச்சத்திலும், கொள்ளிக்கட்டையின் வெளிச்சத்திலும், ப்ரதோஷகாலத்திலும், நிசியிலும், மாடியிலும், புஜிக்கச்கூடாது. இலையில் ஒன்றும் மீதியின்றி புஜிக்கக்கூடாது.தன்பெண்சாதி பார்த்துக்கொண்டிருக்க புஜிக்கக் கூடாது.

அப்படிப் புஜித்தால் வீர்யமில்லாத பிள்ளை பிறக்கும். ஸ்த்ரீகளுடன் புஜிக்கக் கூடாது.தாய், ஸஹோதிரி, பத்னி, மற்ற எந்த ஸ்த்ரீகளுடனும் புஜிக்கக் கூடாது.

பத்னியானவள் சாப்பிடும்போதும், கொட்டுவாய் விடும்போதும், சரீரஸுகத்திற்கு ஏற்றவாறு உட்கார்ந்திருக்கும்போதும் அவளைப் பார்க்கலாகாது. எக்காளம், இயந்திரம், வண்டி, உரல், செக்கு, ஆலை, சூத்ரன், இவைகளின் சப்தம் கேட்கும்போது புஜிக்கலாகாது.