தாராபுரம் இடைத்தேர்தல்: எதிர்க்கட்சிகளை முடக்குவதா? கம்யூனிஸ்ட் கட்சி வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு
2 hours before

தாராபுரம் இடைத்தேர்தல்: எதிர்க்கட்சிகளை முடக்குவதா? கம்யூனிஸ்ட் கட்சி வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு

தாராபுரம், அக்.4-இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தாராபுரம் சட்டமன்றத்தொகுதியில்எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முடக்கும் வகையில் ஆளும் தவெக அரசு செயல்படுவதாக அரசியல் கட்சியினர் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த வாகனப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்வதற்கான வாய்ப்பை மறுப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் நடவடிக்கை என கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அதிமுக மாவட்டச் செயலாளர் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டதும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டதும் அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் இந்த நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் தேர்தல் பணிகளை முடக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுவதாக அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். தாராபுரம் தொகுதியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தேர்தல் களத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளன. விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, பாசன நீர் பிரச்சினை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆளும் தரப்பின் வேட்பாளருக்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதி

ருப்தியை சமாளிக்க முடியாமல், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அரசியல் கட்சியினர்குற்றம்சாட்டியுள்ளனர். மக்களை சந்திக்க முடியாத நிலையில் எதிர்க்கட்சிகளையும் சந்திக்க விடாமல் தடுப்பதா? என்ற கேள்வி தேர்தல் களத்தில் எழுந்துள்ளது.

தேர்தல் என்பது ஆளும் கட்சிக்கு மட்டும் உரியதல்ல. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கொள்கைகள், தேர்தல் அறிக்கைகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை வாக்காளர்களிடம் எடுத்துச் செல்வதற்கான சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், ஒரு தரப்பினரின் பிரச்சாரத்திற்கு மட்டும் இடமளித்து, எதிர்க்கட்சிகளின்பிரச்சாரத்தை கட்டுப்படுத்துவது தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை பாதிக்கும் என அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பது, முக்கிய நிர்வாகிகளை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட்டு, தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை தேர்தல் நிர்வாகமும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். மக்களின் தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதன் மூலம் தேர்தல் முடிவை மாற்றிவிட முடியாது. இறுதியில் வாக்காளர்களின் தீர்ப்பே வெல்லும் என அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.