வளர்ச்சியா? டபுள் இஞ்ஜின் ஆட்சியிலா?
2 Apr 2026, 3:50 pm
<p><strong>வளர்ச்சியா? டபுள் இஞ்ஜின் ஆட்சியிலா?</strong></p>
<p>டபுள் இஞ்ஜின் ஆட்சி, இரட்டை இஞ்ஜின் ஆட்சி என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக அமைச்சர்கள், தலைவர்கள் தான், வளர்ச்சிக்கு உத்தரவாதம் என்று கூவிக் கொண்டிருந்தனர். இப்போது அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி பலரும் வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகின்றனர். ‘இணக்கமான’ ஆட்சி என்றும் கூறுகின்றனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தினமலர் (2.4.26) நாளிதழ் பேட்டியில்,“மத்தியிலும் மாநிலத்திலும்‘டபுள் இஞ்ஜின்’ ஆட்சி நடந்தால் தான் மாநிலம் வளர்ச்சி பெறும்” என்று கூறியிருக்கிறார். உண்மையில், டபுள் இஞ்ஜின் ஆட்சி நடக்கும் மாநிலங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றனவா? பாஜக தனியாகவும் பிற கட்சிகளுடன் கூட்டணியாகவும் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் வளர்ச்சி பெருக்கெடுத்து பாலும் தேனும் ஓடிக் கொண்டா இருக்கிறது? பாஜக தனியாக ஆட்சி நடத்தும் மாநிலங்களும் அது கூட்டணியாக ஆட்சி நடத்தும் மாநிலங்களும் எத்தகைய வளர்ச்சியைக் கண்டுள்ளன. எதிர்க்கட்சி கள் ஆட்சி நடத்தும் மாநிலங்கள் எத்தகைய முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன என்று பார்த்தால் உண்மை விளங்கும். பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய மாநிலங்களாக உள்ளன. மனித மேம்பாட்டுக் குறியீடுகள், தனிநபர் வருமானம், தொழில்துறை வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. இது எதைக் குறிக்கிறது? வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பின் தங்கியிருக்கும் இத்தகைய மாநிலங் களை பீமாரு (BIMARU) என்று குறிப்பிடு கின்றனர். பீமாரு என்றால் நோயுற்ற என்று அர்த்தம். பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய வற்றையும் இந்த ஆங்கில எழுத்துக்கள் குறிக்கின்றன. பீகார் மாநிலம் மிக ஏழ்மையான மாநிலம். இங்கு 33.76சதவீதம் வறுமை உள்ளது. இது 2025 ஆண்டுக் கணக்கு. இங்கு யாருடைய ஆட்சி நடைபெறுகிறது? மேகாலயாவில் 27.79 சதவீதம் வறுமை உள்ளது. உ.பி., ம.பி., மேகாலயா மாநிலங்கள் குறைந்த வருமானம் கொண்டவை. உ.பி., மாநிலம் வளர்ந்துவிட்டதாகக் கூறி னாலும் கல்வி வளர்ச்சியில் சவால், குறைந்த மனித மேம்பாட்டுக் குறியீடு ஆகியவற்றில் இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. பாஜகவின் டபுள் இஞ்ஜின் ஆட்சிகளின் சாதனையாக இவைதான் உள்ளன. ஆனால் இதற்கு மாறாக, மாற்றாக தென்னிந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளம், ஆந்திரப்பிரதேசம் ஆகியவை தனிநபர் வருமானம் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளன என்பது மறைக்க வோ, மறுக்கவோ முடியாததாக உள்ளது. நிதி ஆயோக் - அமைப்பின் தகவல்படி உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் (GSDP) 15.98 சதவீதப் புள்ளிகளுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே (2024-25) முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல எஸ்டிஜி (SDG) இந்தியா குறியீடு 2023-24இன்படி ‘சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள்’ எனும் பொருண்மையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் கேர ளம் மாநிலம் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது. இந்த தென்னிந்திய மாநிலங்கள் - ஆந்திரா தவிர - அனைத்தும் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்கள் என்பதும் அவை யாவும் பாஜக வினரும் அவர்களின் துதிபாடிகளும் கூறும் ‘டபுள் இஞ்ஜின்’ ஆட்சி இல்லாத மாநிலங்கள் என்பதையும் உரத்துச் சொல்லுவோம். டபுள் இஞ்ஜின் ஆட்சி மாநில மக்களை மத ரீதியாகப் பிரித்து மோதவிடுவதும் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தி வாழ்வாதாரத்தை அழிப்பதும் என புல்டோசர் ஆட்சியாகி அமைதியையும் நல்லிணக்கத்தையும் நல் வாழ்க்கை யையும் தொலைப்பதாகவே உள்ளது. அந்த ஆட்சி, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, வேறு எந்த மாநிலங்களுக்கும் வேண்டாம். அதை தூக்கிச் சுமந்து கொண்டு வரும் அதிமுக - அதன் கூட்டணிக் கட்சிகளை முறியடிப்போம். - ப.முருகன்</p>
