திருச்சி விரைவு செய்திகள்
1 Dec 2025, 5:20 pm

மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர், டிச.1- மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கரூர் மாவட்ட கூட்டுக் குழு சார்பில், கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் க.தனபால் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், எம்பாளய்ஸ் பெடரேசன் திட்ட தலைவர் விஜயகுமார், ஒர்க்ஸ் பெட்ரேசன் திட்டச் செயலாளர் பிரேமா, பொறியாளர் சங்கம் கரூர் திட்ட தலைவர் ம. சரவணகுமார், திட்டச் செயலாளர். கோபி, பொறியாளர் கழகம், திட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் எம்.பால்ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டுகோள்

மன்னார்குடி, டிச.1- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியகடை தெருவில் முற்பகல் 10 மணியிலிருந்து இரண்டு மணி வரை நெருக்கடியான நிலை ஏற்படுவதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். மன்னார்குடி போக்குவரத்து காவலர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், அன்றாடம் முழுநேரம் நிரந்தரமாக காவலர்களின் நியமனம் சாத்தியமில்லை என்றாலும், தினசரி முற்பகல் 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை, மீண்டும் மாலை 4 மணியிலிருந்து, இரவு 7 மணி வரை போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினாலே, போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். அப்போதுதான் மக்களின் நேரம், எரிபொருள் விரயம், சுற்றுச்சூழல் புகை மாசுபாட்டை தவிர்க்க முடியும். எனவே, போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பாபநாசம், டிச.1- தென்னக ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில் நிலையங்களில், தஞ்சாவூர் - கும்பகோணம் இடையே உள்ள பாபநாசம் ரயில் நிலையம் அதிக போக்குவரத்து முக்கியத்துவம் உடையது. இந்த ரயில் நிலையத்தின் அருகில் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்தச் சாலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. தஞ்சாவூர், திருக்கருகாவூர், மெலட்டூர், திட்டை உள்ளிட்ட ஊர், கிராமங்களுக்குச் செல்பவர்களும் இந்தச் சாலை வழியே செல்கின்றனர். புதிய பேருந்து நிலையம், தாலுகா, நீதிமன்றம், பி.டி.ஓ ஆபிஸ், காவல்நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு இந்தச் சாலை வழியே தான் செல்ல வேண்டும். இந்தச் சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரி, தனியார் வங்கி கிளை, மெடிக்கல், மளிகை, ஜூவல்லரி உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், ரயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம், ஏராளமான வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் நிற்கின்றன. ரயில் சென்ற பிறகு போக்குவரத்து சீரடைய பத்து நிமிடமாகிறது. ஆம்புலன்ஸும் சிக்கிக் கொள்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நாளும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் சிரமத்தை உணர்ந்து, இங்கு மேம்பாலம், அல்லது கீழ் பாலம் அமைத்துத் தருமாறு, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.