கூடுதல் ஆதார் சேவை மையங்களை திறக்க வேண்டும்: சிஐடியு வலியுறுத்தல்
1 Oct 2026, 12:33 am

கூடுதல் ஆதார் சேவை மையங்களை திறக்க வேண்டும்: சிஐடியு வலியுறுத்தல்

உடுமலை, செப். 30-உடுமலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இயங்கும் ஆதார் அப்டேட் மையத்தில் நிலவும் கடும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, கூடுதல் ஆதார் சேவை மையங்களை திறக்க வேண்டும் என சிஐடியு உடுமலைப்பேட்டை பொதுத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உடுமலையை சுற்றியுள்ள ஏராளமான கிராமப்பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், தங்களின் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, கைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்யவும், புதுப்பிக்கவும் உடுமலை தலைமை அஞ்சலகத்தையே முழுமையாக சார்ந்திருக்கும் நிலை உள்ளது.

அதிகாலை முதல் நீண்ட வரிசை:மாணவர்களின் கல்வி சார்ந்த தேவைகளுக்காகவும், அரசின் நலத்திட்ட உதவிகளுக்காகவும் ஆதார் அப்டேட் செய்வது அவசியமாக உள்ளது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான கிராமப்புறமாணவர்கள் தங்கள் பெற்றோருடன் அதிகாலை 6 மணிக்கே உடுமலை தலைமை அஞ்சலகத்திற்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது.

அஞ்சலக நுழைவாயில் அருகே ”காலை 8.30 மணிக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கப்படும்” எனச் சிறிய அறிவிப்புப் பலகைவைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் அதிகளவில் பொதுமக்கள் திரளுவதால் டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு மற்றும் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் சூழல் உருவாகிறது. அஞ்சலகப் பணியாளர்கள் காலை 8 மணிக்கு பின்னரே பணிக்கு வரும் நிலையில், அதற்கு முன்பாக வரிசையில் நிற்பவர்களுக்கு முன்னுரிமையை எவ்வாறு சரியாக நிர்ணயிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.கூடுதல் மையங்கள் தொடங்க கோரிக்கை:

அஞ்சலக சேவை என்பது மக்களுக்கு எளிதில் கிடைக்கும் சேவையாக இருக்க வேண்டுமே தவிர, நீண்ட நேரம் காக்க வைக்கும் சிரமத்தை தரக் கூடாது. எனவே, உடுமலை தலைமை அஞ்சலகத்தில் மட்டும் ஆதார் சேவையை முடக்கி வைக்காமல், சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்துக் கிளை அஞ்சலகங்களிலும் நிரந்தர ஆதார் அப்டேட் சேவையை உடனே தொடங்க வேண்டும்.

மேலும், உடுமலை நகரில் கூடுதல் ஆதார் சேவை மையங்களை திறப்பதுடன், கிராமப்புறங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பு ஆதார் முகாம்களையும் நடத்த வேண்டும். பொதுமக்கள் சிரமமின்றி சேவைகளை பெறும் வகையில் மத்திய அரசும், அஞ்சல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு பொதுத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.