தலைநகரில் ஆவேச போராட்டம் நின்று வாட்டவும் நீதி நாட்டவுமான போர்க்குரல் - எஸ்.வி.வேணுகோபாலன்
21 Jul 2026, 9:25 pm

தலைநகரில் ஆவேச போராட்டம் நின்று வாட்டவும் நீதி நாட்டவுமான போர்க்குரல் - எஸ்.வி.வேணுகோபாலன்

தீவிரவாதிகளை வேட்டையாடுவது போல் துப்பாக்கிகளால் குறி வைத்துக் கொண்டிருக்கிறது தில்லி காவல் துறை. துணை இராணுவம் களத்தில் இறக்கி விடப்பட்டு இருக்கிறது. கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுகிறது அதிகார வர்க்கப் படை, ஏதோ கொள்ளைக் கூட்டத்தை வளைத்துப் பிடிப்பதுபோல், லத்தியை ஓங்கி விசிறியபடி பிடிபடும் இளைஞர்கள் உடலில் தனது வீரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது! ஒரு ஜனநாயக உரிமைக்கான போராட்டக் களத்தை அவமதிக்கும் வெறி பிடித்த பூட்ஸ் கால்கள் அந்தப் பூமியைக் குப்பையாக்கிச் சிதறடித்த இரத்தக் களரிக்கு நடுவே தேசிய கொடியை ஏந்தியவாறு எல்லா அடிகளையும் எதிர்கொண்டு உரத்த குரலில் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராடுவோம் என்று முழக்கம் செய்கிறார் ஒருவர்.

அந்த ஒருவரைப் போலவே மற்றவர்கள். மற்றவர்கள் எனில் விரல் விட்டு எண்ணத்தக்க எண்ணிக்கையில் அல்ல, நூறுகளில் கூட அல்ல, ஆயிரங்களில், பல ஆயிரங்களில் ஜந்தர் மந்தரை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றனர் இளம் தலைமுறை நம்பிக்கைத் துளிர்கள். கரப்பான் பூச்சிகள் என்று அருவருப்போடு இந்த தேசத்தின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் உச்சு கொட்டினாரே, ஆம், அதே கரப்பான் பூச்சிகள் தான் தலை நகரில் உலகின் கவனத்தையே ஈர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எங்கே போயின ஊடகங்கள்

2011இல் அன்னா ஹசாரே உண்ணா விரதம் தொடங்கிய அந்த நிமிடத்திலேயே முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் ஒளிப்பதிவுக் கருவிகளை அந்தப் பந்தல் அருகே ஊன்றி வைத்து சிமெண்ட் பூசி நிலை நிறுத்தி வைத்து 24X7 அவரது போராட்டத்தை வழங்கியபடி இருந்தனர். ஊழல் எதிர்ப்பு உத்தமர்கள் எல்லோரும் இப்போது போன திசை தெரியவில்லை. ஊரையே கொள்ளையடித்து ராமன் பெயரில் கோவிலை எழுப்பி அந்தக் கோவில் உண்டியையே கொள்ளை அடித்துக் கொண்டிருப்போருக்கு எதிரான முணுமுணுப்பு கூட இல்லை அந்த வட்டாரங்களில்! அன்றாடம் ஒன்றிய ஆட்சியாளர்களின் அராஜக நடவடிக்கைகளுக்கு எந்த ஓய்வும் இல்லை, ஊடகப் பண்ணையார்களுக்கு அவற்றையெல்லாம் கேள்விக்கு உட்படுத்தவோ, அவற்றுக்கு எதிரான போராட்டங்களை ஒளிப்பதிவு செய்யவோ கருவிகளும் இல்லை, சிந்தனையும் இல்லை. கார்ப்பரேட் நலன்கள் தக்க வைத்துக் கொண்டால் போதாதா என்ன....!

லட்சக் கணக்கில் மாணவர்கள் எழுதும் தேர்வில் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் பயிற்சி மையங்கள். அவற்றின் நலன் காக்கும் வெட்கம் கட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள். திரும்பத் திரும்ப ஒன்றிய அளவில் நடைபெறும் எத்தனையோ தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்த போதும் வெட்கமில்லை. அதன் காரணமாக, எழுதிய தேர்வுகளையே திரும்ப எழுதுங்கள் என்று மாணவர்களை அழைத்துப் பேசவும் வெட்கமில்லை. ஒவ்வொரு கசிவிலும் கோடிகளில் கொள்ளை. ஒவ்வொரு மறுதேர்விலும் இன்னும் கனக்கும் வசூல் பெட்டிகள். இந்த பிரச்சனையைத் தவிர்த்தபடி திங்கள் கிழமை காலை தேசத்திற்கு உரையாற்றிய பிரதமருக்கும் வெட்கமில்லை, கல்வி அமைச்சருக்கும் வெட்கமில்லை.

கடத்தல்துறை!

20 நாளாக உண்ணா விரதமிருந்தார் சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக். திங்கள் கிழமை நாடாளுமன்றம் நோக்கிய பேரணி அவரது தலைமையில் தேசத்தை உலுக்கும் என்றறிந்ததும், சனிக்கிழமை அவரை ஒரு தெருக்கூத்துக் காட்சியில் வேட்டியைக் குறுக்கே உயர்த்திப் பிடித்து ராஜபார்ட் நடிகரை இடம் மாற்றுவது போல, பெரிய வெள்ளைத் துணியைக் குறுக்கே பிடித்துக் ‘கடத்திக்’ கொண்டு போனது காவல் துறை. ஆம், அது எப்படி கைது நடவடிக்கை ஆகும், ஒரு போராளியை அவரது போராட்டக் களத்தின் குறுக்கே நுழைந்து அத்து மீறி அவரை அப்புறப்படுத்தும் செய்கையை எப்படி சட்டப்பூர்வமாகக் கருத முடியும்?

அவரது உடல் நலனுக்கான அடிப்படை அம்சங்கள் நழுவிப் போகுமளவு அவர் நாள்கணக்கில் உணவை மறுத்துக்கொண்டதால் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம் என்கிறது அதிகார வர்க்கம். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே, அவரது உயிர் ஆதாரங்கள் எல்லாம் பத்திரமாகத் தான் உள்ளன, உங்கள் ஆட்சி அதிகாரத்தில் ஜனநாயகத்தின் உயிர் ஆதாரங்கள் தான் ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன என்றார். மருத்துவமனையில் இருந்தபடியில் செய்தியளித்த வாங்சுக், நாளையே பேரணியில் எல்லோரும் இணையுங்கள், என்னைப்பற்றிய கவலை வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அலையலையாக இளைய தலைமுறை போராட்டக் களத்தில் குதித்தது.

நீதி நாட்டுவோம்!

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 93 மாணவ மாணவியர் நீட் தேர்வு முடிவுகள் எதிர்கொள்ள இயலாமல் தற்கொலை செய்து கொண்டனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். பல லட்சம் தேர்வாளர்களது உளவியல், உணர்வியல் பரிதவிப்புகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. பெற்றோர் சந்திக்கும் பொருளாதார பிரச்சனைகள், கடன் சுமைகள், அதன் மீதான உள்மனப் போராட்டங்கள், குடும்ப சிக்கல்கள் எங்குமே பேசப்படாத விஷயங்கள். மையப்படுத்தப்பட்ட தேர்வை நடத்தும் ஒற்றைத் தகுதி அற்ற அமைச்சரவை, அந்தத் தேர்வுகளின் காரணமாகத் தங்களது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி வைத்துக் கொண்டு திண்டாடும் இளம் தலைமுறையின் வாழ்க்கைக்கு எந்தப் பதிலும் வைத்திருக்கவில்லை.

தனது இருக்கையில் பசையைப் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, வேறு கவலைகள் இருக்கக் கூடும். வேறு முன்னுரிமைகள் இருக்கக் கூடும். வேறு யாருக்கோ பதில் சொல்லக் கடமைப்பட்ட இலட்சிய வாழ்க்கையாகக் கூட இருக்கக் கூடும். ஆனால், எங்களுக்கு நீதி வேண்டும் என்று வீதியில் இறங்கி அடி உதை அவமதிப்புக்கு எல்லாம் அஞ்சாது அராஜக அதிகாரத் திமிருக்கு எதிராகத் துணிந்து இன்று தலைநகரில் குரல் கொடுக்கும் இளைஞர்கள் தேசத்திற்கு மிகப் பெரிய செய்தியைத் தெரிவிக்கவே செய்கிறார்கள்.

இன்றைய தலைப்பு செய்திகள், இந்தப் போராட்டம் தான். அதில் எழும் குரல்கள் தான். அந்த ஆவேச முழக்கத்தின் மொழி பெயர்ப்பு இப்படி இருக்கக் கூடும்: ‘நெஞ்சினைப் பிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடோம், நேர்மையற்ற பேர்கள் வீழ நின்று வாட்டுவோம் நீதி நாட்டுவோம்’ !