தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அர்ப்பணிப்பு என்பது...

4 Jul 2026, 9:05 pm
அர்ப்பணிப்பு என்பது...
<p><strong>அர்ப்பணிப்பு என்பது...</strong></p><p>உலகச் சொத்துக்கள் ஒருபுறம், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அட்டை மறுபுறம் என்றால் எதைத் தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு, “உறுப்பினர் அட்டையே போதும், அதிலேயே எல்லாம் அடங்கியுள்ளது” என்றார் ஜோசப் ஸ்டாலின். உலகின் முதல் விண்வெளி மனிதன் யூரி ககாரின் விண்வெளியில் பறந்த சாதனையை விட, தான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனதையே பெருமகிழ்ச்சியோடு அறிவித்தார். தனிச்சொத்துடமை ஒழிக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் அதிகாரம் வரும்போதுதான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும். அதற்கு உறுதுணையாவது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அந்தஸ்து மட்டுமே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் மற்றும் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்ற தலைவர்கள் தங்களது பல கோடி ரூபாய் மதிப்புள்ள குடும்பச் சொத்துக்களை முழுமையாகக் கட்சிக்கும் பொதுநல அமைப்புகளுக்கும் அர்ப்பணித்தனர். “சுண்டு விரலில் உணர்வு உள்ளவரை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடுவேன்” என்று முழங்கிய இ.எம்.எஸ், தன்னை முழுமையாகத் தொழிலாளி வர்க்கக் குணத்திற்கு மாற்றிக் கொண்டவர். வேறு எந்தக் கட்சியிலும் காண முடியாத உன்னதச் செயல்பாடு இதுவாகும். சிறைவாழ்வும் தியாகப் பயணமும் தோழர் பி. ராமமூர்த்தி அலிப்பூர் சிறையில் இருந்தபோது, ஆடைகளைத் துவைக்கப் போதிய தண்ணீர் தராத ஆங்கிலேய அரசின் கொடுமையால், உடைகள் அழுக்காவதைத் தடுக்க அரை நிர்வாணமாகவே சிறைக்குள் வாழ்ந்தார். தோழர் சங்கரய்யா, ஜீவா ஆகியோரின் அர்ப்பணிப்பு வாழ்க்கையை “ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்” என்று சுருக்கமாகக் கூறலாம். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் ஜீவாவுக்குச் சொந்த வீடு இல்லை; கட்சி நிதியை ஒரு பைசா கூடத் தனக்காகப் பயன்படுத்தாதவர். கருங்காலிகளால் குத்தப்பட்ட தோழர் வி.பி. சிந்தன் மருத்துவமனை யிலிருந்து வந்து, “உடம்பில் எஞ்சியுள்ள மீதி ரத்தம் உங்களுக் காகவே” என உழைப் பாளர் களுக்காக முழங்கினார். மாலை சூடிய அன்றே கைதாகிச் சிறை சென்ற தோழர் சுர்ஜித், பல ஆண்டுகள் கழித்து விடுதலை பெற்று வந்தபோதுதான் தன் மனைவியையே அடையாளம் கண்டுகொண்டார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சுர்ஜித், கோவை மாவட்டச் செயலாளரிடம் பேசும்போது, “நாங்கள் ஆங்கிலேய சிறைகளையே பல்கலைக்கழகங்களாக மாற்றித்தான் ஆங்கிலம் கற்றோம்; தாய்மொழியில் தப்பாகப் பேசினால் தான் தப்பு, அந்நிய மொழியைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை” என ஊக்கமளித்தார். கோவையின் பஞ்சாலைத் தொழிலாளி தோழர் கே. ரமணியும் இத்தகைய சிறைப் பல்கலைக்கழகத்தில் படித்து ஆங்கிலப் பேராசிரியர்களே வியக்கும் வண்ணம் பேசியவர் ஆவார். நம் முன்னோர்கள் தங்களின் இளமைக் காலத்தைச் சிறையிலும், தலைமறைவு வாழ்விலும் கழித்துக் கட்சியை வளர்த்துள்ளனர். இவர் களது தியாகம்தான் இன்று சி.பி.ஐ.(எம்) ஆலமரமாக வியாபித் திருப்பதற்குக் காரணம். இன்றைய இளம் கம்யூனிஸ்டுகளிடம் இந்த அர்ப்பணிப்பை கொண்டு செல்வோம்! வர்க்க உணர்வூட்டுவோம்! * ஆர். ஹரிஹரன், கோவை</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.